"ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல்"
ஓர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது!
ஈரோடு, பிப்.3 ‘’ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் ஓர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திருமகன் ஈ.வெ.ரா. படத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மரியாதை
ஈரோடு முதல் கடலூர் வரை மேற்கொள்ளும் 40 நாள் பிரச்சாரச் சுற்றுப் பயணத்திற்காக இன்று (3.2.2023) ஈரோட்டிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் வேட் பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது இல்லத்திற்குச் சென்று மறைந்த திருமகன் ஈவெரா படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
சுற்றுப்பயணம் தொடக்கம்
பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு நாளான இன்றைக்கு ஈரோட்டில், சமூகநீதி, மாநில உரிமை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் செயலாக்கம் இவற்றையெல்லாம் மய்யப் படுத்தி, தமிழ்நாடு முழுவதும் தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தை இன்று ஈரோட்டில் நாங்கள் தொடங்கவிருக்கிறோம்.
ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக இருக்கக்கூடிய நம்முடைய அருமைச் சகோதரர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுடைய இல்லத்தில், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பவரான திருமகன் ஈவெரா அவர்களுடைய படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து, இளங்கோவன் அவர்களுடன் சிறிதுநேரம் உரையாடிடும் வாய்ப்பும் அமைந்தது.
நிச்சயமாக வெற்றிக் கணக்காகவும், இலாபக் கணக்காகவும் அமையும்
ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் பேரேடு. ஆகவே, இந்தத் தேர்தல் என்பது நிச்சயமாக வெற்றிக் கணக்காகவும், இலாபக் கணக்காகவும் அமையும் என்பது தெரிந்த ஒன்றாகும்.
இந்தத் தேர்தல் ஓர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. இது வெறும் இடைத்தேர்தல் மட்டுமல்ல, 'திராவிட மாடல் ' ஆட்சியினுடைய சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரம் எப்படிப் பட்டது என்பதை விளக்கக் கூடிய தேர்தல் மட்டுமல்ல; அதையும் தாண்டி, தமிழ்நாட்டில் வாய்மையின் அடிப்படையில் செயல்படக் கூடிய அரசு, இயக்கங்கள், சுதந்திரமாக செயல்படக் கூடிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடியதாகவும் இருக்கும்.
ஓர் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்றைக்கு அடமானப் பொருளாக ஆக்கிக் கொண்டு, இங்கும் அங்கும் அவர்கள் பந்தாடப்படும் நிலையைப் பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது.
அதற்கும் ஒரு முடிவும், விடையும் இத்தேர்தலில் கிடைக்கும்.
நட்டக் கணக்கிலிருந்து அ.தி.மு.க. மீள முடியாது!
செய்தியாளர்: நேற்று அண்ணாமலை அவர்கள் டில்லியிலிருந்து வந்தவுடன், இன்று காலையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்; அவர் சந்தித்துப் பேசிய அடுத்த சில நிமிடங்களிலேயே இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்த தென்னரசு, வேட்பு மனு செய்வதை 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார், அது குறித்து தங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: எதுவாக இருந்தாலும், அவர்கள் நட்டக் கணக்கிலிருந்து மீள முடியாது. அடமானப் பொருளை எப்பொழுது அடமானத்திலிருந்து திருப்பி மீட்கிறார்களோ, அப்பொழுது தான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற அந்தத் தகுதியைக்கூட பெற முடியும்; இல்லையானால், அதையும் இழக்கும்படியான ஒரு சூழ் நிலையை ஈரோடு ஏற்படுத்தும்.
அ.தி.மு.க.விற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
செய்தியாளர்: பா.ஜ.க.விற்காக நாங்கள் காத்திருக்கவில்லை என்று இரண்டு நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க. இரண்டு அணியும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்தனர். ஆனால், இன்று காலை அண்ணாமலை சந்திப்பிற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி பின்வாங்கியிருக்கிறாரே!
தமிழர் தலைவர்: நாளை நடப்பதை யார் அறிவார்? என்று பாட்டுப் பாடக் கூடிய பரிதாப நிலையில் அ.தி.மு.க. இருப்பதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment