ஒரு ஓநாய் ஜீவகாருண்யம் பேசுகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

ஒரு ஓநாய் ஜீவகாருண்யம் பேசுகிறது!

'மாட்டிறைச்சி சாப்பிட்டோரும் ஹிந்து மதத்துக்கு திரும்பலாம். அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக் கின்றன’ - நாங்கள் வலதுசாரிகளும் இல்லை இடதுசாரிகளும் அல்ல. நாங்கள் தேசியவாதிகள்' என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தீன்தயாள் நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே பேசுகையில் கூறியதாவது: "நாங்கள் வலதுசாரிகளும் இல்லை - இடது சாரிகளும் அல்ல. நாங்கள் தேசியவாதிகள். தேசத்தின் நலனுக்காக மட்டுமே சங்கம் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) செயல்படப் போகிறது.  இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் ஹிந்துக்கள், ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் ஹிந்துக்கள். அவர்களின் வழிபாட்டு முறை வேறுபட்டிருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் ஒரே டி.என்.ஏ. (மரபணு). ஆர்.எஸ்.எஸ். ஒரு கிளையை மட்டுமே அமைக்கும். ஆனால், இதன்மீது ஆர்வம் கொண்ட தன்னார்வலர்கள் அனைவரும் எங்களின் பணிகளைத் தொடர்வார்கள். அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே இந்தியா விஸ்வ குருவாக மாறி உலகை வழிநடத்தும். 

இந்தியாவில் வாழ்வோர், தங்கள் மூதாதையர்களை ஹிந்துவாகக் கொண்ட அனைவருமே ஹிந்துக்களே. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கோல்வால்கர், மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பலாம் என தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலும், மதம் மாறியவர்களுக்காக ஹிந்து மதத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. மதம் மாறியவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு உள்பட்டு மாட்டிறைச்சி உண்ண நேர்ந் திருக்கலாம். அதற்காக அவர்களுக்கான கதவுகள் அடைக்கப்பட் டிருக்கவில்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு ஏதுவாக ஹிந்து மதத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” 

"ஆர்.எஸ்.எஸ். அனைத்து மதங்களையும் ஹிந்து மதத்தின் பிரிவுகளுள் ஒன்று என்கிறது. மக்கள் வெவ்வேறு மதங்களில் இருந்தாலும் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். பணிகளை செய்யலாம். சுயம் சேவக் மிகவும் கடினமான நடைமுறைகளைக் கொண்டது அல்ல, அனைவருக்குமானது - நெகிழ்வானது.  ஆர்,எஸ்,எஸ் அமைப்பைப் புரிந்து கொள்ள உங்களையே அர்ப்பணிக்க வேண்டும். வெறும் ஆதரவாளர்களாக இருந்தால் ஒன்றும் பயனில்லை  - உங்களைப் பண்படுத்தி தலைசிறந்த மக்களாக உருவாக்குவது எங்களின் (ஆர்.எஸ்.எஸ்.)  பணி.வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அரசமைப்பு சட்டம் நல்லது என்றும், அதை நடத்துபவர்கள் கெட்டவர்கள் என்றால், அரசமைப்பு சட்டத்தால் கூட எதுவும் செய்ய முடியாது. நமது அடுத்த தலை முறை சமூக இழிவை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க, நீர், நிலம் மற்றும் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். நமது மண்ணை நமது மண்ணின் கலாச்சாரத்தை நாம் தான் பாதுகாக்கவேண்டும், அந்த பாதுகாப்பிற்காக வழிகாட்டியாக சமரசமின்றி ஆர்.எஸ்.எஸ். செயல்படும்" என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகியான ஜே.நந்தக்குமார், ‘இந்தியாவில் அசைவம் உண்பது குறித்தான விலக்கல் அவசியமில்லை. அசைவ உணவை தடைசெய்யவும் தேவையில்லை. ஆனால் அந்த அசைவம் மாட்டுக்கறியாக இருக்கக்கூடாது’ என்றார். இதே போன்று கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், அதற்கான எதிர்ப்புகள் மற்றும் தாய் மதம் திரும்புவோரை வரவேற்பது உள்ளிட்டவையும் ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் தற்போது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்திருக்கும் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றி மாற்றிப் பேசுவார்கள்.

மாட்டுக் கறி சாப்பிடலாம் - ஆனால் பசு மாட்டுக் கறியைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?

உண்பது, உடுப்பது, உறங்குவது தனி மனிதனின் பிரச்சினை! அடுத்தவரின் குளிர் சாதனப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று முகர்ந்து பார்த்து, அது மாட்டுக்கறிதான் என்றுகூறி அடித்துக் கொன்ற கொலைகாரக் கூட்டம் எது?

வெளிநாட்டுக்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்கள் யார்? இந்த ஆர்.எஸ்.எஸ். பிஜேபியைச் சேர்ந்தவர்கள் தானே!

ஹிந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்குச் செல்லக் காரணம் என்ன?  ஜாதியும், தீண்டாமையும்தானே! முதலில் இவற்றை ஒழிப்பதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லி வீதிக்கு வரட்டும் இந்தக் கூட்டம்! சங்கர மடத்தில் ஒரு அமாவாசையை உட்கார வைக்கட்டும். அதற்குப் பிறகு ஹிந்து மதத்தை உயர்த்திப் பிடிக்கட்டும்!

ஒன்றே நாடு, ஒன்றே மதம், ஒன்றே கலாச்சாரம் என்போர் ஒரே ஜாதி என்று சொல்லட்டுமே பார்க்கலாம்? ஓநாய் ஜீவகாருண்யம் பேசலாமா? ஆர்.எஸ்.எஸ். மத மாற்றம் பற்றிப் பேசலாமா?

No comments:

Post a Comment