23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை
சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும் அளவைவிட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது. நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு-ஜாதி இழந்தவனெனவும், தேசத்துரோகியெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும், அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன், விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.
இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன். உங்கள் வரவேற்புப் பத்திரத்துக்கு நன்றி செலுத்துகிறேன்.
வீண் விவாதத்தைக் கிளப்புகிறார்
இப்போது என்னை பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கும் விஷயம், கடவுள், மதம் என்பதாகும். வேறு எந்த விதமான பிரச்சாரகர் வந்தபோதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களைபற்றி அவர்களை கேட்பதில்லை. ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள். நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவே சீவன மார்க்கராகவோ கொண்டவனுமல்ல அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றியே பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல. எங்களுடைய வேறு முக்கியமான-நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும் போது, அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடையில் இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களை கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படி இருந்தபோதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை.
கடவுள் - மத கற்பனை
மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல்- தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது. காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும், அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான். இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை, சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்கு கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப் பற்றி கவலை இல்லை, அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்துக்கு தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர-சுகவாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார்-மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு-கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கேகொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.
மதம்
உதாரணமாக, மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து, ஆண்டான் அடிமை தன்மைமாறி ஆணும்பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழிந்தால் தமது உயர்வும் தமது பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கேபோட்டு, எங்களைத் தடைப்படுத்தும் போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்கவேண்டுமெனக் கூறுகிறோம். தீண்டாமையை மேல்ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்கிறோம். தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது. அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டிவந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, 'மதம் போச்சுது மதம் போச்சுது' என்று விஷமப் பிரச்சாரம் செய்து, எங்களை மதத் துரோகி என தூற்றிட அவர்களால் சுலபமாக முடிகிறது.
"கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக் கொண்டு பார்ப்போம். அதுவும் இப்படித்தான். அதாவது கடவுளைப் பற்றி விளக்க இதுவரை, எத்தனையோ ஆத்ம ஞானிகள் சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடுபட்டிருக்கின்றனர், ஆனால் முடிந்ததா? முடிவு இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரியவைக்க முடிந்ததா?
"கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது" என அடுக்கிகொண்டே போய் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.
இன்று இந்நாட்டினரால் மனித 'ஆத்மாவுக்கு' மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி 'மகாத்மா' என்று சொல்லப்படுபவராகிய தோழர் காந்தியார் 'சத்தியம் தான் கடவுள்' என்கிறார்!
சைவசமயிகள் (அன்பே சிவம்) 'அன்பு தான் கடவுள்' என்கின்றனர்.
இராமலிங்க சுவாமிகள் என்று சொல்லப்பட்ட வள்ளலார் பெரிய அறிவுதான் கடவுள் (அறிவே தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோட்ச நரகங்களைக் கொடுக்கும் கடவுள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்களென பச்சையாகச் சொல்லிவிட்டார். தோழர்களே! உங்களை ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன் இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?
ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது, அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித வாழ்வுக்கு நன்மையும் அவசியமுமான காரியங்கள் குணங்கள் எவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள். இதை பார்த்தாவது மனிதனுக்கு அறிவு உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன். ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி எவரிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின் படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாக கருதப்படுவானா ? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்று தான் கேட்கின்றேன். அன்பு அறிவு உண்மை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்ன தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட கடவுளைப் பற்றி கவலைப்படாமல் கடவுளுக்குப் பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தன் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன். இந்த உணர்ச்சியினாலேயேதான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல் நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன். நான் கூறின மேல்கண்ட தத்து வங்கள் மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.
மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர். ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்கஇடமில்லையே!
மகா அறிவாளியான சங்கராச்சாரியார் "அஹம் பிரம்மாம்சி நானே கடவுள்" என்று கூறினார். அதற்காக சைவர்கள் அவரைத் தானே "கடவுளெனும் பாதகத்தவர்" என்று தண்டிப்பதுமுண்டு.
இதைப்போன்றே சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் "இயற்கையே கடவுள்" எனக் கூறி விவாதத்தை முடித்துக் கொண்டார். அது கண்ட சைவர்கள் அவர் களைச் சீறவே பிறகு அவர், அழகே கடவுள் அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன் ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது. என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற் போல் அவர் அடிக்கடி "என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்" என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.
இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல் "இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா" என்று கேட்கின்றனர். ஏதோ ஒரு சக்தி இருக்கட்டும். இருக்க வேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்து விட்டோமா? அதைப் பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன். மேலும் மனித சமுதாயம் ஒற்று மையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா? என்று கேட்கிறார்கள். வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ, வாழ்க்கையில் நீதி அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ, அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர் மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்திலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படி செய்து விட்டார்கள்.
உதாரணமாக, ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரை யாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத் திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமோ? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்ரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணிய ஸ்தலயாத்திரையை புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் - ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா?
இன்று சிறையிலுள்ள 2 லட்சம் கைதிகளில் சம்சய வாதிகளோ, (கடவுள் பற்றி கவலைப் படாதவர்கள்) நாஸ்திகர்களோ, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள். மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித அசந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும். ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாபநஷ்டப்படி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
- 'குடிஅரசு', 30.01.1938
No comments:
Post a Comment