தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற நெறி முறைகளுக்கும், மரபுக்கும் எதிராக தமிழ்நாடு அரசால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட உரைக்கு மாறாகப் படித்ததால் அந்த எதிர்ப்பு - விளைவு, ஆளுநரே வெளியேறும் நிலை ஏற்பட்டது.
உ.பி.யின் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது திடீரென ஆளுநரே 'திரும்பிப் போ' என சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர் மற்றும் அரசுகளுக்கு இடையே மோதல் நடந்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்க மிட்டதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்தின் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் பட்டேல் அவரது மகள் அரசு நிலத்தை முறைகேடாக தனியார் நிறுவனங்களுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு விற்றதாக எதிர்கட்சிகள் புகார் செய்ததை அடுத்து பதவியில் இருந்து விலகினார். பதவி விலகிய அவரை மத்தியப்பிரதேச ஆளுநராக பதவி கொடுத்து அனுப்பினார் பிரதமர் மோடி. அதன் பிறகு தற்போது உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக பதவியில் உள்ளார். ஆளும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ஆளுநர் செயல்படுகிறார் என்று சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டிய நிலையில் அவருக்கு எதிராக ஆளுநர் உரையின் போது எதிர்க் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்
2014இல் ஒன்றிய அரசின் அதிகாரத்தை பிஜேபி கைப்பற்றிய காலந்தொட்டு எல்லா நெறிமுறைகளும், சட்ட விதிகளும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.
ஆளுநர்கள் ஒன்றிய அரசு எய்யும் வில்லுக்கு அம்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மகாராட்டிரத்தில் ஓர் ஆளுநர் நள்ளிரவு சட்டமன்றத்தைக் கூட்டி, ஆளும் கட்சியைக் கவிழ்க்கத் துணை போன வரலாறு எப்பொழுதாவது நடந்தது உண்டா?
புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கிரண்பேடி ஆடாத ஆட்டமா? ஆளுநர் ஆட்சியே நடைபெறுவது போன்ற அட்டகாசத்திற்கு அளவேயில்லையே.
குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவி விலக நேர்ந்த ஒருவர் பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படுவது எந்த ஊர் நியாயம் - 'பிஜேபி ஊர்' என்று வேண்டுமானால் பெயர் கொடுக்கலாம்.
பிஜேபி அரசு காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நடந்து கொள்ளும் போக்கைப் பார்த்தால் அழகு தமிழோடு அண்ணா சொன்ன அர்த்தம் பொதிந்த வரிதான் நினைவிற்கு வருகிறது.
"ஆட்டுக்குத் தாடி எதற்கு - நாட்டுக்கு கவர்னர் எதற்கு?" என்பதுதான் அண்ணா உதிர்த்த அருந்தமிழ் வாசகம்!
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன உபதேச ஆன்மிகப் பாகவதராக அடிக்கடி தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்.
"தமிழ்நாடு என்று ஏன் அழைக்க வேண்டும்?" என்று, சட்ட ரீதியாக நிறைவேற்றப்பட்ட ஒன்றை எதிர்த்துக் 'கருத்துச்' சொல்லுகிறார்.
திராவிட இயக்கத்தை விமர்சித்து வரும் இந்த ரவி இப்பொழுது மார்க்ஸ் தத்துவத்தை கேலி செய்கிறார்.
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தன்னிச்சையாக மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து, அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யவில்லையா?
மாநிலங்களே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு. 2024இல் மீண்டும் ஒன்றியத்தில் பிஜேபி ஆட் சிக்கு வருமேயானால், ஒரே ஆட்சி என்னும் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிர்வாகத்தை நடத்தக் கூடிய ஆபத்து இருக்கிறது.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுக்கிடையே உள்ள வேறு பாடுகளை ஒதுக்கி வைத்து மீண்டும் பி.ஜே.பி. பாசிச ஆட்சி வராமல் தடுத்திட வேண்டும்! வேண்டும்! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
No comments:
Post a Comment