நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன்

 இந்தியாவில், தமிழ்நாட்டில் நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் 

கண்டித்துத் தலையங்கம் எழுதிய ஒரே இயக்கம்

திராவிட இயக்கம் - தந்தை பெரியார் - விடுதலைதான்!

சென்னை, பிப்.26  இந்தியாவில், தமிழ்நாட்டில் நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் கண்டித்துத் தலையங்கம் எழுதிய ஒரே இயக்கம் திராவிட இயக்கம் - தந்தை பெரியார் -விடுதலைதான் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள்.

சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்!

கடந்த 11.2.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக் கணிக்கப்படுவது ஏன்?சமூகநீதி கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவேண்டும் என்று வலி யுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறுகிற இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய தலைவர் - சமூகநீதியின் குறியீடாக இன்றும் திகழ்ந்துகொண்டிருக்கின்ற நம்மு டைய பேரன்பிற்குரிய அய்யா மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே,

ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாக, அவர்களின் வாழ்வியலுக்காக நாளும் பொழுதும் நாடும் நகரமாகக் களமாடுகிற பேரன்புத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல்.திருமா அவர்களே,

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, திராவிடர் கழகத்தின் தோழர்களே, நண்பர்களே, சகோதரிகளே, தாய்மார்களே, பல்வேறு அரசியல் இயக்கங்களின் சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் முதலில் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று தோழர் சிங்காரவேலர் அவர்களின் நினைவு நாள். 

சிங்காரவேலர் என்றால், தந்தை பெரியாரைக் கடந்து செல்ல முடியாது; சிங்காரவேலர் என்றால், அயோத்தி தாசரைக் கடந்து சென்றுவிட முடியாது.

எனவே, இந்த மகத்தான மனிதர்களை நினைவு கூர்ந்து  நான் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபொழுதுதான், கவிஞர் பூங்குன்றன் அவர்கள், இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறது, வருகிறீர்களா? என்று சொன்னார்.

கடைசி தொண்டர்களில் நானும் ஒருவன்

திராவிடர் கழகம் நடத்தும் ஒரு கூட்டம், அது கருத்தரங்கமாக இருக்கட்டும்; மாநாடாக இருக்கட்டும்; பொதுக்கூட்டமாக இருக்கட்டும்; அந்த அழைப்பிதழில் பெயர் போட்டால் என்றுதான் இல்லை;  கேள்விப் பட்டாலே வந்து நிற்கின்ற கடைசி தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதை, அவரிடம் பதிவு செய்தேன்.

அவர் சிரித்துக்கொண்டார்.

இந்தியாவினுடைய பிரதமர் மோடி அவர்களை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பேச்சு

நண்பர்களே, தோழர்களே! இப்பொழுதுகூட நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர் களிடம் சொன்னேன், உங்கள் உரையை நான் செவிமடுத்தேன். தமிழில்தான் அவர் நாடாளுமன்றத்தில் பேசினார். இந்தக் கூட்டத் தொடரிலேயே இந்தியா வினுடைய பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பேச்சு என்பது, அவர் நிகழ்த்திய உரைதான் என்பதை, வஞ்சகப் புகழ்ச்சி ஏதுமில்லாமல் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பதிலை சொல்லவேண்டியது  இந்தியப் பிரதமருடைய பொறுப்பு!

‘‘அதானிக்கும், மிகப்பெரிய செல்வந்தர்களுக்கும் - உங்களுக்கும் ஒரு நெருக்கம் இருக்கிறது. அது உண்மை.

எனக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும்  எந்த உறவும் இல்லை என்பதை நிரூபிக்கவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களே!’’ என்று அவர் சொன்ன அந்த சொல் - அதற்குள் இருக்கின்ற கேள்வி ஜனநாயகத்திற்கானது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கானது.

அந்தக் கேள்வியோடு அவருடைய உரையை முடித் திருக்கின்றார்; அதற்குரிய பதிலை சொல்லவேண்டியது இந்தியப் பிரதமருடைய பொறுப்பு.

