கோவையில் நடைபெற்ற இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கருத்துரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

கோவையில் நடைபெற்ற இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கருத்துரை!

 கோவை இராமகிருஷ்ணன் எங்கள் கொள்கைப் பிள்ளை பொதுவாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருந்தவர் தோழர் இரா.வசந்தி!

கோவை,பிப்.6, கோவை கு.இராமகிருட்டிணன்  வாழ்விணையர் இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, புலவர் செந்தலை ந.கவுதமன் உள்ளிட் டோர் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்  வாழ்விணையர் இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 5-2-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 அளவில், கோவை ,சுங்கம், புலிய குளம் சாலை விக்னேசு மஹாலில் நடைபெற்றது.  இந்த படத் திறப்பு நிகழ்வுக்கு தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா தலைமை வகித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது பெற்ற புலவர் செந்தலை 

ந.கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அரசியல், சமூக இயக்கப் பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரையாற்றினர்.

ராமகிருஷ்ணன் எங்கள் கொள்கைப்பிள்ளை!

இறுதியாக ஆசிரியர் நினைவேந்தல் உரையாற்றினார். அவர் தனது உரையில், துவண்டு கிடக்கின்ற ராம கிருஷ்ணனை தொடர்ந்து பணிகளைச் செய்ய அவரை ஊக்கப்படுத்துவதற்காக இந்த நினைவேந்தல் என்று தொடங்கினார். தொடர்ந்து, “ தோழர் ராமகிருஷ்ணன் எங்கள் பிள்ளை. எங்கள் கொள்கைப்பிள்ளை; இது ஒரு பெரிய கொள்கைக்குடும்பம்” என்று குறிப்பிட்டார். அரங்கில் உணர்ச்சி பெருக்கெடுத்து கைதட்டல்களால் அதிர்ந்தது அரங்கம். உணர்ச்சிப்பெருக்கு அடங்குவதற்குள், “ஈரோடு எங்களை இணைத்தது! எப்போதும் ஈரோட்டுக்கு இணைத்துத்தான் பழக்கமே தவிர பிரித்துப்பழக்கமில்லை. எங்களை மட்டுமா இணைத்தது ராமகிருஷ்ணனையும், வசந்தியையும் இணைத்தது” என்றதும் உற்சாகத்திலும் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து, “இன்னமும் இது ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது. என்னுடைய இணையர் ஒரு நல்ல அடிமையாக இருந்தால் எனக்கு வசதிதான் என்று நானே நினைப்பேன். ஆனால், பெரியார் தந்த புத்திக்குப் பிறகு அதற்கு இட மில்லை. சமத்துவத்தைத்தான் நினைக்க வேண்டியிருக்கும். ஆண்களைவிட பெண்கள் எவரையும் சரியாக எடை போடுவார்கள். ராமகிருஷ்ணன், வசந்தி இருவரும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எனது இணையர் சொன்னார். எனக்குத் தோன்றவில்லை. பெண்களின் பார்வை கூர்ந்த பார்வை. ஆணாதிக்க மனப் பான்மைதான் அதை அங்கீகரிக்க மறுக்கிறதே தவிர, நம்மைவிட ஆயிரம் மடங்கு மகளிர் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை மறுக்கமுடியாது. 

