யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா, அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு ஆணை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா, அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு ஆணை!

நெல்லை, பிப். 22- அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மய்யம் உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதுகுறித்த செய்திக் குறிப்பில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அகஸ்தியமலை யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய, உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மய்யம் அமைக்க தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (ம) வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டில் 1976ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம் ஆகும். இதனை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் சிறீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் என நான்கு புலிகள் காப்பகங்கள் என பின்னர் அறிவிக்கை செய்யப்பட்டன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், 150 உள்ளூர் தாவரங்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட தாவரங்களின் தாயகமாகும். இந்த நிலப்பரப்பிலிருந்து 14 ஆறுகள் தோன்றுவதால் இப்புலிகள் காப்பகம் நதிகள் சரணாலயம் என்றும் அழைக்கப் படுகிறது.  மேலும் தென்மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகளின் மிக முக்கியமான வாழ்விடங்கள் மற்றும் நடைபாதைகளை பாது காக்கும் நோக்கத்துடனும், யானைகளின் எண்ணிக்கையை பராமரிக்கும் நோக்கத்துடனும் அகஸ்திய மலை யானைகள் காப்பகம் இந்த அரசால் சமீபத்தில் அறிவிக்கப் பட்டது. இந்த பாதுகாப்பு மய்யம் அகஸ்தியமலை யானைகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றை பாதுகாக்கும் அரசின் முயற்சியில் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.00 கோடி ரூபாய் செலவில் களக்காடு முண்டந்துறை பகுதி யில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிலையான சூழல் சுற்றுலாவை மேம்படுத்து வதோடு, உள்ளூர் மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment