வடமாநிலங்களில் நிலநடுக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

வடமாநிலங்களில் நிலநடுக்கம்

கவுகாத்தி, பிப். 21- புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது. 

இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலபிரதேசத்தில் 19.2.2023 அன்று மதியம் 12.12 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்க மானது, பூடான் எல்லை அருகே அமைந்துள்ள மேற்கு காமெங்கில் 10 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மய்யம் தெரிவித்தது. இந்த நில நடுக்கத்தின் தாக்கம் மத்திய வடக்கு அசாமில் பல இடங்களில் உணரப்பட்டது. இதே போன்று பூடானின் கிழக்கு பகுதியிலும் இந்த நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன. வட மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் சிலவற்றிலும் (19.2.2023) மதியம் 12.54 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கம் இந்தூருக்கு 151 கி.மீ. தென்மேற்கில் மய்யம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கம், பர்வானி, அலிராஜ்பூர், தார், ஜாபுவா, கார்கான், இந்தூர் மாவட்டங்களில் உணரப்பட்டது.

துருக்கியிலும், சிரியாவிலும் சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான் மக்கள் உயிரிழந்த நிலையில், வட மாநிலங்களில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பதற்றத்தில் தவித்தனர். நில நடுக்க பாதிப்புக்குள்ளான இடங்களில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தனர். அதே நேரத்தில் இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்யலாம் 

- தேர்வுத்துறை தகவல்

சென்னை, பிப். 21- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் 20.2.2023 முதல் திருத்தம் செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நடப்பு கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர் களின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து கொள்வதற்கு தற்போது இறுதிவாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் 20.2.2023 முதல் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை - தமிழ்நாடு அரசு ஆணை

திருச்சி, பிப். 21-  திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் நலத்துறை திருச்சி உதவி ஆணையர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களின் 1947ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ், அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையின் படியும், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பண்பாட்டுத் துறை அறிவுரையின்படியும் 5:3:2 என்ற விகிதத்தில், முதன்மையாக தமிழில் பெரிய எழுத்துகளிலும், இரண்டாவதாக ஆங்கிலத்திலும், மூன்றாவதாக அவரவர் விரும்பும் பிற மொழிகளிலும் அமைக்க வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றி பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள், அனைத்து வணிக நிறுவனங் களிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய எழுத்துகளில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பாக, ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட் டுள்ளது. தமிழில் பெயர்ப் பலகைகளை 5:3:2 விகிதாச்சாரத்தில் வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியாக ஆய்வு மேற்கொண்டு, வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment