சென்னை, பிப். 22- ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க காவலருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல்துறையினர் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவ ருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ் சார்பில் உயர் நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காவாறு பேரணியை நடத்த வேண்டும்.இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
மேலும், இந்த ஊர்வலத்திற்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல் துறையிடம் விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல் துறைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
No comments:
Post a Comment