நண்பர்களே, இன்றைக்கும் வெறும் புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல; வெறும் கருத்தரங்குகள் அல்ல - சமூகநீதிக்கு ஒரு அநீதி என்று சொன்னால், 10 பேர் என்றாலும், நான் வந்து நின்று கடைசி தொண்டனாகப் போராடுவேன் என்று, போராடுகின்ற நமது மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களைப் பார்க்கும்பொழுது உள்ளபடியே பெருமிதமாக இருக்கிறது.

ஜனநாயகத்தை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு!

இன்றைக்கு நம்முடைய நீதிமன்றங்கள் சுற்றி வளைக்கப்படுகிறது; ஏற்கெனவே, நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது; கல்வி நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு நிறுவனங்களும் இன்றைக்கு சுற்றி வளைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் ஜனநாயகத்தை அடித்து நொறுக்கிக் கொண் டிருக்கிறது ஒன்றிய அரசு.

தந்தை பெரியாரின் பதிவு!

நிறைவாக இப்பொழுது உச்சநீதிமன்றத்தை சுற்றி வளைத்திருக்கிறார்கள். இதன் ஓட்டைகளையெல்லாம் தமிழ் மண்ணிலிருந்து, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், யேல் பல்கலைக் கழகத்தில், உலகத்தில் உள்ள மிகப்பெரிய பல்கலைக் கழகத்தில் படித்த அறிஞர் களுக்கு இல்லாத மகத்தான ஆற்றல் அறிவோடு தந்தை பெரியார், ரங்கூனில், டாக்டர் அம்பேத்கரோடு உரை நிகழ்த்துகின்றபொழுது பதிவு செய்கிறார்.

மிகுந்த மரியாதையோடு டாக்டர் அம்பேத்கரோடு பேசுகிறார்; என்ன இவ்வளவு சறுக்கல் இருக்கிறதே, இவ்வளவு ஓட்டைகள் இருக்கிறதே- நீங்கள் அல்லவா இதனுடைய தலைவர்.

மகத்தான பொறுப்பை ஏற்று, மகத்தான காரியம் செய்திருக்கின்ற ‘‘நீங்கள் இவ்வளவு ஓட்டைகளைத் தந்துவிட்டீர்களே, இவ்வளவு சறுக்கல்கள் இருக்கிறதே இந்திய அரசமைப்புச் சட்டத்தில்’’ என்று சொன்னார்.

அதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மறுக்கவில்லை. சரித்திரத்தில் மகத்தான மனிதர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வார்கள்.

அம்பேத்கர் ஒப்புக்கொண்டார்

எது தவறோ, அதை அச்சமில்லாமல் ஒப்புக்கொண்ட தலைவர்களில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத் கருக்கு நிகர் - இந்திய மண்ணில் யாரையும் பார்த்துவிட முடியாது.

அதை அம்பேத்கர் ஒப்புக்கொள்கிறார். அவர் சொல்கிறார், ‘‘அந்தக் காலச் சூழலில் எழுதுகோல் என் கரங்களில் இருந்தது; அதை நகர்த்தியது பிராமணர்கள்’’ என்று சொன்னார்.

அதுதான் இன்றைக்கும் இருக்கின்ற நிலை. 

ஆனால், அதை நிவர்த்தி செய்ய முடியுமா? என்றால், முடியும்.

அதிகாரம் திராவிட கருத்தியலுக்கும், தோழர் திருமா போன்றவர்கள் பற்றியிருக்கின்ற கருத்தியலுக்கும், இடது சாரி கருத்தியலுக்கும் இந்தத் தேசம் வந்து சேருகிற பொழுது, நிச்சயமாக அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டு. அதை நோக்கித்தான் இன்றைக்கு நாம் நகர்கிறோம்.

அதிகாரத்தைக் குவித்துக் கொள்வது ஆபத்து!

பெரியார் எவ்வளவு பெரிய சிந்தனையாளர்; இந்த மேடைக்காக நான் அதைச் சொல்லவில்லை. புகழ் அல்ல இது - எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக - 40 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதுகிறார் தந்தை பெரியார் -

‘‘அது நீதிமன்றமாக இருந்தாலும்கூட, அதிகாரத்தைக் குவித்துக் கொள்வது ஆபத்து’’ என்று குறிப்பிடுகிறார்.

குடும்பத்தில்கூட அதிகாரம் ஒரு தலைவனை சார்ந்து இருக்கக்கூடாது; பெண்ணுக்கு அந்த அதி காரத்தைக் கொடு.

ஆணும் - பெண்ணும் அல்ல; 

பெண்ணும் - ஆணும் என்றுதான் எழுத்துகளில் பெண்களை முதன்மைப்படுத்துவார்.

ஆணும்  - பெண்ணும் சமம் என்று நாம் பேசுகிறோம் அல்லவா! ஆனால், தந்தை பெரியார் அவர்கள், பெண்ணும் - ஆணும் சமம் என்றுதான் சொல்வார்.

அது என்ன குடும்பத் தலைவன்?

அப்படியென்றால், குடும்பத் தலைவி இல்லையா?

அதிகா£ரம் எல்லாவற்றையும் சமமாகப் பிரித்துக் கொடு; சமமாக நடத்து; இருவரும் சமம்தான்; இது இயற்கையியல் என்பார்.

நிறுவனத்தில், ஓரிடத்தில் அதிகாரம் குவிவது ஆபத்து என்பார்.

உச்சநீதிமன்றம் என்ன? யாராக இருக்கட்டும் - அதிகாரம் அங்கே குவிவது ஆபத்து என்பார்.

ஜனநாயகத்தின் உச்சம் இது. எனவே, சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ அதிகாரத்தைக் குவித்துக் கொள் ளாமல், மிகச் சமமாக - யாவும் மக்களுக்குப் பணி செய்கிற இடமாகத்தான் டாக்டர் அம்பேத்கர் வகுத் திருக்கிறார்.

அதிகாரம் மக்களிடத்தில்தான்!

இங்கே எஜமானர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்ல; அதானிகளோ, அம்பானிகளோ, முப்படைத் தளபதிகளோ அல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் மக்களிடத்தில்தான்.

அதை சொல்லுகின்ற துணிச்சல், இந்திய மண்ணில், தமிழ் மண்ணில் முதலில் யாருக்கு இருந்தது என்றால், அது தந்தை பெரியாருக்குத்தான்.

தந்தை பெரியார் 

இன்னும் அதிகமாகத் தேவைப்படுவார்!

மக்களுக்கு சேவை செய்கின்ற சேவகன்; கூலியாள் - பணியாள். யாரைப் பார்த்துக் கேட்கிறார், உச்சநீதிமன்ற நீதிபதியைப் பார்த்துக் கேட்கிறார். அதுதான் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரை எளிதில் கடந்து செல்ல முடியாது, யாராக இருந்தாலும்.

கல்வி கற்க, கற்க, தொழில்நுட்பம் வளர, வளர, அறிவியல் மேம்பட, மேம்பட - இந்த மனிதர் இன்னும் அதிகமாகத் தேவைப்படுவார்.

அவர் வெறும் மத மறுப்பாளர்; ஜாதி மறுப்பாளர், கடவுள் எதிர்ப்பாளர் என்று கடந்து சென்றுவிட முடியாது.

வாழ்வியல் கோட்பாட்டிற்குள் இருக்கிறார் தந்தை பெரியார்.

வாழ்வோடு இருக்கிறார் தந்தை பெரியார்

சமத்துவத்தில் இருக்கிறார் தந்தை பெரியார்

ஜனநாயகத்தில் இருக்கிறார் தந்தை பெரியார்.

எனவே, அவர் வகுத்த அந்த அடிச்சுவட்டில்தான், அந்தக் கருத்தியலில்தான் இன்றைக்கு மானமிகு ஆசிரி யர் அய்யா அவர்கள் அந்த விசாலமான பார்வையை வெளிப்படுத்துகிறார்.

நான் பழைய  பத்திரிகைகளின் குறிப்புகள் பலவற் றைப் படித்தேன். எல்லாவற்றிற்கும் மீதான விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் கண்டித்துத் தலையங்கம் எழுதிய 

ஒரே இயக்கம் திராவிட இயக்கம்

ஜனாதிபதி, ராணுவத் தளபதிகள், காவல்துறை உயரதிகாரிகள் எல்லோரையும் விமர்சனம் செய்து தலையங்கங்கள் வந்திருக்கின்றன. ஆனால்,  இந்தியாவில், தமிழ்நாட்டில் நீதிபதிகளையும், நீதிமன்றத் தையும் கண் டித்துத் தலையங்கம் எழுதிய ஒரே இயக்கம் திராவிட இயக்கம் - தந்தை பெரியார் - விடுதலைதான்.

