மதங்கள் மாறுபட்டாலும், மனங்கள் ஒன்றுபட்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு! நாங்கள் கொள்கைப் பட்டாளம்; கூலிப் பட்டாளங்கள் அல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

மதங்கள் மாறுபட்டாலும், மனங்கள் ஒன்றுபட்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு! நாங்கள் கொள்கைப் பட்டாளம்; கூலிப் பட்டாளங்கள் அல்ல!

இராமேஸ்வரம், தேவகோட்டையில் தமிழர் தலைவர் இன எழுச்சி உரை!

இராமேஸ்வரம், பிப். 27 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம்’, ’மறுபடியும் சேது சமுத்திரத் திட்டம்’ ஆகிய தலைப்புகளில் தமிழ்நாடெங் கும் நடைபெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் இராமேஸ்வரம், தேவகோட்டை பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

இராமேஸ்வரத்தில் தமிழர் தலைவர்!

இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு, 26.02.2023 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு ,திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.வ.அண்ணாரவி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத் தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் உரையாற்றிய பின்னர், நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திராவிட மாடலை 

யாராலும் பெயர்க்க முடியாது!

ஆசிரியருக்கு முன்னதாக உரையாற்றிய இராமேஸ் வரம் நகர் மன்றத் தலைவர் நாசர்கான், ஆசிரியரின் பழைய, இனிய நினைவுகளைக் கிளறிவிட்டிருந்ததை இலேசாகத் தொட்டுப் பேசினார். அதாவது, ’1982 இல் நடந்த பேரணியையும், அந்த பேரணி முடிந்து ஒரு அரங்கத்தில் சமூக நீதி மாநாடு நடந்ததையும்; அன் றைக்கு மாணவராக இருந்து அந்தப் பேரணியிலும், மாநாட்டிலும் கலந்து கொண்டவர்தான், இன்றைக்கு இராமேஸ்வரத்தின் நகர்மன்றத் தலைவராக இருக்கிறார் என்பதை அறிந்தேன். அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தொடங்கினார். 

அருகில் அமர்ந்து ஆசிரியர் பேசுவதை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த நாசர்கான், இருக்கையிலிருந்து இலேசாக எழுந்து ஆசிரியருக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்து, அமர்ந்து மீண்டும் ஆசிரியரின் வகுப்பை கவனிக்கத் தொடங்கினார். மக்கள் கைகளைத் தட்டி ஆசிரியர் கூற்றை ரசித்தனர். ’இந்த நகரம் ஒரு நல்ல நகரத் தந்தையை பெற்றிருக்கிறது. காரணம், அவர் தி.மு.க.வில் பெற்ற பயிற்சி’ என்று தொடர்ந்தார். இதுதான் திராவிட மாடல்! இதை அசைக்கலாம்; இதைப் பெயர்க் கலாம்; இதைத் தடுக்கலாம் என்று யாரும் நினைக்காதீர் கள். அன்றைக்கு மாணவர்களாக இருந்தாலும், இந்த ஊருக்கே வழிகாட்டக் கூடியவர்கள்தான் இந்த இயக் கத்தைச் சார்ந்தவர்கள். இது 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று முடித்தார். நாசர் கான் மீண்டும் ஆசிரியரைப் பார்த்து அமர்ந்தபடியே உணர்ச்சிவயப் பட்டு கைகூப்பி வணக்கம் செலுத்தினார். மக்களும் தன்னிச்சையாக பலத்த கைதட்டல்கள் மூலம் திராவிடர் இயக்கத்தின் அருமையை, பெருமையை அங்கீகரித் தனர்.

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

தொடர்ந்து, சமூக நீதியின் தேவையை 'அனைவருக் கும் அனைத்தும்' என்பதைப் பற்றி விவரித்து பேசும் போது மறுபடியும் நாசர்கான் பேசிய ஒரு சொற்றொடரை எடுத்துக்காட்டிப் பேசினார். ’அதாவது, வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த நாசர்கானை சுட்டிக்காட்டி, ‘இவர் பேசும்போது சொன்னார், சிகாமணி மாமா அவர்களே என்று, இங்கே மாமா, மச்சினன், தம்பி, அண்ணன்! அவ்வளவுதான். மதங்கள் மாறுபடலாம்; மனங்கள் ஒன்றுபட்ட சமுதாயம் நம்முடைய சமுதாயம்! இங்கே இசுலாமியத் தோழர்கள் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இப்படி உத்தரப்பிரதேசத்தில் இருக்க முடியுமா? ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் பலத்த கைதட் டல்கள்  எழுந்து அடங்கின. இன்னமும் வேற்றுமைப்படுத் துகிறார்களே, அது கூடாதுன்னு சொல்லத்தானே நாங்கள் வருகிறோம் என்று முடித்தார். கைதட்டல்கள் தொடர்ந்தன. மதம் தொடர்பாக பேசிக்கொண்டே வந்தவர், ஜாதியைப் பற்றி பேசத் தொடங்கினார். அதற்கு மனுதர்மம் புத்தகத்தை கையில் எடுத்து மக்களுக்கு காட்டியபடி, ’இதோ, மனுதர்மம். எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு படிப்பைக் கொடுக்கலாகாது’ “என்று எழுதி வைத்திருக்கிறானே இதில்” என்று கூறிவிட்டு, ”இதை மாற்றிக் காட்டியதுதானே திராவிட மாடல் ஆட்சி!” என்றதும் பலத்த கைதட்டல் எழுந்தது. 

தொடர்ந்து பாலியல் நீதி பற்றி பேசத் தொடங்கி, “பெண்களுக்கு சொத்துரிமை வழங்க புரட்சியாளர் அம்பேத்கர் முயன்று தோற்றுப் போனார். கலைஞர் வந்துதானே சட்டம் செய்து பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினார். அதற்குப் பிறகு தி.மு.க. அங்கம் பெற்ற யு.பி.ஏ. அரசுதானே இந்தியா முழுமைக்கும் பெண் களுக்கு சொத்துரிமை வழங்கியது. இதற்கு அடிப்படை 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் கொண்டு வந்த தீர்மானம் தானே?” என்று கேட்டு, மக்களுக்குள் திராவிடர் இயக்கத்தின் சாதனைகளை ஆழமாக விதைத்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் கல்விக் கட்டமைப்பு காரணமாக இப்போது ஏற்பட்டிருக்கும் சிறப்பான மாற்றங்களை ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளை சொல்லிக் கொடுத்தார். இதை மாற்றத்தானே ‘நீட்’, ’கியூட்’ ஆகியன கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்று சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தையும் எடுத்துரைத்தார். பிறகு சேது சமுத்திரத் திட்டம் பற்றி விளக்கி, இறுதிவரை போராடுவோம்! வெற்றி பெறுவோம்! வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. நகர கழக செயலாளரும் நகர் மன்றத் தலைவருமான நாசர்கான், நகர்மன்ற துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, ம.தி.மு.க. பொறுப்பாளர் கெவின் குமார், தி.மு.க. நகர துணை செயலாளர் சத்தியமூர்த்தி, வி.சி.க. தொகுதி செயலாளர் அற்புதக்குமார், ம.ம.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரகீம், ராமநாதபுரம் நகர தலைவர் அசோகன்,  மகளிரணி பொறுப்பாளர் சி.கிருஷ்ணவேணி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முடிவில் நகர செயலாளர் மைக்கேல் நன்றி கூறினார்‌. பின்னர் ஆசிரியர் மேடையிலேயே பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு இரண்டு மணி நேரம் பயணம் செய்து, தேவகோட்டைக்கு வந்து சேர்ந்தார். 

தேவகோட்டையில் தமிழர் தலைவர்!

தேவகோட்டை அண்ணா அரங்கில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கு.வைகறை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினரும் பெரியார் அறக்கட்டளை உறுப்பினருமான சாமி. திராவிடமணி, மண்டல செயலாளர் மகேந்திரராசன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தேவகோட்டை நகர செயலாளர் வழக்குரைஞர் முத்தரச பாண்டியன், மாநில தொழிலாளரணி செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மு.சு.கண்மணி இணைப்புரை வழங்கினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

வயது இடைவெளி இல்லாத லட்சிய இயக்கம்!

முன்னதாக தேவகோட்டையில் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தோழர்களை சந்தித்தாலே, அவரது உற்சாகம் கூடிப் போகிறது. அதே உணர்வுடன் மேடையேறி மக்களைப் பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்து அமர்ந்தார். அவர் பேசும் போது, ''தேவகோட்டை எனக்கு புதிதல்ல. பலர் இடையில் வருவார்கள், செல்வார்கள். நாங்கள் எப்போதும், பல ஆண்டுகளாக வந்துவிட்டுப் போகிறோம். காரணம், நாங்கள் கொள்கைப் பட்டாளம்; கூலிப்பட்டாளம் அல்ல” என்று அதிரடியாகத் தொடங்கினார். மக்களும் அதிரடியாகவே கைகளைத் தட்டினர் அதிலென்ன சந்தேகம் என்பதைப்போல! தொடர்ந்து சாமி.திராவிடமணி ஆசிரியர் மேடைக்கு வந்து அமர்ந்தபோதே பழைய நாளிதழ்களின் சேகரிப்புகள் சிலவற்றை ஆசிரியரிடம் கொடுத்து, அதுகுறித்து சில தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தார். அதையொட்டி சில முக்கியமான வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, “என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு பகுதி, ஒரு நகரம் இந்த தேவகோட்டை! அதுபோலவே இங்கு நடந்த திராவிடர் மாநாடு! என்னால் மறக்க முடியாது. சாமி.திராவிடமணி அவர்கள் ஒவ்வொரு துண்டறிக்கையையும் சாமி அவர்கள் காலத்திலிருந்தே தொகுத்து வைத்திருக்கிறார்கள். அதில் 1961 இல் நடைபெற்ற மாநாட்டில் நான் தலைமை தாங்கி நடத்தக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இளைஞர்களுக்கு இது தெரியாது. சலசலப்பு காட்ட நினைப்பவர்களுக்கு இது புரியாது” என்று பீடிகை போட்டுவிட்டு, ”அந்த மாநாட்டிலே தலைவராக என்னை தந்தை பெரியாரே முன்மொழிந்தார். எனக்கே அதிர்ச்சி! எனக்கென்ன அதற்குத் தகுதி என்று எண்ணினேன். எனக்கும், தந்தை பெரியாருக்கும் 55 ஆண்டு இடைவெளி! இதை எதற்காக சொல்கிறேன் என்றால், இந்த இயக்கம் வயது இடைவெளி இல்லாத கொள்கை லட்சிய இயக்கம்! என்றார். 

எல்லோருக்கும் சமூகநீதி கேட்பது குற்றமா?

தேவகோட்டையில் கழகத்தை கட்டியமைக்க பணியாற்றிய நகரச் செயலாளராக இருந்த ராமசாமி, தலைவராக இருந்த பி.பி. வீரப்பா - அவர் நகரத்தார்; செட்டியார். நாங்கள் அதை எடுத்துவிட்டுச் சொல்லுகிறோம் - சிவசூரியன், சூறாவளி லட்சுமணன், டெய்லர்கள் முத்துசாமி, சீனிவாசன், ஜெகநாதன், இந்தியன் வங்கி சிவசுப்பிரமணியம், அதே போல பகுத்தறிவாளர் கழக அமைப்பிலிருந்து தீவிரமாக பணியாற்றிய பேராசிரியர் இறையனார், டாக்டர் சுப்பிரமணியம், இளங்கீரன், கோட்டூர் சக்தி, மு.சு.பெருவழுதி, நம்முடைய கண்மணி அவர்களின் தந்தையார் சுந்தரமூர்த்தி, கமலம் செல்லதுரை, சீனி அருளன் போன்ற அன்றைய தோழர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து, இந்த இயக்கத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைத்து, “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல இந்த இயக்கம்” என்றதும், மேடையிலும் மேடைக்கு எதிரில் இருந்தவர்களும் ஒன்றாக கைதட்டி ஆசிரியரின் கூற்றை ஆமோதித்தனர். 

தொடர்ந்து, “எல்லோருக்கும் சமூகநீதி கேட்பது குற்றமா?” என்றொரு கேள்வியை முன்வைத்து, சுமத்தப்பட்ட அந்தக் குற்றத்துடனேயே, ஒரு எம்.பி.கூட இல்லாத தந்தை பெரியார் முதல்  அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு காரணமாக இருந்ததையும், பெரியாருக்குப் பின்னால் மண்டல் பரிந்துரையை அமல்படுத்த மேற்கொண்ட பெரும் போராட்டங்களையும், அதன் விளைவாக கடந்த 12 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள குண்டூரில் நடைபெற்ற பி.பி.மண்டல் அவர்களின் முதல் முழு உருவச் சிலையை திறந்து வைக்க, தான் அழைக்கப்பட்டதையும், தமிழ்நாடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெற்றுள்ள முன்னேற்றங்களையும் பட்டியலிட்டு, ஆள்வது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் சமூகநீதி தத்துவத்திற்கு எதிராக செயல்பட முடியாது” என்று முடித்தார். காத்திருந்த மக்கள் கைகளைத் தட்டித்தீர்த்துவிட்டனர்.

மோடியின் டபுள் இஞ்சின் படுகிறபாடு இருக்கே?

