தந்தையுமானவர்
5-2-2023 அன்று கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்களின் வாழ்விணையர் மறைந்த இரா. வசந்தியின் படத்தைத் திறந்துவைத்து நினைவேந்தல் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் "இராமகிருட்டிணன் கலங்காத எங்கள் பிள்ளை. இன்று கலங்கியதை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்துக் கலங்கினேன்" என்று பேசிய வரிகளை விடுதலையில் படித்ததும் என்னையும் அறியாமல் கண்கலங்கினேன்.
சிறு வயதில் தாயை இழந்தவன். கண்டிப்பு தந்தை மறைந்து கால் நூற்றாண்டாகி விட்டது. தந்தை பெரியாரின் கொள்கை என்ற ஒளியின் ஒரே வழிகாட்டலில் வாழும் எம்போன்றோர்க்கு மட்டுமல்ல, எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைக்காரர்கள் என்ற குருதி உறவுக்குரியவர்கட்கு மட்டுமல்ல - இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழர்க்கும், தமிழராட்சிக்கும் தாயும், தந்தையுமானவர் ஆசிரியர் ஒருவரே என்று எண்ணியதால் பெருமிதத்தில் நெஞ்சம் விம்மி கண்கள் பனித்தேன். வாழ்க தமிழர் தலைவர்.
ஞான.வள்ளுவன்
வைத்தீசுவரன்கோயில்.
சேலத்தில் ஒரு சுவையான உரையாடல்
சேலத்தில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் ஒரு தங்கும் விடுதியில் இருந்த போது அவரை சந்திக்க கழகத்தின் முன்னோடிகளுடன் நானும் சென்றிருந்தேன். அவரை சந்தித்து விட்டு நான் மட்டும் கீழே வந்து அமர்ந்திருந்தேன் அப்போது அந்த விடுதி மானேஜர் இங்கு வந்து தங்குபவர்களை பார்க்க ஒருவர், இருவருக்கு மேல் அனுமதி இல்லை என்றார்.அதற்கு நான் "எங்கள் கழக தோழர்கள் உங்கள் விதிமுறைகளை அறியாமல் உங்கள் விடுதியில் ரூம் புக் செய்து விட்டார்கள்.இனி அந்த தவறு நடக்காது நாங்கள் உங்கள் விடுதியில் ரூம் புக் செய்வதை இனி தவிர்த்து விடுகிறோம்" என்று சொன்னவுடன்.அவர் பேச்சை திசைதிருப்ப "என்னிடம் உங்களைப்போல் உள்ளவர்கள் சேலத்தில் எத்தனை பேர் உள்ளீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு நான் "ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மருத்துவமனைகள், எத்தனை பள்ளிக்கூடங்கள்,எத்தனை காவல் நிலையங்கள் உள்ளனவோ அதைப் போல இருக்கிறோம். சில ஊர்களில் தீயணைப்பு நிலையங்கள் போல் குறைவாககூட இருப்போம்.இந்தியா முழுக்க எத்தனை இராணுவ வீரர்கள் இருப்பார்களோ அதைப் போல இருப்போம்" என்று சொன்னவுடன் அவர் முகத்தில் சிறிது மாற்றம் தெரிந்தது. பிறகு என்ன நிகழ்ச்சிக்காக உங்கள் பொதுச்செயலாளர் வந்துள்ளார் என்று கேட்டார்.
அதற்கு நான் தமிழ்ச் சங்கத்தில் பகுத்தறிவு பயிற்சி நடக்கிறது அதில் கலந்து கொண்டு பயிற்சிக்கு வந்திருப்பவர்கள் மத்தியில் "காலில் பட்ட மாட்டுக் கழிவை உடனே நீர் விட்டு கழுவி விடுகிறோம். அதே கழிவை உருண்டை பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று கும்பிடு போடுகிறீர்கள் இது சரியா? கன்னத்தில் அலகு குத்தும் பக்தர்கள் ஒருவர் அதிக பக்தி இருந்து குரல் வளையில் அலகு குத்தமுடியுமா?, நெருப்பு குண்டத்தில் இறங்கி ஓடும் பக்தர்கள் உருளுதண்டம் போடுவார்களா? கோவிலுக்கு கொண்டு போகும் பக்தர்களின் தேங்காயை உடைத்து மேல் மூடியை மட்டுமே பார்ப்பன அர்ச்சகர்கள் எடுத்துக் கொண்டு கீழ் மூடியை மட்டுமே திருப்பி கொடுப்பது ஏன் தெரியுமா? அதில் தான் தேங்காய் பருப்பு கெட்டியாக இருக்கும் அதை நீக்கி வெய்யிலில் காயவைத்து ஆட்டி அதில் கிடைக்கும் முதல் எண்ணெய்யில் குழம்பு,பலகாரம் செய்துவிட்டு மீதம் உள்ள எண்ணெய்யை ஓட்டலுக்கு விற்று விடுவார்கள்" என்பது போன்ற இன்னும் பல பகுத்தறிவு விளக்கங்களை எங்கள் பொதுச் செயலாளர் சொல்லுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கழகத்தின் பொறுப்பாளர்கள் கீழே வந்ததும் அவரிடம் போய் வருகிறேன் என்று சொன்னபோது அவர் எழுந்து நின்று வணக்கம் சொல்லி "இனி நீங்கள் அவசியம் எங்கள் விடுதிக்கு வாருங்கள்" என்று சொல்லி விடை கொடுத்தார். அங்கே அமர்ந்து இருந்தவர்கள் பேப்பர் படிப்பதை நிறுத்தி விட்டு எங்களின் உரையாடலை கேட்டதை பார்க்க முடிந்தது.
- ஓமலூர் சவுந்தரராசன்.
பொதுக்குழு உறுப்பினர்
No comments:
Post a Comment