தந்தை பெரியார் சொல்வது  ஒரு சார்பியல்- ஆழ் மனங்களில் எனக்கு ஜாதி இருந்தால், ஜாதிகளற்ற ஒரு சமூகத்திற்கு நான் பொருத்தமல்ல - அந்தக் கருத்திற்கு நான் பொருத்தமானவன் அல்ல.

தந்தை பெரியாரின் கருத்தியல்!

என் ஆழ்மனங்களில் மதமிருந்தால், மதமற்ற ஒரு சமூகத்திற்கு நான் பொருத்தமானவன் அல்ல.

உளவியலாக ஒருவன் தாழ்ந்தவன் - நான் உயர்ந்தவன் என்ற கருத்து எனக்கு இருக்குமேயானால், எதன் பொருட்டும் - நிலத்தின் பொருட்டும், செல்வத்தின் பொருட்டும், கல்வியின் பொருட்டோ சக மனிதனைவிட நான் உயர்ந்தவன் என்று ஓர் உளவியல் கூறு, என் ஆழ்மனதில் இருக்குமேயானால், நீதி அங்கே தடுமாறும் என்கிறார் தந்தை பெரியார்.

அவர் எவ்வளவு பெரிய மேதை பாருங்கள்.

இதை அவர் சொன்னது, 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால்!

நீதிபதிகளின் மனங்களில், மதம் இருக்கின்ற காரணத்தினால், நீங்கள் தடுமாறுகிறீர்கள்.

நீதிபதிகளின் மனங்களில் ஜாதி இருப்பதால், நீங்கள் தடுமாறுகிறீர்கள்.

நீதிபதிகளின் மனங்களில், செல்வச் செழிப்பு இருப்ப தால், வளம் பற்றிய வேட்கை இருப்பதால், நீங்கள் தடுமாறுகிறீர்கள்.

எவ்வளவு ஆழமாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் தந்தை பெரியார்.

கிரேக்கத்தில் சாக்ரட்டீசின் கருத்தை ஏற்காமல் நீதிமன்றம் நீங்கள் விஷம் அருந்தி சாகவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 

சாக்ரட்டீஸ் சிரித்துக்கொண்டார்.

ஏன்? எப்படி? எதற்கு? கேள்வியை எழுப்பிக் கொண்டே இருந்தால்தான் உலகம் முன்னேறும்; சிந்தனை முன்னேறும் என்று சொன்னார்.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீஸ் சொன்னதை தமிழ் மண்ணில் அதைப்பற்றி, அந்த வழியொற்றி இன்றைக்கும் நடைபோடுகிற இயக்கமாக திராவிடர் கழகம் இருக்கிறது - தந்தை பெரியாரின் கருத்தியல் இருக்கிறது.

ஜனநாயகத்திற்கான குறியீடு; சமத்துவத்திற்கான குறியீடு!

இது ஒரு சமூகநீதிக்கான இடம் மட்டுமல்ல; ஜனநாய கத்திற்கான குறியீடு; சமத்துவத்திற்கான குறியீடு; அடுத்தத் தலைமுறைக்கான குறியீடு.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகமும், தமிழ்நாடு சட்டமன்ற நெறிகளும், நிறுவனங்களின் மாண்புகளும் காக்கப்படவேண்டும் என்று சொன்னால், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் இந்த மகத்தான இரண்டு மனிதர்களையும் கடந்து சென்றுவிட முடியாது.

போராட்டம் வெற்றி பெறவேண்டும்!

அடுத்த தலைமுறையினரை ஈர்ப்பதற்கான பிரம் மாண்டமான பிரச்சார முறைகளில் நாம் ஈடுபட வேண்டும். திராவிடர் கழகம் தொடங்கியிருக்கின்ற இந்தப் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

இந்தப் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் சிறப் புரையாற்றினார்.


No comments:

Post a Comment