கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: ‘டார்மெட்ரி’ வகை தங்கும் அறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: ‘டார்மெட்ரி’ வகை தங்கும் அறைகள்

சென்னை, பிப். 16- கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக டார்மெட்ரி வகையிலான தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பேருந்துகளுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது மேலும் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானம் தொடர்பான அனைத்து பணிகளும் வரும் மார்ச் இறுதியில் நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், உணவகம் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டி உள்ளது. இந்த வசதிகளை முழுமையாக முடித்த பிறகு பேருந்து நிலையத்தை திறந்தால் தான் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், பயணச் சீட்டு அலுவலகம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

டார்மெட்ரி என்பது படுக்கை வசதி கொண்ட சிறிய அறையாகும். அதாவது ஒரு பெரிய அறை பகுதி பகுதியாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு படுக்கை அளவுக்கு இட வசதி இருக்கும். இதில் ஒருவர் மட்டும் தங்க முடியும். இதில் தங்குபவர்களுக்கான நவீன குளிய லறை மற்றும் கழிப்பறை வசதிகள் பொதுவானதாக இருக்கும்.

No comments:

Post a Comment