புறப்பட்டார் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

புறப்பட்டார் தமிழர் தலைவர்

*மின்சாரம்

அண்ணா நினைவு நாளில் அய்யாவின் பிறந்த நகராகிய ஈரோட்டிலிருந்து பிரச்சாரப் பெரும் பயணத்தை இன்று (3.2.2023) தொடங்கி விட்டார் தமிழர் தலைவர்.

40 நாள் தொடர் சுற்றுப் பயணம்! ஈரோட்டில் தொடங்குவதும், கடலூரில் நிறைவு செய்வதும் வரலாற்றின் வைர வரிகள்!

இதுகுறித்து சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சிறப்பாகவே குறிப்பிட்டுள்ளார்:

"தந்தை பெரியார் பிறந்த ஈரோடு, ஆசிரியர் அவர்கள் பிறந்த கடலூர் எனத் திட்டமிட்டிருப்பது - பயணத் திட்டம் மட்டுமல்ல, இதுதான் திராவிட இயக்கத்தின் வழித்தடமாகும். இத்திட்டத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லாத சுயமரியாதை சமதர்ம சமூக நோக்கு இளைஞர்களை உருவாக்க  இந்தப் பயணம் அடித்தளம் அமைக்கட்டும்" என்று வாழ்த்தியுள்ளார் "திராவிட மாடல் அரசின்" நாயகர்.

கடந்த ஓராண்டுக் காலமாக அடுத்தடுத்து அலை பாயும் பணிகள்! பணிகள்!! கரோனா என்னும் கொடு நோய். இரண்டாண்டுகளை கொள்ளையடித்த நிலையில் அந்த நிலுவைப் பணிகளையும் சேர்த்து வட்டியும் முதலுமாகக் கழகத்தின் களப்பணிகள், பிரச்சாரப் பாய்ச்சல் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத கருஞ்சட்டைத் தோழர்களின் ஓய்வறியா - சளைக்காப் பெரும் பணி சரித்திரத்தின் அகண்ட மணியோசையாய், மானமிகு வீரமணி தலைமையிலே ஒலித்துக் கொண்டே இருக்கும்.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் தலையே சுற்றுகிறது.

என்ன செய்வது! மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லையே!

ஆரியம் எப்படி எப்படியெல்லாம் 'அவதாரம்' எடுக்கிறது - பார்ப்பனீயம் எப்படி எப்படியெல்லாம் படம் எடுத்து ஆடி நஞ்சை உமிழ்கிறது!

ஒரே நாடாம்! ஒரே மொழியாம், ஒரே கலாச்சாரமாம், ஒரே மதமாம் - ஹிந்து ராஜ்யமாம் - ராம ராஜ்யமாம்!

இதற்குப் பொழிப்புரை - பதவுரை, கருத்துரையும் தேவையா?

பச்சையாகச் சொல்லப் போனால் பார்ப்பன - பனியா ஆட்சியின் மூலம் நாட்டைப் பார்ப்பனமயமாக மாற்றிக் காட்டுவது.

இனத்தைப் பற்றிப் பேசாதே - பேசினால் இருட்டறைச் சிறை!

பகுத்தறிவைப் பற்றி வாயைத் திறக்காதே! திறந்தால் திறக்கப்படாது சிறைச் சாலையின் கதவுகள்!

பண்பாடு பற்றிப் பேசாதே! பேசினால் உன் பிணத்தைக்கூட இங்கே புதைக்க முடியாது!

மொழியைப்பற்றி மூச்சு விடாதே! மூச்சு விட்டால் உன் மூச்சுக் குழாய் அடைக்கப்படும்.

ஆரியம் - திராவிடம் பற்றி ஆர்ப்பரிக்காதே! ஆர்ப்பரித்தால் அவ்வளவுதான் முடிந்தது உன் கதை!

புத்த மார்க்கத்தை அழித்தவர்கள் நாங்கள் - அந்தப் புத்த மார்க்கத்தைப் புதுப்பித்தவர்கள் நீங்கள் - உண்மைதான் - 

இனி அந்தப் பாச்சா பலிக்காது! சூத்திரர்களை அதிகார பீடத்தில் அமர்த்தி சூத்திரர்களை ஒழிக்கும் ராஜ தந்திரம் எங்களுடையது.

அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொண்டே பஞ்சமர்களுக்குப் பட்டை நாமம் சாத்தியவர்கள் நாங்கள் என்ற வரலாறு உங்களுக்கு மறந்து விட்டதா?

ஒரு நூறாண்டுக் காலம் சுயமரியாதை என்றும், பகுத்தறிவு என்றும், சமத்துவம் என்றும், சமதர்மம் என்றும், பெண்ணுரிமை என்றும், ஆரியம் - திராவிடம் என்றும் பேசிப் பேசி, எழுதி எழுதி எழுச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள்.

இடஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து  உச்சாணிக் கொம்பில் இருந்த எங்களை இறக்கித் தள்ளினீர்கள்!

இப்பொழுது பார்த்தீர்களா? கிரீமிலேயரைக் கொண்டு வந்து விட்டோம். நுழைவுத் தேர்வை (நீட்டை)க் கொண்டு வந்து உள்ளே நுழைய விடாமல் உங்களைத் தடுத்து விட்டோம்.

பொருளாதாரத்தில் நலிந்தோர் என்று கூறி (EWS) உங்களைக் கீழே தள்ளி உங்கள் தலையின் மேல் ஏறி நின்று கல்வி, வேலை வாய்ப்புகளை விழுங்கி முடித்து விட்டோம்!

69 விழுக்காடு இடங்களை ஜெயலலிதா (முதல் அமைச்சர்) பி.வி. நரசிம்மராவ், (பிரதமர்) சங்கர் தயாள் சர்மா (குடியரசு தலைவர்) ஆகிய மூன்று பார்ப்பனர்களைப் பயன்படுத்திக் கச்சிதமாய் முடித்து விட்டார் வீரமணி என்று  துள்ளாதீர்கள்.

அதற்கும் வேட்டு வைப்போம்! உங்களவாள் கையைக் கொண்டே உங்கள் கண்களைக் குத்தும் வித்தையில் கைதேர்ந்த விற்பன்னர்கள் - வேதிய புரத்தார்கள் நாங்கள்!

ஒரு கிழவன் அப்பப்பா - ஒரு முக்கால் நூற்றாண்டு எங்களை என்ன பாடுபடுத்தி விட்டான்! அந்த ஆத்திரம் எங்களுக்குள் அனல் குழம்பாய்க் கொதித்துக் கொண்டு இருக்கிறது.

அதனால்தான் எங்கள் இளைஞர்கள் அந்த ஈரோட்டுக் கிழவனின் சிலையைக் கண்டு கூட சீறி எழுகிறார்கள், செருப்பு மாலை போடுகிறார்கள், காவி சாயம் பூசுகிறார்கள்.

இவற்றை ஏளனமாகப் பார்க்காதீர்கள் - எங்கள் புறப்பாட்டின் பனி(ணி)முனைதான் இது!

அடுத்து அய்ந்தாண்டும் எங்கள் ஆட்சிதான் - அதோடு உங்கள் ஆட்டபாட்டங்களுக்குக் கருமாதி செய்யப் புரோகிதர்களாக அப்பொழுதும் நாங்கள் தான் வந்து, மீதம் மிச்சத்தை உங்களிடமிருந்து சுரண்டித் தீர்ப்போம் - என்ற திட்டத்தோடு  திரிநூல் கூட்டம் தீர்மானமாக இருக்கிறது!

இதனை அனுமதிக்கலாமா? ஆரிய வஞ்சகப் பாம்பு தன் ஆதிக்கப்படத்தை ஆடிக் காட்ட விடலாமா?

நம் இளைஞர்களிடத்தில் ஆரியத்தின் வஞ்சகத்தைத் தோலுரித்துக் காட்டி எழுச்சி பெறச் செய்ய வேண்டாமா?

வன்முறையால் அல்ல - பகுத்தறிவு நன்முறையால்தான்!

ஆண்டான் அடிமை முறை கூடாது என்ற நன்னோக்கத்துடன் தான்! 

பகுத்தறிவுப் பாடம் நடத்துவோம்! நாம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை வகையாகச் சொல்லிக் கொடுப்போம்!

பயிற்சிப் பட்டறைகளை எங்கும் எங்கும் நடத்திக் கொண்டே இருப்போம்!

அஞ்ஞான இருளை அகற்றி, விஞ்ஞான விளக்கை  ஏற்றிட விளக்கவுரைகளை விரிவாக்குவோம்!

