செயல்படுவதற்கு திராவிட மாடல் ஆட்சி!
வழிகாட்டுவதற்கு திராவிடர் இயக்கம்!
உத்திரமேரூர்.பிப்.17 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் உத்திரமேரூர், செய்யாறு பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்னை மண்டலத்தில் பரப்புரை பயணம் முடிந்து, முதல் வாகனம் பெரியார் திடலில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு உத்திரமேரூர், செய்யாறு பகுதிகளில் பரப்புரைப் பயணம் தொடங்கியது.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில், 16-02-2023 அன்று நடைபெற்ற திராவிட மாடல் விளக்க, சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளையவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் பு.எல்லப்பன், மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன் , காஞ்சி மாவட்ட அமைப்பாளர் செ.ரா.முகிலன், காஞ்சி மாநகர் தலைவர் ச.வேலாயுதம், காஞ்சி மாநகர் செயலாளர் கி.இரவீந்திரன், மண்டல இளைஞரணி செய லாளர் மு.அருண்குமார், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வக.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிரணி - மகளிர் பாசறை அமைப்பாளர்
சே.மெ.மதிவதனி தொடக்கவுரையாற்றினார். நிறைவாக திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
உத்திரமேருரில் 'பிராமணாள் கஃபே'
முன்னதாக உத்திரமேரூரில் தமிழர் தலைவருக்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் பிரமு கர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவருக்கு மேடை கொள்ளாத அளவுக்கு வரிசையில் நின்று பயனாடையணிவித்து மகிழ்ந்தனர். தமிழர் தலைவர் தனது உரையில், இந்த அரிய வாய்ப்பை வழங்கிய உத்திரமேரூர் தோழர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, இங்கே ’பிராமணாள் காபி கிளப்’ என்று சிலர் நடத்திய போது, பேச்சு வார்த்தையிலேயே அதை மாற்றச் செய்த சிங்காரம் அவர்களின் தொண்டை நினைவு கூர்ந்தார். பிறகு கே.எம்.ராஜகோபால்; அவரை மறக்கவே முடியாது. அவர் தி.மு.க. என்றாலும் தி.க.தி.மு.க! நாங்கள் அவரை அழைத்து நாடு முழுவதும் கூட்டம் நடத்துவோம். சட்ட அமைச்சராக இருந்த செ.மாதவன், கே.பாலன் ஆகிய உள்ளூர் தோழர்களை நினைவு கூர்ந்து பேசினார். தொடர்ந்து, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், சேது சமுத்திரத்திட்டம் மீண்டும் செயல் படுத்த வேண்டும் என்பதுதான் இந்த பரப்புரை பயணத்தின் நோக்கங்கள் என்று சொல்லிவிட்டு, இந்த மூன்றையும் சுருக்கமாக பேசினாலே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வரலாற்று சுவடுகளை சுட்டிக்காட்டுவது போல என்று ஒரு முன்னோட்டம் போலச் சொன்னார்.
தானம் வாங்கிட கூசிடுவான் தமிழன்!
