தன் வீட்டுச் சோற
தின்னு புட்டு!
தன் வீட்டு வேலையை
போட்டுவிட்டு!
கருப்புச்
சட்டையை
மேல போட்டுக்கிட்டு!
ஊராரின்
ஏச்சையும் பேச்சையும்
காதில் கேட்டுக்கிட்டு!
தந்தை
பெரியாரின்
இலட்சியங்களை
வென்றெடுக்க!
தனது
நெஞ்சை நிமிர்த்தி
தோளை உயர்த்தி!
சிங்கம்போல்
வீரநடை போட்டுக்கிட்டு!
அதோ! போகிறானே..!
அவன் தான்
கருப்புச் சட்டை.!
மக்கள்
மானமும் அறிவும் பெற,
தன் மக்களை
மறந்து விட்டு!
தன் மானத்தையும்
மறந்து விட்டு !
இரவு பகல் பாராமல்
இனமான வேட்கையோடு!
ஈடில்லா உழைப்போடு!
ஈரோட்டுப் பாதையிலே
இதோ! போகிறானே..!
அவன் தான்
கருப்புச் சட்டை!!
காசு
பணம் வேண்டாம்!
பட்டம் பதவி வேண்டாம்!
பாராட்டும் புகழும்
வேண்டாம்!
பிரதிபலன் எதுவும்
வேண்டாம்! என்பான்..!
பெரியாரின்
பகுத்தறிவு ஆயுதத்தை
தனது மூளையில்
ஏந்தியபடி
அதோ போகிறானே..!
அவன் தான்
கருப்புச் சட்டை!
தன்னை
பெரியாரின்
பிள்ளை என்பான் !
கடவுளே இல்லை
என்பான்!
கடவுளை நம்பும்
மக்களுக்கு
காலமெல்லாம்
உழைத்து நிற்பான்!
ஜாதி
இல்லை என்பான்!
சாஸ்திரம்
இல்லை என்பான்!
நீதியை நிலைநாட்ட
வீதியில் இறங்கி நின்று
வீறு கொண்டு
போரிடுவான்!
மக்களை
வெறியூட்டும்
மதங்கள்
வேண்டாம் என்பான்! மனிதனை
நெறியூட்டும் மனிதநேயமே
வேண்டும் என்பான்!
தலை தாழ்ந்த
தமிழ் மக்கள்
தலை நிமிர்ந்து
வாழ்ந்திடவே
தன்மான தடியெடுப்பான்!
தந்தை
பெரியாரின் தத்துவத்தை
நிலை நிறுத்திக்
காட்டிடவே
சமூக நீதி
கொடி பிடிப்பான்!
பிறருக்கு
ஒளிகொடுக்க,
தன்னையே
பலி கொடுத்து!,
உருகும்
மெழுகுவத்தியாய்!
பெருகும்
புன்னகையோடு!
அதோ! போகிறானே..!
அவன் தான்
கருப்புச் சட்டை...!!
கவிஞர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment