தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

* பல்கலைக் கழகங்களில் வேத பாடமா?

*'வேதிக் மிஷன்' நடத்தும் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்கவேண்டுமாம்!

*பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி (Autonomy) என்ன ஆனது?

பல்கலைக் கழகத்திற்குச் சுற்றறிக்கை விடும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது?

பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் 'வேதிக் மிஷன்' என்ற தனியார் அமைப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தும், அதில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது? போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா ஆளுநர்? அரசு உடனே தலையிட்டுத் தடுத்திட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு ஆளுநர் எவ்வளவுதான் எதிர்ப்பு வந்தாலும், மக்கள் விரோத, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். சனாதன சங்கதிகளைப் பரப்பும் சாஸ்திரியாகப் போக வேண்டியவர்களையெல்லாம் ஆளுநராகப் போட்டால் என்ன நடக்குமோ அதுதான் தமிழ்நாட்டில் நடக்கிறது..

ஆளுநரின் சுற்றறிக்கை!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த ''வேதிக் மிஷன் டிரஸ்ட்  என்ற தனியார் அமைப்பால் 'சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு' என்ற தலைப்பில், மாணவர் களுக்குப் பயிற்சிக் கருத்தரங்கம் 11.2.2023 முதல் 19.2.2023 வரை 9 நாள்கள் நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்'' என்று ஆளுநர் மாளிகையின் சுற்றறிக்கை கட்டாயப்படுத்தி இருக்கிறது.

போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா ஆளுநர்?

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு - 'திராவிட மாடல்' சீரும் சிறப்புமாக நடந்துகொண் டிருக்கும்போது, ஆளுநர் என்பவர் ஒரு போட்டி அரசை நடத்துகிறாரா? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தவர்கள் யார்? நாட்டில் நடப்பது ஆளுநர் அரசா - மக்கள் அரசா? இதன் நோக்கங்கள் என்ன என்பதை ஆளுநர் அறிவிப்பாரா?

வேதிக் மிஷன் எதைச் சொல்லிக் கொடுக்கும்?

குஜராத்தைச் சேர்ந்த வேதிக் மிஷன் டிரஸ்ட் என்ற தனியார் அமைப்பு பயிற்சிக் கருத்தரங்கத்தை நடத்துகிறதாம்.

பெயரே வேதிக் டிரஸ்டாம்; அது எந்த மாதிரியான பயிற்சிகளை மாணவர்களுக்குக் கொடுக்கும் என்பது வெளிப்படை.  வேததின் அடிப்படையே பேதம்தான்; தனிப்பட்ட அமைப்புகள் எல்லாம் மேயும் மேய்ச்சல் தரையா தமிழ்நாடு கல்விக் கூடங்கள்?

வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் வேலையில் ஆளுநர் ஈடுபடுவாரேயானால், மிகப்பெரிய மாணவர் கிளர்ச்சிக்கும், மக்கள் கிளர்ச்சிக்கும் வித்திடும் என்று எச்சரிக்கிறோம்.

வேதங்கள் சொல்லுவது என்ன?

பிறப்பிலேயே நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், (அவன் துவிஜாதி - இருபிறப்பாளன்), சத்திரியன் என்றும், வைசியன் என்றும், சூத்திரன் என்றும் அதற்கும்கீழே பஞ்சமர்கள் என்றும், எல்லா ஜாதி பெண்களுமே அடிமைக்கு அடிமை என்றும் (புருஷ சுத்தம் - ரிக் வேதம்) கூறும் வேதங்களை பல்கலைக் கழக - கல்லூரி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களா?

மதச்சார்பின்மைக்கு விரோதம் இல்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ள மதச்சார்பின்மையின்படி நடப்பேன் என்று சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர், அதற்கு நேர்மாறாகத் திட்டமிட்டு, ஒரு குறிப்பிட்ட மத உணர்வின் காவி நாயகராக தொடர்ச்சியாக செயல்படு வதால், அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளி யாக்கித் தீரவேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடு ஆளுநர் செயல்பட்டுவருவதை ஒருக்காலும் அனு மதிக்க முடியாது.

ஆரிய மதத்தின் வேதங்களைக் கற்பிப்பது என்று ஆரம்பித்தால், பைபிளைக் கற்பிக்கவேண்டும்; குரானைக் கற்பிக்கவேண்டும் என்று அழுத்தம் மற்றவர் களிடமிருந்து ஆவேசமாகக் கிளம்பினால், அதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

உயர்கல்வித் துறை உடனே தலையிடட்டும்!

தமிழ்நாடு  அரசு - குறிப்பாக உயர்கல்வித் துறை இதில் அவசர அவசரமாகத் தலையிட்டு, ஆளுநரின் சுற்றறிக்கையை செயல்படுத்தக் கூடாது என்று அறிவிக்கவேண்டும் - உடனடியாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தடுப்பது அவசரம்! அவ சியம்!! அவசியம்!!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

6.2.2023

No comments:

Post a Comment