பாலியல் வன்கொடுமைக்குப் பெண்கள் இரையாவதை அனுமதியோம்! அனுமதியோம்! பெண்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சியும், துப்பாக்கியும் கொடுங்கள் என்று அரசை வலியுறுத்துவோம்" 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை உயர்த்திப் பிடித்து, பிறப்பில் பேதம் பேசும் மனுதர்மத்தைத் தோலுரித்துக் காட்டுவோம்!

இந்த அறிவியல், மானுட நேயக்காற்றை தந்தை பெரியாரின் மண்ணிலிருந்து இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வீசும்படி மாற்றிக் காட்டுவோம்!

"பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்!" என்பார் தந்தை பெரியார். (குடிஅரசு 11.11.1944).

அனைவருக்கும் அனைத்தும் என்பார்! - நமது ஆசிரியர் பெருமகன்.

கருப்பு மெழுகுவத்திகளாக நம்மை நாம் அழித்துக் கொண்டு மக்களுக்கு ஒளியூட்டுவோம்!

"மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமேயல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் சொல்லிவிட முடியாது" என்றார் தந்தை பெரியார் ('குடிஅரசு' 8.10.1933).

பிரச்சாரம்  - பொருளாதாரம் இரண்டுமே தேவையானவை என்பதை நன்கு ஆய்ந்துதான் அவ்வழியில் நடந்துகொண்டார்  - இயக்கத்தையும் கட்டமைத்தார் தந்தை பெரியார்.

கொள்கைகள் கீழானவை என்றாலும், அவற்றை நிலைநாட்ட சாதுரியமாக 'புத்திசாலி'த்தனமாக காய்களை இன எதிரிகள் நகர்த்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் இளைஞர்கள், மாணவர்கள் நம் இயக்கப் பாசறை நோக்கிக் கிளர்ந்து வருகிறார்கள்.

வினையான் வினையாக்கிக்கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று (குறள் 678).

ஒரு யானையைக் கொண்டு இன்னொரு யானையைப் பிடிப்பது பற்றி குறள் கூறுகிறது.

இந்த இளைஞர்களைக் கொண்டு, மாணவப் பட்டாளத்தைக் கொண்டு பகுத்தறிவு சுயமரியாதை சமதர்மப் பாசறைக்குக் கொண்டு வருவோம்.

கல்விக் கூடங்களில் நம் இயக்கக் கல்வியைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

திருமண விழாவில் அய்ந்தரை மணி நேரம் (வாழ்குடை) பொதுக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் (மயிலாடுதுறை) பேசிப் பேசி மாக்களாய்க் கிடந்தவர்களை - மக்களின் மகத்துவத்தை உணரச் செய்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் நமக்கு அளித்துச் சென்ற விலைமதிக்க இயலா மானமிகு வீரமணி 10 வயதில் மேடை ஏறி இதோ 90ஆம் வயதிலும் பெரும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கழகத் தோழர்களே, இந்தப் பிரச்சாரம் பெரும் விளைச்சலைக் கொடுக்க வேண்டாமா? பெருந்திரளைக் கூட்ட வேண்டாமா?

விழலுக்கு நீர் இறைத்துப் பயன் இல்லை. பயணத்தைப் பயனுள்ளதாகப் பெருக்குவீர் - ஆக்குவீர்!

குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகளைக் கடந்து ஆர்வத்தின் காரணமாகப் புதுப்புது நிகழ்ச்சிகளை இணைக்காதீர்! நமது தலைவர் இளைத்தால், நம் இனமும் இளைக்கும். அவர் உடல் நலனைக் கண்ணின் மணி எனக் கருதி நடந்து கொள்ளுங்கள்!

வெற்றி நமதே! தலைவர் வீரமணியின் முழக்கம் - தூங்கிய தமிழரை எல்லாம் தட்டி எழுப்பும் பெரும் மணி ஓசையாகட்டும்! 

வாராது வந்த மாமணியாம் 'திராவிட மாடல்' அரசின்மீது தூசு விழுந்தாலும் துள்ளி எழுவோம்! துயர் துடைப்போம்!!

நாம் தூசிப்படை!

(Chappers of Miners) 

ஊதுங்கள் சங்கை! 

வெற்றி நமதே!

வீரமணி வென்றிடுக!

வெற்றி மணி ஒலித்திடுக!!

- முத்தமிழ் அறிஞர் கலைஞர்

வாழ்க பெரியார் 

வெல்க திராவிடம்!


No comments:

Post a Comment