சென்னை, பிப் 12 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது.சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
“கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, காட்சிப் பதிவு செய்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முழுமையாக விசாரிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிபிஅய் விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாகவும் குறிப்பிட் டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கடந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தனித் துறையிடம் மனு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment