சென்னை, பிப். 6- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தனது 13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதா யத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர் மேனாள் முதலமைச்சர் கலைஞர். தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றிய மகத்தான தொண்டைப் போற்றும் வகையில் அவருக்கு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள நினைவி டத்துக்கு அருகில், கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இம்முடிவை எதிர்த்து அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். கடற்கரை மணல் பரப்பிலிருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப் பதால் சுற்றுச் சூழலுக்கு என்ன பாதிப்பு வந்துவிடும் என்று தெரியவில்லை. சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாதமாக நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதி காலையில் ஆய்வு செய்து, அங்கு ஆமை களோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது.
அனைத்து துறைமுகங்களும் கடலில்தான் அமைந் துள்ளன. இதைப் பார்த்தும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவுக்கு கடலில்தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்கள்? இந்தியாவில் முதன்முறையாக கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் புதுச் சேரி அரசால் அமைக்கப்பட உள்ளது. மும்பை மரைன் டிரைவ் கடற்கரையிலிருந்து ஒன்றரை கி.மீ. உள்ளே அரபிக் கடலில், மராட்டிய அரசு சார்பில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில் லையே? தமது கடுமையான உழைப்பினால் 80 ஆண்டுகால தமிழ்நாடு, தேசிய அரசியலை நிர்ணயித்த ஒரு தலைவருக்கு சிறந்த வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைத்து சிறப்புச் செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment