இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குவது திராவிட மாடலே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 15, 2023

இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குவது திராவிட மாடலே!

 *கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலைவாய்ப்புத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஏமாற்றம்!

*சிறுபான்மையினர் நலம் புறக்கணிப்பு! 

*குஜராத் மாடல் அரசு தோல்வி!

நாடாளுமன்றத்தில் - ஆ.இராசா உணர்ச்சிப்பூர்வமான உரை !

புதுடில்லி, பிப்.15- நாடாளுமன்றத்தின் மக்களவையில் 9.2.2023 அன்று நடைபெற்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உணர்ச்சி பொங்க பேசினார். மக்களவையில் அவர், “குஜராத் மாடலால் என்ன பயன்? தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் பற்றி பிரதமர் முன்னிலையிலேயே விளக்கமளித்து பேசினார். இதில் எந்த மாடல் உங்களுக்கு வேண்டும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சிறுபான்மையினர் நலனுக்கான நிதி மிகவும் குறைக்கப்பட்டுள்ள நிலையில் நான் உங்களை கைகூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். நமது அரசமைப்பு சட் டத்தை தயவு செய்து காப்பாற்றுங்கள் என உணர்ச்சிகரமாக அவர் பேசினார்.

அவரது உரை வருமாறு: 

இந்த அவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க எனக்கு வழங்கிய வாய்ப்பிற்கு நன்றி. மாண்பமை குடியரசுத் தலைவர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரது உரைகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடந்த இரண்டு நாட்களாக நாடாளு மன்றத்தில் காரசாரமான வாதப் பிரதிவாதங்களும், குற்றச் சாட்டுகளும் இடம் பெற்றன. பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. குற்றச் சாட்டுகள் தீவிரமாக இருந்த நிலையில் அவற்றை குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில் அந்த குற்றச் சாட்டுகள் உண்மை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள தாகவே நினைக்கிறேன். இதனால் இந்த நாடாளுமன்றம் நமது தேசத்துக்கு என்ன விதமான செய்தியை அளிக்கப் போகிறது.? முதல் தடவையாக நான் நாடாளுமன்றத்தில் ஒரு முரண்பாட்டை எதிர்கொண்டேன்.

இரண்டு நண்பர்கள் (மோடி, அதானி) இருவேறு எதிர் தளத்தில் நிறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பட்டன. பிரதமர் தனது உரையை தொடங்கும் போது, “மோடி, மோடி, மோடி” என்று குரலெழுப்பினர். பிரதமருக்கு எதிராக குற்றச் சாட்டுகள் எழுந்தபோது, எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் ‘அதானி, அதானி, அதானி என்று சப்தமிட ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் இன்னமும் நண்பர்களாகவே தெரிகிற போது இந்த அவை அவர்களை பங்கிட்டுக் கொண்டு எதிர் எதிராக கோஷமிடும் இந்த நிகழ்வு விசித்திரமான முரண்தானே!. 144 கோடி மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றிருப்பதாக இந்த அவையில் நேற்று பிரதமர் பெருமை கொள்ளும் நிலையில், 144 கோடி மக்களின் நம்பிக்கையை இது போன்ற செயல்பாடுகளால் எப்படி பெற முடியும் முடியும்..?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் 310 அல்லது 320 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இங்கே உள்ளனர். கிட்டத்தட்ட 215 தொகுதிகள் பா.ஜ.க அல்லாத கட்சிகளிடம் இருந்தன. அதாவது இந்த அவையில் தமக்கு ஒட்டுமொத்த இந்தியரின் ஆதரவு இருப்பதாக பெருமிதம் கொள்ளும் பிரதமரின் வார்த்தைகளில் உண்மையில்லை. அப்படிப்பட்ட  கொண்டாட்டங்களுக்கு இசைவாகவும் நாடாளுமன்றத்தில் சூழ்நிலையில்லை. 

மக்கள் ஆதரவு என்பது வெறும் கண் துடைப்பே!

ஒரு தோராயமான கணக்கை இங்கு நான் தெரிவிக்கிறேன் அதாவது, மாண்புமிகு உறுப்பினர் திருமதி சுப்ரியா சூலேயிடம் கேட்டபோது அவர், 23- லட்சம் மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், எனது நண்பர் காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மசூத் அவர்களிடம் கேட்டபோது அவர் 30 லட்சம் மக்களின் பிரதிநிதியாக இருப்பதாகவும், இன்னொரு அஸ்ஸாம் நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் திரு. கவுரவ் கோகாய் 25 லட்சம் மக்களின் பிரதிநிதியாகவும் இருப்பதாகவும் இங்கே தெரிவித்துள்ளனர். எனவே, சராசரியாக, ஒரு தொகுதிக்கு 20 லட்சம் பேர் பிரதிநிதித்துவம் பெற்ற உறுப்பினர்கள் என்ற வகையில் 220 உறுப்பினர்களின் அவர்களது ஆதரவை பெறாத நிலையில், அவர்களை தேர்ந்தெடுத்த சுமார் 50 கோடி மக்களின் விருப்பத்திற்கு எதிராக எவ்வாறு 144 கோடி மக்களின் ஆதரவை பெற்றிருப் பதாக பிரதமர் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்..? 144 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் நேற்று கூறியிருப்பது ஒரு சூழ்ச்சி மிக்க பித்தலாட்டமே தவிர வேறில்லை.

நான் நிதி ஆளுமை பெற்ற நிபுணரோஅல்லது நிதிப்பற்றாக்குறை சீரமைப்பு நுட்பம் கொண்ட வல்லுனரோ அல்ல. இருப்பினும், ஒன்றிய அரசின் பட்ஜெட் எனக்கு மட்டுமல்ல, நாட்டில் மிகவும் தாழ்ந்த நிலையில் வாழும் மக்களுக்கும் பல ஏமாற்றங்களை அளித்துள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக இங்கு வெளிப்படுத்த விழைகிறேன்.

பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் பிரதமர் மற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு புகழ் மழையை பொழிகின்றன. அதன் காரணம் அனைவருக்கும் தெரியும் அவ்வாறு புகழாவிட்டால் அவர்களால் ஊடகங்களை நடத்த முடியாது. நடத்தவிடமாட்டார்கள். அதுதான் இன்றைய நிலை.

ஏமாற்றம் தந்த பட்ஜெட்

ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து நான் பெரும் ஏமாற்றமடைந்துளேன். பெரும்பாலான மக்களின் எதிர் பார்ப்புகளை அது பூர்த்தி செய்யத் தவறியதால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். என்னுடைய ஏமாற்றங்கள், நான்கு தலைப்புகளில் உள்ளன. முதலாவது கல்வி. இரண்டாவது சுகாதாரம். மூன்றாவது உணவு மற்றும் விவசாயம். நான்காவது வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகும். நேரக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்த நான்கை பற்றி மட்டுமே இங்கு பேச இருக்கிறேன். அதனாலேயே மற்ற துறைகளில் குறை இல்லை என்று மதிப்பிடக்கூடாது.

நேற்று பேசிய பிரதமர் பழங்குடியின சமூகத்தில் இருந்து இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்து உள்ளதாக கூறினார். இந்த நேரத்தில், ‘ஒருவருக்கு அதிகாரம் கொடுப்பது எளிது ஆனால் அறிவையும் ஞானத்தையும் கொடுப்பது மிகவும் கடினம்‘ என்ற அம்பேத்கரின் வார்த்தை களை இந்த அவைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மாண்பமை குடியரசுத் தலைவர் அவர்கள் பழங்குடியின வகுப்பிலிருந்து இருந்து வந்தவர் என்பதால் அவர் மீது எனக்கு பெருமதிப்பும் மாண்பும் உண்டு. ஆனால், அதனாலேயே பழங்குடியினரின் மீட்பர் என்று கூறுவதற்கு இந்த அரசுக்கு உரிமையில்லை. ஏனெனில், உண்மை வேறுவிதமாய் உள்ளது. எவ்விதமான கல்வியை அல்லது அறிவை ஒன்றிய அரசு அவர்களுக்கு அளித்துள்ளது. பழங்குடியின மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளதா?