பார்ப்பனியம்தான் நமது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்றாலும், சேது சமுத்திரத் திட்டத்தை பொறுத்தவரை அந்த பார்ப்பனியத்தை செயல்படுத்திய மூன்று பார்ப்பனர்களான மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா, அரசியல் புரோக்கர் சுப்பிரமணியசாமி, 'துக்ளக்' ஆசிரியராக இருந்த சோ.ராமசாமி ஆகியோர், ஏன்? எதற்காக? எப்படி? லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய, சேது  சமுத்திரத் திட்டத்தை நிறுத்தினார்கள் என்பதை துல்லியமாக அம்பலப்படுத்தினார். எப்படித் தடுத்தாலும் சிறிது காலத்திற்குப் பிறகு திராவிடர் இயக்கம்தான் வெற்றி பெறும் என்பதைச் சுட்டிக்காட்ட, காங்கிரஸ் காரிய கமிட்டியில், அதன் சட்டத்தில், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க திருத்தம் செய்யப்பட்டுள்ளதை சொல்லி, இதற்காகத்தான் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டதை எடுத்துரைத்து, பெரியார் எப்போதும் வெற்றி பெறுவார்! என்றார் அழுத்தம் திருத்தமாக.  ’ஆம்’ என்றனர் மக்கள் தங்கள் கைதட்டல்கள் மூலம். 

தொடர்ந்து பெண்கள் கல்வி பற்றிய திராவிட இயக்கத்தின் பணிகளைப் பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் பெண்கள் உரிமை பெற்று இருப்பதை சொல்லி, மோடியின் டபுள் இஞ்சின் ஆளும் மத்திய பிரதேசத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அங்கு போக மாட்டேன். என்னை நரபலி கொடுக்க தனது சிற்றன்னை காத்திருக்கிறார். தமிழ்நாடுதான் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதி உள்ளது என்று நீதிமன்றத்தில் சொன்னதை எடுத்துரைத்து, இந்த டபுள் இஞ்சின் படுகிற பாடு இருக்கே என்று சிரித்தார். பதிலுக்கு மக்களும் சிரித்தனர்.  சுற்றுப்பயணத்தின் மற்ற நோக்கங்களைப் பேசி, வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று கூறி உரையை நிறைவு செய்தார். 

முன்னதாக இராமேஸ்வரத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் ஹிந்து முன்னணியைச் சேர்ந்த 13 பேர் கழகக் கூட்டம் நடைபெறக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாளிதழ்களில் செய்தி நேரம், இடம் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலரும் மேனாள் அமைச்சருமான மு.தென்னவன், கல்லல் ஒன்றிய தி.மு.க. மேனாள் செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான கரு.அசோகன்,  நகர்மன்ற உறுப்பினர் ஜாகீர் உசேன், ம.தி.மு.க. கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன், சி.பி.அய். மாவட்ட குழு உறுப்பினர் சேதுராமன், சி.பி.எம். நகர செயலாளர் அஜீஸ் கான், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், வி.சி.க. தொகுதி செயலாளர் இராஜேந்திரன்,  மாவட்ட கழக துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் சனவெளி முத்தழகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய அமைப்பாளர் ஜோசப் நன்றி கூறினார். 

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.

அண்ணா அறிவாலயத்திலிருந்து பறந்த உத்தரவு!

ஆசிரியர் அய்யா அவர்களே, நான் கடந்த 10 நாள்களாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நேற்று (25.2.2023) மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது. ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் இடைத்தேர்தல் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்ன போது, உடனடியாக இராமேஸ்வரம் சென்று, அய்யா அவர்களுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்து, பொதுக்கூட்டம் முடியும் வரையில் உடனிருந்து அவரை அனுப்பி வையுங்கள் என்று தலைமைக் கழகத்தின் உத்தரவின் பேரில் நான் இரவோடு இரவாக புறப்பட்டு இங்கு வந்திருக்கின்றேன். 1982 ஆம் ஆண்டு அய்யா ஆசிரியர் அவர்கள், இராமேஸ்வரத்தில் சமூக நீதி பேர ணியை நடத்தினார்கள். அப்போது நான் 10 ஆம் வகுப்பு மாணவன். இன்றைக்கு 2023 இல் அய்யா அவர்கள் இராமேஸ்வரம் வருகை தந்திருக்கிறார்கள். நான் இராமேஸ் வரம் நகர் மன்றத் தலைவராக இருக்கிறேன். (பலத்த கைதட்டல் - ஆசிரியர் கவனமாக அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்) எனது தந்தை சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர். இந்தப் பகுதியில் திராவிடர் கழகக் கொள்கை வித்தூன்ற காலமெல்லாம் உழைத்தவர். அய்யா ஆசிரியர் அவர்கள் 1982 இல் இராமேஸ்வரம் வருகின்ற போது இங்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்த நேரம். ரயில்வே நிலையத்திலிருந்து அய்யா அவர்களை ரிக்‌ஷாவில் உட்கார வைத்து கிட்டத்தட்ட 1000 பேர் அணிவகுக்க அவரை மாநாட்டு அரங்குக்குக் கொண்டு வந்து சமூக நீதி மாநாட்டை நடத்திக் காட்டியவர்கள் நாங்கள் என்பதை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே அய்யா அவர்களே! திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்பதை முத்தமி ழறிஞர் கலைஞர் அடிக்கடி சொல்வார். அந்தக் கொள் கையை நாங்கள் எங்கள் இதயத்தில் ஏந்தி, எங்கள் உயிர் இருக்கும் வரை அதை செயல்படுத்திக் காட்டுவோம்.