ராமகிருஷ்ணனைப் பொறுத்தவரையிலே அவருக்கு காதலிக்க நேரமில்லை என்று அவரையே சுட்டிக்காட்டி சொன் னதும் மேடையிலிருந்தவர்களும், பார்வையாளர்களும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியுடன் சிரித்தனர். மேலும் அவர், கலங்காத எங்கள் பிள்ளை கலங்கியதும் ஒரு தந்தை நிலையில் நானும் கலங்கி னேன். ஆனால், ஒரு பகுத்தறிவுவாதி, ஒரு பெரியார் தொண்டன் கலங்கக் கூடாது என்ற உணர்வில் அடக்கிக் கொண்டிருக்கிறேன் நான் என்று ஆசிரியர் தழுதழுப்புடன் குறிப்பிட்டதும், மகிழ்ச்சியில் சிரித்தவர்கள் உணர்ச்சி வயப்பட்டு அசையாமல் ஆசிரியரையே கண்கொட்டாமல் பார்த்தனர். ஆசிரி யரும் சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு மறுபடியும் பேசினார். ஆசிரியர் பழைய நினைவுகளில் மூழ்கி, ”யாரும் அறியாத ஒரு தகவலைச் சொல்கிறேன்" என்ற பீடிகையுடன், ”அய்.ஜி. சிறீபால் அவர்கள் என்னுடன் ஒரு முறை தொலைப்பேசியில் பேசி, உங்கள் இளைஞரணியில் இருக்கின்ற ராமகிருஷ்ணன் ஓயாமல் போராட்டம் நடத்துவதாகவும், அவரைக் கொஞ்சம் இடைவெளி கொடுக்கச் சொல்லுங்கள் எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது” என்று வேண்டுகோள் விடுத்ததைச் சொல்லி, அப்படிப்பட்ட போராட்டப் புயல் ராமகிருஷ்ணன் என்று அவரை அடையாளப்படுத்தினார். பொது வாழ்க் கையில் வெற்றி பெற்றவர்கள் பற்றி ஒரு முக்கியமான கருத்தைச் சொன்னார். அதாவது, பொது வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்கு நமது இணையர்கள் தான் காரணம். இதை நாம் சொல்வ தில்லை. அவர்கள்தான் அஸ்திவாரம். அடிக்கட்டுமானம். அது வெளியே தெரிவதில்லை என்று கூறிவிட்டு, ஒரு புதிய கோணத்தில் ஒரு தகவலைச் சொன்னார். அதாவது, நாகம்மையார், ஈ.வெ.கி. சம்பத்தின் அண்ணன் ஆகி யோர் இறந்த போது எழுதிய இரங் கலைவிட சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மறைந்த போது தந்தை பெரியார் எழுதிய இரங்கலையும் சொல்லி, பொது வாழ்க்கையின் பெருமையை சுட்டிக் காட்டி ராமகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறி உரையை நிறைவு செய்தார்.   

ராமகிருஷ்ணன் ஆற்றவேண்டிய பணிகள் ஏராளம்!