நூறாண்டுகளுக்கு முன்னால் சமூக நீதி எப்படி இருந்தது? என்றொரு கேள்வி கேட்டு, ‘மருத்துவக் கல்லூரிக்கு மனு போடனும்னா கூட சமஸ்கிருதம் தெரிஞ்சிருக்கணும். நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் தான் அந்த விதியை மாற்றினார். அதனால்தான் இன்று நம்மில் பலரும் மருத்துவர்களாக வந்திருக்கிறோம். இன்னாருக்கு இதுதான் என்றிருந்ததை மாற்றி அனைவருக்கும் அனைத்தும் என்று மாற்றியது திராவிடர் இயக்கம்தான் என்றார். மக்களும் ஏற்கெனவே அதை உணர்ந்திருந்ததால் ஆசிரியர் சொன் னதை ஆமோதித்து கைதட்டினர். இன்றைய நிலை என்ன? என்றொரு கேள்வி கேட்டு, ‘இந்தியாவிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருப்பது தமிழ்நாட்டில்தான்!’ என்று சொல்லி முடிக்கும் முன்பே மக்கள் கைதட்டினர். தொடர்ந்து அவர், இந்த சாதனைக்குக் காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர். வட மாநிலங்களில் இப்போதுதான் வந்து கொண் டிருக்கின்றது என்று குறிப் பிட்டு ஒரு முக்கியமான கருத்தை பகிர்ந்து கொண் டார். அதாவது, தமிழ்நாடு நேர்முகமாகவும், மறைமுக மாகவும் அதிகமாக வரி செலுத்துகிறது என்றும், நம்மிடம் வாங்கியதில் கொஞ்சமாகத்தான் திருப்பிக் கொடுக்கிறார்கள் என்றும், கேட்டால், ’நீங்க வளர்ந் திட்டீங்க. அதனால தேவைப் படுகிற மாநிலங்களுக்குக் கொடுக்கிறோம்’ என்று ஒன்றிய அரசு பதில் சொல்லியிருப்பதை எடுத் துரைத்து, இதை பொருளா தாரப் பார்வையைத் தாண்டி, பண்பாட்டு ரீதியாகயும் ஒப் பிட்டுப் பேசினார். அதாவது, ”தமிழன் என்றொரு இன முண்டு! தனியே அவர்க் கொரு குணமுண்டு!” என்ற நாமக்கல் கவிஞரின் பாடலில் வரும், ”தானம் வாங்கிட கூசிடுவான் தமிழன்!” என்ற வரியை நினைவூட்டி, “பிச்சை கேட்கிறவங்க மரியாதை யோடுதானே கேட்கணும்’ என்று சொல்லி, நாம் கொடுக் கும் இடத்திலும், அவர்கள் பெறுகிற இடத்திலும் இருப் பதையும் சுட்டிக்காட்டி, ஆனாலும் நமது சுயமரி யாதைக்கு பங்கமேற்படுகிறது என்ற பொருளில் கூறினார்.. அத்தோடு, “பிராமணன் கூலி கொடுத்தேனும், கொடுக்காமலேனும் சூத்திரனிடம் வேலை வாங்கலாம்” என்ற மனுதர்மத்தின் சுலோகத்தையும் சேர்த்துச் சொல்லி, ஒன்றிய அரசிடம் மாநிலங்களுக்கான நிதிப்பங் கீட்டில் மனுதர்மப் பார்வை உள்ளது என்பதை குறிப்பால் உணர்த்தினார்.
தமிழன் கால்வாய்த் திட்டம்!
தொடர்ந்து நீட் தேர்வைக் கொண்டு வந்ததால் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதை மக்கள் மனத்தை தொடும் வகையில் எடுத்துரைத்தார். அதே சமயம் திராவிட மாடல் ஆட்சி, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என்று மக்களுக்கு அத்தியாவசியமான கல்வி, சுகாதாரத்தில் சாதனைக்கு மேல் சாதனை செய்து கொண் டிருப்பதை தொட்டுக்காட்டினார். கல்விக்காக மக்களுக்கு அளிக்கப்பட்ட பகலுணவு, சத்துணவு, காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட பலவேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார். இறுதியாக சேது சமுத்திரத்திட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சிக் காலத்தில் சர்.ராமசாமி (முதலியார்) கொடுத்த சேது சமுத்திரத்திட்டம் தொடர்பான அறிக்கை, அண்ணா கொண்டாடிய எழுச்சி நாள், கலைஞர் கப்பல் துறையை கேட்டுப்பெற்று, டி.ஆர்.பாலு மூலம் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பணிகள் முடிந்து 2008 இல் கப்பல் ஓடும் என்ற நிலையில் பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலால் திட்டம் நிறுத்தப்பட்ட வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார். பா.ஜ.க.வின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தினார். தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் அனைத்துக் கட்சியினர் ஒத்துழைப்போடு சட்ட மன்றத்தில் சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதைப் பாராட்டினார். அப்போதுதான் சேது சமுத்திரத்திட்டம் என்பதற்கு ”தமிழன் கால்வாய்த் திட்டம்” என்று பெயரிடப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தி.மு.க.தலைமை செயற்குழு நாகன், வி.சி.க.மாவட்ட செயலாளர் செல்வராஜ், தி.மு.க.பேரூர் கழக செயலாளர் பாரிவள்ளல், தி.மு.க.சொற்பொழிவாளர் நாத்திகம் நாகராசன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் கார்த்திக், த.வா.க. மாவட்ட அமைப்பாளர் பொன்மொழி, சமூகநீதி செயற்பாட்டாளர் பெருமாள் குமாரசாமி, தி.மு.க.உத்திரமேரூர் மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன் நன்றி கூறினார்.