- நகரத் தந்தை நாசர் கான்

இராமேஸ்வரம், 26.02.2023


காவிகளே உங்களுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்!

''காவிச் சொந்தங்களே திரளுவீர்கள்'' என்று எழுதி போடுகிறீர்களே, நீங்கள் திரண்டால் நாங்கள் என்ன ஓடி ஒளிந்து கொள்வோமா? இதுவரையிலும் எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள். எங்கள் மீது எந்தக் குப்பையை நீங்கள் வீசினாலும், அவற்றையெல்லாம் எங்கள் கொள்கைக்கு உரமாக்கிக் கொண்டு வளர்வதுதான் இந்த இயக்கத்தின் வரலாறு! அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். (பின்னாலிருந்து பிராட்லா கொடுத்த கைபேசியைப் பார்த்து படிக்கிறார்) ’தேவ கோட்டையில் அண்ணா அரங்கத்தில் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டத்தில் நாம் வணங்கும் தெய்வங்களைப் பற்றி தவறுதலாக ஏதாவது பேசினால் கூட்டத்தை நடத்த விடமாட்டோம்'' என்று வாட்ஸ் அப்பில் பதிவிடுகிறார்கள்;

என்னய்யா தெய்வத்துக்கும், உனக்கும் காப்பிரைட்டா? 

நாங்கள் பேசக்கூடாதா? எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. நாங்கள் மனிதர்களைப் பற்றி கவலைப்படு கிறவர்கள்! கடவுளை மற! மனிதனை நினை! என்று சொன் னவர் தந்தை பெரியார்! (கைதட்டல்) இன்னும் கேட்டால், மனுதர்மத்தில் எங்களை கீழ்ஜாதி ஆக்கியிருப்பவர் யார்? ‘அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தை உண்டாக்கு வதற்காக தன் முகம், தோள், தொடை, கால் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நாலு ஜாதிகளை தனித்தனியே பகுத்தார். (மனுதர்மம் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு தொடருகிறார்) இதில் எழுதியிருக்கே? பிரம்மா தானே எங்களை சூத்திரனா படைச்சிருக்காருன்னு இருக்கு? அந்த பிரம்மா கிட்ட நாங்க கெஞ்சணுமா? அந்த பிரம்மாவை நம்பினால் எங்கள் இழிவு நீங்குமா? எங்களுக்கு வேற வேலை இல்லையா? பகவத் கீதையில் சூத்திரனும், பெண்களும் பாவ யோனி யிலிருந்து பிறந்தவர்கள். இதை நாங்க ஏற்றுக்கொள்ளணுமா? சதுர்வர்ணம் மயா சிருஷ்டம். நாலு ஜாதிகளையும் நானே உண்டாக்கினேன். என்னாலேயே அந்த தர்மத்தை மாற்ற முடியாது - இருக்குதா? இல்லையா? எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபமில்லை. வம்புச் சண்டைக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை. உண்மைக்கு மாறாக பேசுகின்ற வழக்கமும் இல்லை. எனவே தேவையில் லாமல் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளா தீர்கள். இதுதான் மதம் என்றால், அது தேவையில்லை என்று சொல்வது எங்கள் அடிப்படை உரிமையல்லவா? நாங்கள் உழைப்பது, உங்களுக்கும் சேர்த்துதான்! உங்களுக்கும், மானமும், மரியாதையும் ஏற்பட வேண்டும் என்பதற் காகத்தான்! உங்கள் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான்! ஆகவே, மனிதர்களைப் பாருங்கள். 

- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

தேவகோட்டை, 26.02.2023


No comments:

Post a Comment