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தனது உரையில், ”ராம கிருஷ்ணனிடம் நான் வியந்து பார்ப்பது, பொதுவாழ்க்கையில் எங்கா வது ஓரிடத்தில் சலனம் வரும். சபலம் வரும். அல்லது இடைவெளி வரும். சேகுவேரா சொல்லுவான் வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் எவன் வாழ்கிறானோ அவன் போராளி! அந்த இடைவெளி வராமல் பார்த்துக் கொண்டதைத்தான்” என்றார். தொடர்ந்து, “நானும் எனது இணையரை இழந்திருக்கிறேன் என்பது பற்றி இங்கே நினைவூட்டினார்கள். என்னுடைய இணையருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. என்னுடைய திருமணத்துக்குப் பிறகுதான் கோவிலுக்குப் போவதை நிறுத்தினார். அந்த இடைவெளி கூட இல்லாமல் ராமகிருஷ்ணன், வசந்தி இருந்திருக்கிறார்கள்” என்று தன்னோடு ஒப்பிட்டு அவரை பெருமைப்படுத்தினார். மேலும் அவர், “கலில் ஜிப்ரான் சொல் வான், வீணையின் நரம்புகளைப் போல வெவ்வேறாக இருங்கள். ஆனால் வாழ்க்கை என்கிற நாதத்தை மீட்டுகின்ற போது எழுகின்ற ஓசை ஒன்றாக இருக்கட்டும்” என்று சுட்டிக்காட்டி, ”அப்படித்தான் என்னுடைய இணையர் இருந்தார். ஆகவே, நீங்கள் கலங்க வேண்டிய காலம் இது அல்ல. நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றன. தொடர்ந்து மேடையைச் சுட்டிக்காட்டி, “ராமகிருஷ்ணனும், ஆசிரி யரும் தனியாக இருக்கிறார்கள். ஆனால், மோடிக்கு எதிரான போர் என்றால் நாங்கள் எல்லோரும் ஆசிரியர் தலை மையில் இணைந்து இயங்குவோம் என்பதற்கு உதாரணமாகத்தான் இந்த மேடை இருக்கிறது” என்றார். தொடர்ந்து, ”ஆசிரியரைப் பார்த்தால் எனக்கு மலைப்பாக இருக்கிறது. 90 வயதில் அவர் இப்படி இயங்குகிறார் என்றால் இதுவெல்லாம் நமக்குப் பாடம்”  ராம கிருஷ்ணன் சமூக பணியில் கவனம் செலுத்தி துயரத்தை மறக்க வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டினார். ஆசிரியரை சுட்டிக்காட்டி, “உட்கார்ந்த இடத்தில் ஆசிரியர் சொல்லட்டும், கோட் டையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற அந்த மகத்தான மனிதனின் ஆட்சி நடக்கிறது என்றால், அதற்கான பிரச்சாரத்திற்கு ராமகிருஷ் ணன் இனிமேல் டில்லிக்கும் வர வேண் டும். ஆபத்துகள் அதிகமிருக்கின்றன. புத்தகக் காட்சிக்கு சென்றால் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகிறது என்று சொல் கிறார்கள். அந்த புத்தகங்களை வாங்குகிற எங்கோ இருக்கின்ற இளைஞர்களை ஒருங்கிணைக்க ராம கிருஷ்ணன்கள் தேவைப்படுகிறார்கள். இதுதான் வசந் திக்கு அவர் செலுத்துகிற உண்மையான மரியாதை என்று கூறி தனது உரையை ஆதரவு ஆ.ராசா நிறைவு செய்தார். 

இறுதியில் கோவை கு.இராம கிருட்டிணன், மகள் அமுதினி ஆகியோர் நெகிழ்ச்சியுடன் நன்றியுரையாற்றினர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆசிரியர் ராமகிருஷ்ணன் மகன் இந்திரஜித், மகள் அமுதினி ஆகியோரை அழைத்து அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி னார். பிறகு அடுத்தடுத்த நிகழ்ச்சி களுக்காக அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

முன்னதாக தோழர் இரா.வசந்தி அவர்களின் உருவப் படத்தினை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பங்கேற்ற தோழமை கட்சிகளின் நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்நாடு அரசு பாவேந்தர் விருதாளர் புலவர் செந்தலை ந.கவுதமன், காங்கிரஸ் கட்சி அகில இந்திய செயலாளர் மயூரா. ஜெயக்குமார், கோவை மாநகர துணை மேயர் வெற்றிச்செல்வன், மேனாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன், மேனாள் மகளிர் ஆணைய தலைவர் கு.மா.இராமாத்தாள், சி.பி.அய். மாவட்ட செயலாளர் சிவசாமி, வி.சி.க. மண்டல செயலாளர் கலையரசன், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் முஸ்தபா, திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி,  நேருதாசு, சி.பி.அய்.எம்.எல். பொறுப் பாளர் பாலசுப்பிரமணியம், தமிழ்ப் புலிகள் கட்சி பொறுப்பாளர் இளவேனில், தமிழர் விடியல் கட்சி பொறுப்பாளர் இளமாறன், த.வா.க. பொறுப்பாளர் ஸ்டான்லி, ஆகியோர் இரங்கலுரை யாற்றினர். மேலும் இந்த நிகழ்வில் த.பெ.தி.க.கொள்கை பரப்பு செயலாளர் சீனி.விடுதலையரசு, கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், கோவை மாவட்ட கழக தலைவர் செந்தில்நாதன், மாவட்ட காப் பாளர் சந்திரசேகரன், கோவை மாவட்ட செயலாளர் புலியகுளம் கோவை வீரமணி, திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாநில வழக்குரை ஞரணி துணைத் தலைவர் திருப்பூர் பாண்டியன், கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன், சண்.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment