ராம்தேவ்கள் இருக்க வேண்டிய இடம் எது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

ராம்தேவ்கள் இருக்க வேண்டிய இடம் எது?

 சிலர் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்பதிலும், வேறு சிலர் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும் என்பதிலும் வெறித்தனமாக இருக்கிறார்கள் என்று சாமியார் ராம்தேவ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கருப்புப்பணப்புகழ் சாமியாரும், காவி உடை அணிந்த தொழி லதிபருமான கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ், மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியிருப்பதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். இதன்படி அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் கடந்த 2ஆம் தேதியன்று ஹிந்து மதத் தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாபா ராம்தேவ் பங்கேற் றிருந்தார். அப்போது சிறப்புரையாற்றிய அவர், "இஸ்லாமியர் களிடம் உங்கள் மதம் என்ன சொல்கிறது என்று கேளுங்கள். அய்ந்து முறை நமாஸ் செய்யுங்கள். பின்னர் மனதில் தோன்றுவதை செய்யுங்கள் என சொல்வதாக அவர்கள் கூறுவார்கள். 

ஹிந்து பெண்களைக் கடத்தினாலும் சரி, எந்த பாவங்களைச் செய்தாலும் சரி - ஆனால் நமாஸ் மட்டும் ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டி ருக்கிறார்கள். எங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பாவங்களை செய்கிறார்கள். அதே போல அவர்கள் நமாசும் செய் கிறார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை, சொர்க்கம் என்பது பைஜாமா அணிபவர்களுக்கும், மீசையை மழிப்பவர்களுக்கும், குல்லா அணிபவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். 

குரான் இவற்றைச் சொல்லவில்லை. ஆனால், அவர்களாகவே இவற்றையெல்லாம் செய்கிறார்கள். இப்படியாக அவர்கள் பயங்கரவாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள்" என்று ஹிந்தியில் கூறியுள்ளார். இது தொடர்பான காட்சிப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாமோ, குர்ஆனோ இதைத்தான் போதிக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இவைதான் அவர்களால் பின்பற்றப்படுகிறது. 

சரி இப்போது கிறிஸ்தவத்திற்கு வருவோம். கிறிஸ்தவம் என்ன சொல்கிறது? தேவாலயத்திற்குச் சென்று மெழுகுவத்தி ஏற்றி கர்த்தராகிய ஏசுவின் முன் நில்லுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டுவிடும் என்று கூறுகிறது. இவர்கள் தங்களது கழுத்தில் சிலுவையை அணிந்து கொண்டு மதப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் யாரையும் விமர்சிக்கவில்லை. சிலர் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்றும் வேறு சிலர் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும் என்பதிலும் வெறித்தனமாக இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு மதம்  மாற்றி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?" என்று கேள்வி யெழுப்பியுள்ளார். 

 பின்னர் ஹிந்து மதத்துடன் இரண்டு மதங்களையும் ஒப்பிட்டுப் பேசி, ஹிந்து மதம் அகிம்சையையும், நேர்மையையும் போதிக்கிறது என்று கூறியுள்ளார். 

இந்த காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பத்தாய் கான் எனும் நபர் சவுஹாத்தான் காவல் நிலையத்தில், 'மத வெறுப்பை தூண்டுவதாக'  ராம்தேவ் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அய்பிசி பிரிவு 153A, 295A மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ராம்தேவ் இப்படி சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறுவது இது முதல் முறையன்று. இதற்கு முன்னர் கடந்த நவம்பரில் மகாராட்டிரா மாநிலத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்தார். அந்நிகழ்ச்சியில், "மராட்டியப் பெண்கள்  ஆடை அணியாமல் இருக்கும்போது மிகவும் அழகாக இருப்பார்கள்" என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்தக் கருத்து குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராம்தேவுக்கு தாக்கீது அனுப்பியிருந்தது. இதனையடுத்து அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். இதனையடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

2013இல் அன்னா ஹசாரே ஊழல் ஒழிப்பு என்று சொல்லி அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதற்காக  காவல்துறை யினர் கைது செய்ய வந்தபோது பெண் போல வெள்ளை சுடிதார் அணிந்து தப்பி ஓடிய வீராதி வீரர் தான் இந்த ராம்தேவ்.

பிஜேபி ஆட்சி வந்ததும் பெரிய மருந்து வியாபாரி ஆகி விட்டார். இவருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வேறாம்.  காவி உடையில் திரியும் இந்த கருங்காலிகள் இருக்க வேண்டிய இடம் சிறைச் சாலையே தவிர வேறு எந்த இடமும் இல்லை.

No comments:

Post a Comment