செய்யாறு
உத்திரமேரூரில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பரப்புரைப் பயணக்குழு செய்யாறு நோக்கிச் சென்றது. செய்யாறு நகர் ஆரணி கூட்டுரோடு பகுதியில் நடைபெற்ற திராவிட மாடல், சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார். நகர தலைவர் காமராசன், ப.க. மாவட்ட தலைவர் வி.வெங்கட்ராமன், அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க வுரையாற்றினார். இந்த பரப்புரை கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் ப.க. துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் பார்வதி சீனிவாசன், வி.சி.க.தொகுதி செயலாளர் குப்பன்(எ) வெற்றிவளவன், வி.சி.க. நகர செயலாளர் சாண்டில்யன், சி.பி.எம். தோழர் பழனி, சி.பி.அய். வட்டார செயலாளர் வெங்கடேசன், ம.ம.க.நகர தலைவர் கமால், ம.ம.க.நகர செயலாளர் ஜஹாங்கிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
டிஜிட்டல் தட்டில் எடைக்கு எடை நாணயங்கள்!
தமிழர் தலைவருக்கு செய்யாறிலும் மிகச்சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவர் பேசுவதற்கு முன்னதாக அவரது எடைக்கு எடை பத்து ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அறிவித்ததும் ஆசிரியருக்கு இரண்டு விதங்களில் வியப்பு! ஒன்று அறிவிப்பு, மற்றொன்று எடைக்கு எடை என்று சொல்கிறார்களே, ஆனால் தராசைக் காணவில்லையே என்ற வியப்பு! அதில் இரண்டாவது வியப்புதான் கூடுதல் என்பது அவரது முகக்குறிப்பிலேயே தெரிந்தது. பிறகு அவர், “எப்படி கொடுக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டேவிட்டார். மேடையின் இருக்கைகளுக்கு முன்னால் இருந்த இரண்டு டிஜிட்டல் எடை பார்க்கும் கருவி சின்னச் சின்னதாக வைக்கப்பட்டிருந்ததைக் காட்டினார்கள் மாவட்டத் தோழர்கள். அதே வியப்புடன், “இதிலா?” என்று கேட்டபடியே ஒரு எடைத்தட்டில் அமர்ந்தார். அடுத்த எடைத் தட்டில் ரூபாய் நாணயங்கள் இருந்த பைகள் வைக்கப்பட்டன. ஆசிரியர் மக்கள் முன் கை கூப்பியபடி இருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி! உணர்ச்சி பெருக்கெடுத்து தோழர்கள் ஒலி முழக்கங்கள் செய்து அந்த உணர்ச்சியை தணித்துக் கொண்டனர். பிறகு ஆசிரியர் எழுந்து இருக்கையில் அமர்ந்தார். தோழர்களிடம் தொகை மதிப்பு எவ்வளவு என்று கேட்டார். 78,000 ரூபாய் என்று சொன்னதும், உடனடியாக ஆசிரியர் பூரிப்புடன் சிரித்துக் கொண்டே, ”அருணாச்சலம் இருந்தால் இதை முழுமையாக் கியிருப்பார்” என்றதும் சிரிப்பு அலையலையாக எழுந்து அடங்கியது. ஆசிரியர் மேடையேறும் போது தோழர் மதிவதனி பேசிக்கொண்டிருந்தார். அதே போல் ஆசிரியரின் அருகில் பெண் நகர் மன்ற உறுப்பினர் அமர்ந்திருந்தார். தொடக்கத்தில் அவர் தள்ளி நின்றிருந்தார். ஆசிரியர் அவரை அருகில் வந்து அமருமாறு பணித்தார். கேட்க வேண்டுமா? இந்த இரண்டு பெண் ஆளுமைகளை முன்னிறுத்தியே தனது உரையைத் தொடங்கினார்.
பேத்தி சரஸ்வதி நீதிபதி சரஸ்வதி ஆனது எப்படி?
தமிழர் தலைவர் கேள்வி!
"இங்கே எம்,எல் படித்த தோழர் மதிவதனி இருக்கிறார். நகர் மன்றத் தலைவர் இருக்கிறார். 1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், ‘பெண்கள் கல்வி வேலை வாய்ப்புகள் பெற்று எல்லா துறைகளிலும் வர வேண்டும்’ என்று தீர்மானம் போட்டார். அப்போது மற்றவர்கள் ‘பெரியார் என்னமோ சொல்றாரு. இதெல்லாம் நடக்குமா என்றார்கள்’ இப்போது நடந்திருக்கிறதா இல்லையா? என்று எடுத்த எடுப்பிலேயே உச்சத்துக்குப் போனார். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒப்பிட்டுச் சொன்னவிதம் மக்களை உணர்ச்சி கொள்ள வைத்தது. கைதட்டி அவர்களின் உணர்ச்சிக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து அவர், பீகாரிலிருந்து வந்து சென்னை உயர்நீதி மன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இருந்தவர் தனது வழியனுப்பும் விழாவில், ’இந்தியாவிலேயே அதிகமான பெண்கள் நீதிபதிகளாக இருப்பது தமிழ்நாட்டில்தான்’ என்று சொன்னதை நினைவுபடுத்தி, தனது ஒப்பீட்டுக்கு வலு சேர்த்தார். மக்கள் தங்களின் கையொலி மூலம் அதற்கு அங்கீகாரம் அளித்தனர். பிறகு இது எப்படி வந்தது? சரஸ்வதி கடவுளாலா? என்று கேள்வி கேட்டார். மக்கள் சிரித்தனர். ’பாட்டி சரஸ்வதி கைநாட்டு! பேத்தி சரஸ்வதி வக்கீல் சரஸ்வதி! பேத்தி சரஸ்வதி டாக்டர் சரஸ்வதி! பேத்தி சரஸ்வதி நீதிபதி சரஸ்வதி!’ என்று சரமாரியாக அடுக்கிக்கொண்டே போனார். மக்களுக்கு புரிந்துகொள்ள இதுவே போதுமானதாக இருந்தது. கை வலிக்க ஒலியெழுப்பி தங்களின் உணர்ச்சியைக் காட்டினர். அடுத்து ஆசிரியர், “இதுதானே திராவிட மாடல் ஆட்சி!’ என்று நிறுத்தினார். அடைமழை போல் கைதட்டல்கள் பொழிந்தன. மேலும் அவர், “செயல்படுவதற்கு திராவிட மாடல் ஆட்சி! வழிகாட்டுவதற்கு திராவிடர் இயக்கம்!” என்று தமிழ்நாட்டின் நூற்றாண்டு வரலாற்றை, திருக்குறளைவிட சுருக்கமாக சொல்லிவிட்டார். ஆசிரியரின் ஆழமான, அதேசமயம் புரியும்படியான கருத்துரைகளால் மக்களிடம் உற்சாகம் கரைபுரண்டோடியது.
புரட்சிக்கவிஞர் இருந்திருந்தால் மாற்றி பாடியிருப்பார்!
மதிவதனியும், பெண் நகர மன்ற உறுப்பினரும் எழுப்பிய சிந்தனையலைகளிலிருந்து இன்னமும் அவர் விடுபட வில்லை. ஆகவே, இந்த சமூகம் எப்படி இருந்தது? என்று கேட்டு, “ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்” என்றல்லவா இருந்தது. திராவிட மாடல் ஆட்சியல்லவா பெண்களுக்கு சொத்துரிமையைக் கொடுத்தது! என்று சொன்னதும் முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண்கள் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டு கைதட்டினர். பெண்களுக்கு சொத்துரிமையைக் கொடுக்க அம்பேத்கர் போராடித் தோற்றார். ஆனால் பெரியாரின் குருகுலத்தில் பயின்ற கலைஞர் சட்டம் கொண்டு வந்தார் என்று சொல்லிவிட்டு, ஆனால் இதை பெண்கள் இன்னமும் உணரவில்லை என்றார். பெண்கள் முகங்களில் கேள்விக்குறி, “இன்னமும் எனக்கு நகை வேணும், நட்டு வேணும், பட்டுப்புடவை வேணும்னு கேட்கறாங்களே தவிர, சொத்துல உரிமை வேணும்னு கேட்கலையே” என்று அவர் தொடர்ந்ததும், வெட்கப்பட்டாலும் அந்த உண்மைக்கு தலைவணங்கி ஆமாம் என்பது போல தலைகளை ஆட்டி, கை தட்டி ஆசிரியரின் கூற்றுக்கு பெருமை சேர்த்தனர். ஆசிரியரின் அந்த உணர்ச்சி குறையவே இல்லை. ”தலைவாரி பூச்சூட்டி உன்னை பாட சாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை” என்ற புரட்சிக்கவிஞரின் பாடலை நினைவூட்டி, இன்று புரட்சிக்கவிஞர் இருந்திருந்திருந்தால் இந்த பாடல் வரிகளை மாற்றி எழுதியிருப்பார் என்று கூறி, இல்லம் தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம் என்ற தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்களைச் சொல்லி, இதுதான் திராவிட மாடல் ஆட்சி!” என்று முடித்தார்.
சனாதனம் என்றால் என்ன?
அடுத்து ஒன்றிய அரசின் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை அவர்கள் செய்யவில்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். பிறகு ஆளுநர் உள்பட பேசிக் கொண்டிருக்கின்ற சனாதானம் என்ற சொல்லுக்கு சரியான பொருளை எடுத்துரைத்தார். அதாவது, இன்று பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமாக இருக்கும் அன்றைய காசி ஹிந்து கல்லூரியில் 1907 ஆம் ஆண்டு பி.ஏ.வுக்கு பாடமாக இருந்த புத்தகத்திலிருந்து “சனாதன தர்மம் என்றால் நித்தியமானது; புராதனமானது; ஆரிய மகா ஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப்பட்டது; ஆரிய என்றால் மேன்மை பொருந்தியது; இந்த ஆரியர்கள் இந்தியா என்று சொல்லப்படும் பகுதியின் வடபாகத்தில் குடியேறி னார்கள்; அதற்கு ஆரிய வர்த்தம் என்று பெயர். ஆகவே இது ஆரிய மதம் எனப்படுகிறது” என்று படித்துக்காட்டினார். அதை விளக்கும் வகையில், ‘ஆரிய மகா ஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப்பட்டது’ என்ற வாக்கியத்தை மீண்டும் படித்துக்காட்டி, முதல் வகுப்பார் யாரு? பார்ப்பனர்கள்தானே? ஆகவே இந்த மதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை. இந்து மதம் என்று வெள்ளைக்கரான் பெயர் வைத்தான். இதை சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஒப்புக்கொண்டுள்ளார் என்றார். அதாவது, ”ஆரி யர்கள்; பார்ப்பனர்கள் வந்தேறிகள்.” என்று முத்தாய்ப்பாகச் சொன்னார். தொடர்ந்து, அந்த சனாதனம் இன்னாருக்கு இன்னது என்ற பேதமுடையது. நமது பண்பாடு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! அனைவருக்கும் அனைத்தும்’ என்ற பேதமற்றது என்று முடித்தார். தொடர்ந்து சேது கால்வாய் திட்டம் பற்றி விளக்கினார். இந்த திட்டம் நிறைவேறினால் தமிழர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியினால் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி, ஒன்றிய அரசின் இரட்டை வேடம் என்ற முகமூடியை கிழித்தெறிந்து, இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க மக்கள் பெருந்திரள் கிளர்ச்சி நடைபெறவேண்டும்! இதை நடைமுறைப்படுத்துகிற திராவிட மாடல் ஆட்சிக்கு உங்கள் ஆதரவு தேவை! இந்த வேண்டுகோள் எங்களுக்காக அல்ல, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக! வருங்கால சந்ததிகளுக்காக! வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று உணர்ச்சிமயமாகப் பேசி தனது உரையை நிறைவு செய்தார். முடிவில் நகர கழக செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment