ஆந்திர மாநிலம் - குண்டூரில் பிற்படுத்தப்பட் டோருக்கான அனைத்திந்திய ஆணையத்தின் தலைவராக இருந்து ஒன்றிய அரசுப் பணி, கல்வியில் இடஒதுக்கீடு வழங்கிடுவதற்கு பரிந்துரைத்த சமூகநீதியின் நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா நேற்று (12.2.2023) எழுச்சியுடன் நடைபெற்றது. மண்டல் அவர்களின் சிலையினைத் திறந்து வைத்த திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூக நீதிக்கான அடுத்த போர்க் களத்தினைப் பிரகடனப் படுத்தினார்.
மண்டல் சிலைக்கு ஏற்பாடு
நாட்டிலேயே முதல் முறையாக மண்டல் அவர்களுக்கு சிலை எழுப்பிடும் பணியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அமைப்பினர் கடந்த சில மாதங்களாகவே முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மண்டலுக்கு சிலை அமைத்திடும் பணி நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா விற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மண்டல் அவர்களின் சிலையினை திறந்து வைத்திடுமாறு சமூகநீதிப் போராளி களின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிலை அமைத்திடும் குழுவினர் வேண்டிக் கொண்டனர். சிலை திறப்பு விழாவிற்கு நாடு முழுவதும், பல மாநிலங் களிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் தலை வர்கள், சமூகநீதி உணர்வுடன் செயல்பட்டு வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
சிலை திறப்பு விழா
பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா நேற்று (12.2.2023) குண்டூர் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் உள்ள சினி ஸ்கெயர் முனையில் மண்டல் அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது. காலை 11 மணியளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக் குரலுக்கு மத்தியில் திராவிடர் கழகத் தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிகளுக்கிடையில் மண்டல் அவர்களின் சிலையினைத் திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். சிலை திறப்பு நிகழ்வில் ஆந்திர மாநில அரசின் இந்நாள் மேனாள் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் அனைத்திந்திய தலைவர்கள், குண்டூர் மாநகராட்சியின் மேயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு மாநாடு
மண்டல் அவர்களின் சிலை திறப்பிற்குப் பின்னர் குண்டூர் நகரத்திலேயே ஒரு தனியார் மைதானத்தில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புரையினை மண்டல் சிலை அமைப்புக் குழுவின் செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு ஆற்றினார். குழுவின் தலைவரும் ஆந்திர மாநில சட்டமன்றப் பேரவையின் ஆளும் கட்சியின் கொறடாவுமாகிய தங்கா கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.சி. தலைமை உரையினை ஆற்றினார். மாநாட்டின் முக்கிய உரையான தொடக்க உரையினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் தமிழர் தலைவர் ஆற்றிய உரையினை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வழங்கினார்கள். (ஆசிரியர் உரை தனியே காண்க)
மாநாட்டில் முற்பகலில் உரையாற்றிய பெருமக்கள்
தமிழர் தலைவரின் தொடக்க உரையினை அடுத்து ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மேனாள் வருவாய் துறை அமைச்சரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவருமான ரகுராமரெட்டி, அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மேனாள் தலைவர் கேப்டன் டாக்டர் அஜய்சிங் யாதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.
மாநாட்டில் பங்கேற்ற பெருமக்கள்
ஆந்திர மாநில அரசின் சமூகநலத்துறை அமைச்சர் செல்லுபோயின வேணுகோபால கிருஷ்ணா, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிடா மஸ்தான்ராவ், பி.பி. மண்டல் அவர்களின் பெயரன் பேராசிரியர் சூரஜ் மண்டல், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவருமான ஈஸ்வரய்யா மற்றும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய அமைப் பின் தலைவர்கள் பலர் மாநாட்டின் முக்கிய விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சமூகநீதி உறுதிமொழி
மாநாட்டில் பங்கேற்ற முக்கிய தலைவர்களும், கலந்துகொண்ட பல தரப்பட்ட மக்களும், சமூகநீதிப் பயணத்தினை முன்னெடுத்துச் செல்லுவதற்கான உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். உறுதிமொழியினை மாநாட்டு ஏற்பட்டாளர்கள் கூற, மற்ற அனைவரும் எழுச்சியுடன் உறுதிமொழியினை மொழிந்தது கொள்கைப் பூர்வ காட்சியாக இருந்தது.
தமிழர் தலைவர் எழுதிய மண்டல் பற்றிய நூல்
மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களுக்கு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆங்கில நூல் 'Mandal Commission Report & Implementation' (மண்டல் குழு அறிக்கையும் நடைமுறையும்) வழங்கப்பட்டது. உடன் 'The Modern Rationalist'ஆங்கில மாத இதழும் (பிப்ரவரி 2023) வழங்கப்பட்டது.
மாநாட்டிற்கு வந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு
மண்டல் சிலையினை திறந்து வைத்து, மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய தமிழர் தலைவருக்கு விழாக் குழுவின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 12.2.2023 அன்று அதிகாலை சென்னையிலிருந்து ரயில் மூலம் விஜயவாடா வந்த தமிழர் தலைவரை சிலை அமைப்புக் குழுவினர் வரவேற்றனர். சிலை திறப்பிற்குப் பின்னர் நடந்த மாநாட்டில் தமிழர் தலைவர் உரையாற்றிய பின்னர் ஆசிரியருக்குச் சிறப்புச் செய்து, நினைவுப் பரிசினை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
மண்டல் சிலை திறப்பிற்கு தமிழர் தலைவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி சென்றிருந்தனர். மேலும் சிலை திறப்பு நிகழ்விலும், மாநாட்டிலும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் - தாம்பரம் முத்தையன், கோ. நாத்திகன், மோகன்ராஜ், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், மா. குணசேகரன், சீ. லட்சுமிபதி, மாடம்பாக்கம் அ. கருப்பையா கொடுங்கையூர் தங்கமணி - தனலட்சுமி இணையர் மற்றும் தோழர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்
No comments:
Post a Comment