பொதுமக்களுக்குப் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம்.
- ஈஷா அழைப்பு என்ற ஒரு செய்தியை 13 ஆம் தேதியன்று 'தினத்தந்தி' வெளியிட்டுள்ளது. ருத்ராட்சம் என்றால் 'சிவனின் பரவசக் கண்ணீர்த் துளி' என்பதாம்.
சிவனின் அருளைப் பெறும் நோக்கத்தில் ஜக்கி வாசுதேவ் 'ருத்ராட்ச தீட்சை' என்ற வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளாராம்.
இந்த ருத்ராட்சம் அணிவது உடல் மற்றும் மனம் சம நிலை பெற உதவும்; அணிபவரின் ஒளிவட்டத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவியாக இருக்குமாம். எதிர்மறை சக்திகளுக்கு எதிரான கவசமாகவும் இருக்குமாம். ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு ருத்ராட்சத்துடன் தியான லிங்க விபூதி, அபய சூத்ரா, ஆதியோகி புகைப்படம் ஆகியவை அவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என்று ஈஷா அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இதைப் படிக்கும்போது, சற்று அறிவுள்ளவர்களுக்கு வாந்தியும், குமட்டலும்தான் வரும்.
இங்கிலாந்து தொலைக்காட்சியில் ருத்ராட்சம்பற்றி விளம்பரம் வெளியிட்டதற்குத் தடை விதிக்கப்பட்டது.
''இந்த உருத்திராட்சம் இமயமலைக் காடுகளில் மட்டும் கிடைக்கக் கூடியது. இவை இந்த ஈஷா சாமியாருக்கு எப்படி கிடைத்தது? இதனைப் பரிசீலித்து 'ஒரிஜினலா, டூப்ளிகேட்டா' என்று பரிசீலித்துப் பார்க்கவேண்டியது அரசின் கடமையாகும்.
இந்த உருத்திராட்சக் கொட்டையில் கூட வருணம் உண்டாம். வெள்ளை நிறமுடையது வேதிய ஜாதி எனவும், செந்நிறம் உள்ளவை க்ஷத்திரிய ஜாதியெனவும், பொன்னிறமுள்ளவை வைசியருக்குரியன எனவும், கருநிறத்தவை சூத்திரருக்குரியன எனவும் கூறுகிறது புராண அகராதியான அபிதான சிந்தாமணி.
எது எதில் எல்லாம் வருணமும், ஜாதியும்? இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்கிறது.
இந்த ஈஷா வேடதாரிகளோ ருத்ராட்ச மூடப் பொய் மூட்டைகளைக் கட்டவிழ்த்துக் கொட்டுகிறார்கள். இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டாமா?
- மயிலாடன்
No comments:
Post a Comment