பட்ஜெட்டில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி அவர்களுக்கு அளிக்க எடுத்த முன்முயற்சிகள் என்ன? ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில், தாழ்த்தப்பட்ட ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு ஆரம்பக் கல்வி அளிப்பதற்கான முன்முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்துகிறது என்பது அர்த்தமல்ல.

அந்த மக்களுக்கு ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி வழங்குவது குறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏகலைவா பள்ளிகளில் 38,000 ஆசிரியர்களை அடுத்த அய்ந்தாண்டுகளில் நியமிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அது பழங்குடியினருக் கானது என்பதை வரவேற்கிறேன். ஆனால் பழங்குடியின ருக்காக ஒரு புதிய பள்ளி கூட திறக்கப்படவில்லை. அது கேலிக்கூத்தாக இருக்கிறது. இதற்கா ஏகலைவா பெயர்...? ஏகலைவனின் கதை உங்களுக்கு தெரியுமா? அவன் தனது குருவுக்கு கை கட்டை விரலைக் காணிக்கையாக கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் அவன் ஒரு சூத்திரராக கல்வி கற்றதால், தவம் இருந்ததால் தனது கட்டை விரலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுபோல, ஒருபுறம் ஏகலைவா பள்ளிகளை நடத்திக் கொண்டு மறுபுறம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஆதிவாசி மக்களின் கட்டைவிரலைப் பறிக்கிறீர்கள். உங்கள் பட்ஜெட் வாய்மொழி ஏமாற்று வித்தையாக அல்லவா உள்ளது? பட்ஜெட்டில் கல்விக்கு கணிசமான ஒதுக்கீடாக 13 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கும் நிலையில், உலகத் தரத்திற்கு இணையாக கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை பெருக்க வேண்டுமானால் இந்த உயர்வு போதாது.

2009ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 9 மடங்கு அதிகமாக தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்று நேற்று ரயில்வே அமைச்சர் இந்த அவையில் கூறியுள்ளார். அவர் ரயில்வே பட்ஜெட் என்று தனித்து பிரித்து பேசாமல் ஒன்றிய பட்ஜெட் நிலவரம் பற்றி பேச கேட்டுக்கொள்கிறேன். பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் 2009ஆம் ஆண்டை ஒப்பிடும் போது பத்து மடங்கு உயர்ந்துள்ள போது, ஏழு மடங்கு உயர்ந்த ரயில்வே பட்ஜெட் பற்றி பெரிதாகப் பேசுகிறார் அவர். இது எண்களின் வித்தை மட்டுமல்ல, இது கேலிக்கூத்தும் கூட. இந்த எண் விளையாட்டை விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன். கல்விக்கு செய்யப்பட்டுள்ள நிதிஒதுக்கீடு சமூகத்தின் கடை நிலை மக்களின் தேவைகளையும் வளர்ச்சியை பூர்த்தி செய்வதாக இல்லை. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கப் போகின்றன. இதன் விளைவாக, எளிய மக்களின் வாங்கும் சக்தி படிப்படியாக தேய்ந்து, அவர்களது வாழ்வாதாரம் அடியோடு பறிக்கப்படும். இறுதியாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக இந்த அரசு செலவிடப் போகிறது என்று கடந்த ஒன்பது ஆண்டுகளாக மக்களுக்கு அளித்து வந்த உத்தரவாதம் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் உண்மை. எனவே, என்னுடைய ஏமாற்றம் நியாமானது என்பதை அரசு மறுக்க இயலாது.

இப்போது பொது சுகாதாரம் குறித்த பிரச்சினைக்கு வருகிறேன். சுகாதாரத் துறைக்கு என்னதான் நடந்தது? கரோனா தொற்றின் போது தடுப்பூசி போடும் விஷயத்தில் பிரதமர் தன்னைத்தானே கொண்டாடிக் கொண்டார். இது விஞ்ஞானத்தால் தானாக வந்தது. வேறு எதனாலும் அல்ல. எல்லா நாடுகளும் செய்ததைத்தான் நீங்களும் செய்தீர்கள். தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது அதை நீங்கள் திறம்பட சமாளித்தீர்கள் என்று சொல்ல முடியுமா..? தொற்றுநோய் காலத்தில் இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் யாரும் எந்த பிரதமர் உட்பட மருத்துவ மனைக்கும் செல்லவில்லை என்று நான் தைரியமாக சவால் விடுகிறேன். இதுதான் அரசின் சாதனையா..?

எந்த ஒரு மருத்துவமனைக்கும் முதல்வர்கள் யாரும் செல்லவில்லை. அந்த நேரத்தில் எனது வணக்கத்திற்குரிய தலைவரும், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் அவர்கள் மருத்துவ உடை அணிந்து, கொரானா மருத்துவ வார்டுகளுக்குச் சென்று, மக்களைத் தொட்டு, “கவலைப்படாதீர்கள், நான் இருக்கிறேன்” என்று உறுதியளித்தார். அந்தக் காலத்தில் இதைச் செய்த ஒரே தலைவர் அவர்தான். இதை என்னால் தைரியமாக சொல்ல முடியும். தொற்று நோய் ஏற்பட்ட நேரத்தில் அன்றைய அரசு தரப்பில் இருந்து யாரும் வெளியேகூட வரவில்லை. 

அப்போதைய சுகாதார அமைச்சர் ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான பதில் உங்களுக்கே நன்றாகத் தெரியும். தொற்று நோய் நிலைமை சரியாகவும், மருத்துவ ரீதியாகவும், விவேகமாகவும் கையாளப்படவில்லை என்பதே எங்களின் குற்றச்சாட்டு. மருந்து, படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றில் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வென்டிலேட்டர் கள் எதுவும் இல்லை. ஆயிரக்கணக்கான இறந்தவர்களின் உடல்கள் நாகரீகமாக புதைக்கப்படாமல் எரிக்கப்பட்டன. அதுதான் உங்கள் அரசின் செயல்பாடு. கடைசியில் அரசு என்ன செய்தது? வெறுமனே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தது. இதுதான் மருத்துவ அறிவியல் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தா? கொரோனா தொற்றுக்குப் பிந்தைய உங்கள் நிலை என்ன? 

கரோனாவுக்கு பின்னர் மாணவர்கள் நிலை

கரோனா பெருந்தொற்று காரணமாக 230 மில்லியன் இந்தியர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு உங்கள் ஆறுதல் என்ன? ஒன்றும் இல்லை. தேசிய சுகாதார தரவு என்னதான் சொல்கிறது? கொரோனா வுக்குப் பிறகு, 35 சதவீத மாணவர்கள் உடல் ரீதியாக பெரும் பாதிப்படைந்தனர். அவர்களில் 32 சதவீதம் பேர் உடல் எடை குறைந்து விட்டனர். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த மாணவர்களுக்கான உதவி திட்டம் ஏதுமில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவ மனைகள் வரை, மற்றொரு தொற்று நோய் தாக்கினால் அதைத் தாங்கிக் கொள்ள எந்த முன் முயற்சியும் எடுக்கப்பட வில்லை.

பட்ஜெட்டில் 157 செவிலியர் பள்ளிகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு உள்ளது. அது கோலாகலமாக ஒன்றிய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், முறையான கட்டமைப்புக்கான சிக்கல் இருக்கும்போது, இந்த 157 செவிலியர் பள்ளிகள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது. இந்த ஆண்டு, தேசிய சுகாதார பணிகளுக்கான ஒதுக்கீட்டில் ரூ.500 கோடியை குறைத்துள்ளீர்கள். தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.150 கோடி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத்துறையில் இந்த பட்ஜெட் முழு ஏமாற்றத்தை கொண்டிருக்கிறது. மூன்றாவதாக விவசாயத்திற்கு வருகி றேன். நல்ல ஆரோக்கியம் என்பது விவசாயத்துடன் தொடர்புடையது. உங்கள் முந்தைய வாக்குறுதி என்ன? 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயத் துறையில் விவசாயி களின் வருமானத்தை இந்த அரசு இரட்டிப்பாக்கும் என்று சொன்னீர்கள். இப்போது 2023இல் நிற்கிறோம். அவர்களது வருமானம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதா..? எப்பொழுதும், மூலதனச் செலவின ஒதுக்கீடு அதிகமாகவும், கணிசமானதா கவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் விவசாயத் துறைக்கான செலவினம் ரூ.7.5 லட்சம் கோடி என்றால், பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பிற்காக ரூ.120 கோடி மட்டுமே செலவிடுகிறீர்கள். பொது களத்தில், சிறுதானியங்கள் பிரதமரின் தனிப்பட்ட உணவாக மாறியது. சிறு தானியங் களைக் கொண்டாடுகிறீர்கள். நாடாளுமன்ற உணவகத்தி லேயே சிறுதானிய வகை உணவு கிடைக்கிறது. இன்று என் மதிய உணவுகூட தினைதான். அதை பயிரிட ஒரு கோடி கூட ஒதுக்கீடு இல்லை. நடப்பு ஆண்டில் பாசனத்துக்கான ஒதுக்கீடு ரூ.350 கோடியில் இருந்து ரூ.310 கோடியாக குறைந்துள்ளது. நிதியமைச்சர் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான தலைப்புகளை அதாவது, ‘விவசாய முடுக்க நிதி’ (Agricultural Accelerated Fund)  என்று பயன்படுத்தினார். பட்ஜெட்டில் அதற்கான ஆக்சிலரேட்டர் எங்கே, கிளட்ச் எங்கே என்று தெரியவில்லை. இந்த விவசாய முடுக்க நிதி என்பது பட்ஜெட் தாளில் மட்டுமே உள்ளது. ஏமாறுவது மக்களா அல்லது எதிர்க்கட்சியா..? அல்லது, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்களா..? எனக்கு தெரியவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது, விவசாய அமைச்சகம் ரூ.8,000 கோடியை இழந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், சுகாதாரம், ஊட்டச்சத்து, மற்றும் விவசாயத் துறை ஆகியவைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகின்றன.

நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், “உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறனில் முதலீடு செய்வது வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்கட்டமைப்பில் பெரும் முதலீடு ஏற்படுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படும் என அவர் பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை என்ன? உள்கட்டமைப் புக்கான மூலதன செலவு அதிகரிக்கப்படுள்ளது நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வே துறைகளுக்குத்தான்.

நீங்கள் ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கு நிதி அளித்துள்ளீர்கள், இந்த மூலதனம் உள் கட்டமைப்பை உருவாக்க உயர் தீவிர தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பல லட்சம் கோடி மதிப்பிலான கோடிநிதி செலவிடப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அதில் வேலை வாய்ப்பிற்குகோ, தொழிலாளர் தனி நபர் ஊதியத்திற்கோ வழியில்லை. ஊதியக் கூறு 0.0001 சதவீதம் கூட இல்லை. இந்த சொற்ப நிதி அனுமதியுடன் நீங்கள் எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பொதுமக்களுக்கான வேலை வாய்ப்பு கேள்விக்குறி

காந்தியார் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் பற்றி இங்கே அதிகம் பேசப்பட்டது. நான் அதை மேலும் தொட விரும்பவில்லை. அந்த திட்டத்திற்கான நிதி சுமார் ரூ.20,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான வேலை வாய்ப்பு உத்தரவாத நடவடிக்கை (PAEG) அறிக்கை என்ன கூறுகிறது? அதன் அறிவியல் அறிக்கையின்படி அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு சுமார் ரூ.2,71,000 கோடி தேவைப்படுகிறது. இப்போதுள்ள ஒதுக்கீடு ரூ.60,000 கோடி மட்டுமே. இந்த இடைவெளியை யார் நிரப்பப் போகிறார்கள்? இது ‘இடைவெளி’ (Gap) அல்ல, ‘வளைகுடா பெருவெளி’ (Gap). இந்த வளைகுடா பெருவெளியை’ நிரப்பப் போவது யார்? எனக்கு தெரியாது. வயதானவர்கள், அனாதைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான மிக முக்கியமான திட்டமான தேசிய சமூக உறுதியளிப்பு திட்டதிற்கு (NSAP) 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ‘குஜராத் மாடல்’ மூலம் வழி நடத்தப்பட்டிப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் இங்கு பறைசாற்றும் குஜராத் மாடல் குறித்தும், அதன் முடிவுகள் என்ன என்பது குறித்தும் தயவு செய்து சுய பரிசோதனை செய்து பாருங்கள். எங்கள் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் என்றால் என்ன என்பதை பிரதமருக்கு விளக்கினார். இந்த மாடல் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயலாக்கம் பெற்று வருகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் உள்ள சிக்கல்கள் கவனிக்கப்படவில்லை. நேற்று, கேள்வி நேரத்தின் போது சில புள்ளி விவரங்களை நான் கண்டேன். அதாவது, குஜராத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக உள்ளது. உ.பி.யில் இது 35 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இது 14 சதவீதமாகவும், கேரளாவில் வெறும் 10 சதவீதமாகவும் உள்ளது. இதுதான் திராவிட மாடல். இந்த தேசம் எந்த மாடலை விரும்புகிறது என்பதை தயவுசெய்து முடிவு செய்ய வேண்டுகிறேன்.

உள்ளத்தின் காயத்துடனும், வலியுடனும் எதிர்காலத்தில் அதற்கான ஆறுதலும், தீர்வும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எனது பேச்சை நிறைவு செய்ய விரும்புகிறேன். இன்று கேள்வி நேரத்தின் போது சில ஏமாற்றமளிக்கும் புள்ளி விவரங்களை நான் கண்டேன். சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1810 கோடி, இப்போது அது வெறும் ரூ.600 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மை சமூக மக்களுக்கு என்ன வகையான செய்தி.. ? பொது மக்கள் எழுப்பும் குரல் மக்களாட்சியில் கேட்கப்படாத நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் சிறுபான்மை யினருக்கு மிகவும் ஆபத்தானது.

1973ஆம் ஆண்டின் ஆண்டின் கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் அரசமைப்பின் அடிப்படைப் பண்புகள் (Basic Structure) கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் வாதிட்டது யார்..? 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு 68 நாட்கள் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் பிரபல வழக்குரைஞர் நானி பால்கிவாலா வாதாடினார். அதன் காரணமாக அவர் அரசியலமைப்பின் அடிப்படைப் பண்புகளை காப்பாற் றினார். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. தீர்ப்புக்குப் பிறகு, பிரதமருக்கு நானி பால்கிவாலா கடிதம் எழுதினார். கடிதம் எழுதப்பட்ட தேதி நவம்பர் 9, 1975. அந்த கடிதத்தில் அவர் எழுதுகிறார், “அரசமைப்புச் சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அடிப் படைக் பண்புகள் சிறுபான்மையினருக்கான உண்மையான பாதுகாப்பு ஆகும். அந்தப் பண்புகள் மாற்றியமைக்கப் பட்டுவிடுமோ என்ற பெரும் அச்சத்தில் இருந்தனர். இன்று நாம் அவர்களுக்கான பாதுகாப்பான அடிப்படைப் பண்புகளை காப்பாற்றியுள்ளோம்.” என்று குறிப்பிட்டு, “உங்களுக்குப்பின் வரப்போகிற பிரதமர்களில் உங்களைப் போல வகுப்புவாத கண்ணோட்டமில்லாத தலைவர்கள் வருவார்களா என்று அச்சப்படுகிறேன்”. என்று குறிப்பிட்டார். இன்று சிறுபான்மையினர் நிதி குறைக்கப்பட்டுள்ள நிலையில் நான் ஒன்றிய அரசை வேண்டிக் கேட்டுக் கொள்வது, என்னவென்றால், மதசார்பின்மையை, அடிப் படை உரிமைகளை, தன்னிச்சையான நீதித்துறையை கொண்டுள்ள அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற பிரதமரும் அவரது அமைச்சரவையினரும், முன்வாருங்கள் என்பதே. ஏனென்றால், அதன் அரசியல் சட்டத்தின் முதல் வரியில் ’இந்திய மக்களாகிய நாம், (We the People of India”)  என்று தான் எழுதப்பட்டுள்ளது. அதை தயவு செய்து, “இந்து மக்களாகிய நாம்” (We the People Hindus) என்று திருத்தி எழுத முயற்சிக்காதீர்.                                   

(நன்றி: 'முரசொலி')


No comments:

Post a Comment