தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவரின் இனமான உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவரின் இனமான உரை!

 ''குஜராத் மாடல்'' என்னவென்றுதான் பி.பி.சி எடுத்துக் கூறியிருக்கிறதே!

உச்சநீதிமன்றத்தில், 34 நீதிபதிகளில் 30 பேர் உயர் ஜாதியினர்!!

தஞ்சை, பிப்.22. சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கம், சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற மூன்று நோக்கங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பெரும் பரப்புரைப் பயணத்தில் தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு  விளக்கவுரை ஆற்றினார்.

பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி முடிய நான்கு கட்டங்களாக 59 கூட்டங்கள் நடத்த திட்ட மிடப்பட்டு, இதுவரையில் இரண்டு கட்டங்கள் நிறைவுற்று மூன்றாம் கட்டமாக தஞ்சாவூர் அம்மாபேட்டையில் 30 ஆவது கூட்டமாகத் தொடங்கியது.

தஞ்சை அம்மாபேட்டையில் தமிழர் தலைவர்!

அம்மாப்பேட்டையில் 22.02.2023 அன்று மாலை 5.30  மணிக்கு நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் கி.ஜவகர் அனைவரையும் வர வேற்று பேசினார். மண்டல தலைவர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மண்டல செயலாளர் க.குருசாமி, ஒன்றிய துணைத் தலைவர் சொ.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், ஒன்றிய துணைச் செயலாளர் வை.இராஜேந் திரன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி, ஒன்றிய ப.க. ஆசிரியரணி தி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் உரையாற்றிய பின்னர், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

போராடிய தோழர்களுக்கு வீரவணக்கம்!

தமிழர் தலைவர் தனது உரையில், “பெரு நகரங்களில் மட்டுமல்ல, இதுபோன்ற இடங்களிலும் பரப்புரைப் பயணம் செய்ய வேண்டும். மக்களுக்கு விளங்கச் செய்யவேண்டும் என்ற காரணத்தால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கே மகிழ்ச்சியோடு பேச வந்துள்ளேன். எங்கே சென்றாலும் அங்கே அரும்பாடுபட்டு போராடிய தோழர்களைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாது. அந்த வகையில், தந்தை பெரியார் அவர்கள் ரயிலில் சுற்றுப்பயணம் வரும்போது ஒரே ஒருவராக இருந்தாலும் அய்யா ராமு வரவேற்பார். அவர் போராட்டம் நடத்தி, தண்டனை பெற்றவர். நெய்க்குன்றத்தைச் சேர்ந்த நடராசன் - அவருடைய மகள் இங்கே வந்திருக்கிறார். அவர் எளிய தோழர். அவருடைய இல்லத்திற்குச் சென்ற போது மனம் உருகிப்போனோம், என்னுடைய வாழ்விணை யர் உள்பட.விடுதலையில் வருகிற அறிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர், தேசபந்து, துரை, உடையார் கோயில் புகழேந்தி ஆகியோரின் உழைப்பினால் அமைந்த மேடை யில் அமர்ந்து கொண்டு நாம் பேசுகிறோம். அப்படிப்பட்ட போராளிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்தி நான் என்னு டைய உரையைத் தொடங்குகிறேன் என்றார்.

குஜராத் மாடல் என்றால் என்ன?

இப்படியோர் முன்னோட்டத்தை சொல்லிவிட்டு, ”100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இயக்கம் உருவாகி இருக்காவிட்டால், வட மாநிலங்களில் இல்லாத ஓர் அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி ஏற்பட்டிருக்குமா தோழர்களே?” அந்த இயக்கத்திற்கு பெயர் தான் திராவிடர் இயக்கம் என்றதும், மக்கள் அவர் சொல்ல வந்ததை உள்வாங்கி கைதட்டினர். ”அந்த நீதிக்கட்சியின் நீட்சிதான் இப்போதிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி” என்று தொடர்ந்து சொல்லி, 100 ஆண்டுகளாக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என் பதை நினைவுபடுத்தினார். 

தொடர்ந்து நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற குலக்கல்வி திட்டம் எதிர்ப்பைச் சுட்டிக் காட்டினார். அதே குலக்கல்விதான் இன்றைக்கு புதிய தேசியக் கல்விக் கொள்கையாக வரத் துடிக்கிறது என்று வரவிருக்கும் ஆபத்தை எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் தான் சில நாள்களுக்கு முன் வந்துள்ள தினமணி, ‘கல்வி, மருத்துவக் கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது’ என்றும், இந்தியா முழுவதுமாக இருக்கக்கூடிய ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 11,275 இடங்கள் இருக்கின்றன என்றும், ’தமிழ்நாடுதான் முதலிடம்’ என்றும் செய்தி வெளியிட்டிருக்கிறது என்று தினமணி நாளிதழை கையில் வைத்துக்கொண்டு படித்துக் காட்டினார். 

மக்கள் இந்த மகத்தான சாதனைகளை உணர்ந்து கைதட்டி மகிழ்ந்தனர். ராஜகோபாலாச்சாரியார் காலத்தில் 200 இடங்கள் கூட கிடையாது என்று பழைய வரலாற்றையும் தொடர்ந்து சொன்னதும் கைதட்டலும் தொடர்ந்தது. சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன என்பதைப் போல், “அது மட்டுமல்ல, ”இன்றைக்கு இல்லம் தேடி கல்வி! மக்களைத் தேடி மருத்துவம்!” என்று அனைவருக்கும் அனைத்தும் என்கிற இலக்கு நோக்கிச் செல்கிற திராவிட மாடலின் சாத னைகளை அடுக்கிவிட்டு, “குஜராத் மாடல் என்ன?” என் றொரு கேள்வி கேட்டு, “அதுதான் பி.பி.சி சொல்லியிருக் கிறதே!” என்று முடித்தார். மக்கள் மறுபடியும் உற்சாகத்துடன் கைகளைத் தட்ட வேண்டியதாயிற்று.

மக்கள் தெளிவு பெற வேண்டும்!

தொடர்ந்து, ஏழைகளுக்கான ஆட்சி என்று மோடி கூறிவரும் கருத்தில் உள்ள மோசடியை காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்ததை சொல்லி அம்பலப்படுத்தினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற் றாமல் ஜூம்லா என்று சும்மா சொன்னோம் என்று கூசாமல் அமித்ஷா சொன்னதை நினைவுபடுத்திப் பேசினார். ஆனால் சொன்னதை செய்யும் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் உள்ளவர்களுக்கே வேலை வாய்ப்பைத் தரும் என்று சேது சமுத்திரத் திட்டதை எடுத்துரைத்தார். அதில் தங்களின் நிலை என்னவென்பதை சொல்லும் போது, ‘வெண்ணெய்யை கையில் வைத்துக்கொண்டு அதை உருக்குவதற்கு ஒன்றிய அரசின் தயவுக்காக காத்துக் கிடக்கும் அவலத்தை' சொல்லி, மாநில உரிமைகளை நினைவுபடுத்தினார். 

இறுதியாக பா.ஜ.க. அரசே தனது அமைச்சர் ஜிதேந்திர சிங் மூலமாக ராமன் பாலம் கட்டியதற்கான சான்றுகள் இல்லையென்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பதைச் சொல்லி, நாங்கள் எப்போதும் உண்மையைச் சொல்கிறோம். இப்போதாவது இதை நிறைவேற்ற ஒன்றிய அரசு முன்வர வேண்டும். மக்களும் இதில் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் இந்த சுற்றுப்பயணம் என்றார்.

புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

திராவிடர் கழக அம்மாபேட்டை நகரத் தலைவராக இரா. இராதாகிருஷ்ணன், நகரச் செயலாளராக உடையார் கோயில் சா. சுந்தரவடிவேலு ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக அறிவித்து, வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று முழங்கி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில்  திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,  தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.குமார், அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன், சி.பி.அய். மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் வட்டார தலைவர் கண்ணன், ம.தி.மு.க.ஒன்றிய செயலாளர் இராச.கவியரசன் சிபி.எம். ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ம.ம.க. ஒன்றியத் தலைவர் ஜெகபர்தீன், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் அஹ்மத், குடந்தை மாவட்ட செயலாளர் துரைராசு, சாலியமங்கலம் நகர் செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

முடிவில் ப.க. மாவட்ட துணை தலைவர் பெரியார் கண்ணன் நன்றி கூறினார். அங்கிருந்து மன்னார்குடியை நோக்கி பயணக்குழு சென்றது.

மன்னார்குடியில் தமிழர் தலைவர்!

மன்னார்குடி பந்தலடி அருகில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் இன்பக் கடல் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட ப.க. தலைவர் கவுதமன், பொதுக்குழு உறுப்பினர் சிவஞானம், ப.க. ஆசிரியரணி மண்டல செயலாளர் ஆசிரியர் இரமேஷ், மன்னை ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் புட்பநாதன்,  ப.க. மாவட்ட செயலாளர் நா.உ.கல்யாணசுந்தரம்,  மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, ப.க.ஆசிரியரணி மாவட்ட தலைவர் தங்க.வீரமணி, ப.க. ஆசிரியரணி மாவட்ட செயலாளர் இரா.கோபால், கோட்டூர் ஒன்றியத் தலைவர் ஆர்.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கருத்துரையாற்றிட அதன் பின்னர் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மக்கள்தான் அதிகாரம் பெற்றவர்கள்!

அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே, “பனி கொட்டுகிறது. அதைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருக் கிறீர்கள். உங்களுக்கு தலை தாழ்ந்த நன்றி” என்று மக்களுக்கு இரங்கினார். மக்களோ, எப்படிப்பட்ட ஒரு தலைவர் இப்படிச் சொல்கிறாரே என்று நெகிழ்ந்து போயினர். சமூகநீதி பாது காப்புப்பற்றி சொல்ல முனைந்து ஆந்திராவிலுள்ள குண்டூரில் நடைபெற்ற பி.பி. மண்டல் சிலை திறப்பு விழா பற்றி சில புதிய தகவல்களைச் சொன்னார். அதாவது, அகில இந்திய அளவில் நடைபெற்ற சமூகநீதி மாநாடு போல நடந்தது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும், “சிலையை திறந்து வைக்க வேண்டிய நானே மேடைக்குப் போக முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் கூடியிருந்தார்கள். மிகவும் சிரமப்பட்டுத் தான் அங்கிருந்தவர்கள் என்னையும், தோழர் திருமாவையும் மேடைக்கு அழைத்துச் சென்றனர்” என்று சொல்லி, அந்த மாநாட்டின் சிறப்பை மக்களே யூகித்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு தகவலைச் சொன்னார். அவ்வளவு சிறப்புக் குரிய சிலை திறப்பு விழாவுக்கு தன்னை ஏன் அழைத்தார்கள் என்பதையும், அந்த அளவுக்கு தமிழ்நாடும், திராவிடர் இயக்கமும் சமூக நீதியில் சிறப்பு பெற்றிருக்கிறது என்பதையும் எடுத்தியம்பினார். 

தொடர்ந்து மிக முக்கியமான ஒரு கருத்தை மக்களுக்கு புரியம்படியாகச் சொன்னார். அதாவது இந்திய அரசமைப்பச் சட்டத்தில் உள்ள முகப்புரையில், “We the people of India... அதாவது, மக்களாகிய நாம் என்று தான் தொடங்குகிறது. அதனால் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமோ, பிரதமரி டமோ, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடமோ இல்லை! மக்களிடம் தான் உள்ளது. மக்கள் நினைத்தால், ஆட்சியாளர்கள் நீடிக்க முடியும், இல்லையென்றால் முடியாது. இதை முதலில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அரசியல் பாடம் எடுத்தார் 'விடுதலை' ஆசிரியர்! மக்களுக்கு முதுகு நிமிர்ந்தது போல் இருந்ததால் மிகவும் ஆர்வத்துடன் கவனித்தனர்.

சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

சமூக நீதியைப் பெற நாம் பட்ட பாடுகளை மக்கள் முன் எடுத்து வைத்தார். அதாவது முதல்  அரசமைப்புச் சட்டத்திருத்தம், 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், 93 ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை ஒரு பருந்து பார்வையைப் போல கற்றுக் கொடுத்தார். சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் இந்தப் பயணத்தில் ஆற்றிய அளப்பரிய பங்கை போதிய அளவுக்கு எடுத்துரைத்தார். மண்டல் கமிசனை அமல்படுத்தியதால் பெற்ற 27% முழுமையாக கிட்டாமல் 11 -13% வரை தான் கிடைக்கிறது என்ற அதிர்ச் சிகரமான தகவலைச் சொல்லி, மீதியைச் சுரண்டுகிறவர்கள் யாரென்பதையும் போட்டுடைத்தார். 

தொடர்ந்து 103 ஆம் சட்டத் திருத்தம் பற்றி சொல்லி, அந்த அரிய வகை ஏழைகளின் யோக்கியதையை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஒரு பார்ப்பானோ, பாப்பாத்தியோ வேலை செய்வதை நீங்கள் பார்த்ததுண்டா என்ற கேள்வியுடன் தோலுரித்துக் காட்டினார்.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் 34 பேரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், ஒருவர் இசு லாமியர், மற்றொருவர் கிறித்துவர், இன்னொருவர் பழங்குடியினர். மீதமுள்ள 30 பேர் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற கொடுமையைச் சொல்லி, இங்கே நமக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றார். 103 ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் 69% இட ஒதுக்கீட்டுக்கு  வந்திருக்கும் ஆபத்தை மக்களுக்கு விளக்கினார். அதை பாதுகாப்பதற்கு முதலில் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பயணம் என்றார். திராவிடர் இயக்கத்தின் மாலை நேரக்கூட்டங்கள், மாலை நேரக் கல்லூரிகள் என்று சொல் வார்கள். அப்படித்தான் இருந்தது ஆசிரியரின் உரையும், மக்களின் ஏற்பும்! 

தொடர்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத் தில் கூறப்பட்டுள்ள, இறையாண்மையுள்ள, சமதர்மமுள்ள, மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்கின்ற அய்ந்து கோட்பாடுகளின் மீது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர் சனாதனம் பற்றி பேசுவதைக் குறிப்பிட்டு, சனாதனம் என்றால் என்ன என்பதை காசி ஹிந்து கல்லூரி 1907 ஆம் ஆண்டு பாடத் திட்டமாக வெளியிட்ட புத்தகத்திலிருந்து படித்துக்காட்டி, சனாதனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே பேசிக்கொண்டிருப்பவர்களை புரிந்து கொள்ளுங்கள் என்று ஆசிரியர் மக்களை அரசியல் படுத்தினார். 

இறுதியாக சேது சமுத்திரத்திட்டம் குறித்து விளக்கி, தமிழ்நாடு செழிக்க, தமிழர்கள் வேலை வாய்ப்புபெற, இந்திய அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சேது சமுத்திரத் திட் டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் தெளிவு பெறவேண்டும். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று கூறி உரையை நிறைவு செய்தார். அம்மாபேட்டையிலும், மன்னார்குடியிலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகச்சிறப் பாகச் செய்யப்பட்டிருந்தன. மக்கள் திரளாக கூடியிருந்து கருத்துகளை கேட்டுப் பயன்பெற்றனர்.

பங்கேற்று சிறப்பித்த தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.இராஜா, மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த.சோழராஜன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் செல் வராசு, சி.பி.எம். மாவட்ட துணை தலைவர் இரகுபதி, நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செல் வராசு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தி.மு.க. மன்னை மத்திய ஒன்றிய செயலாளர் சித்தேரி பி.சிவா, மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.டி. முத்துவேல், மன்னை நகர செயலாளர் வீரா.கணேசன், ம.தி.மு.க. நகரச் செயலாளர் சரவணன், வி.சி.க. மாவட்ட செயலாளர் செல்வம், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் கனகவேல், வி.சி.க. தொழி லாளர் முன்னணி மாநில துணை செயலாளர் இரமணி, ம.தி. மு.க. நகர செயலாளர் இரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் மன்னார்குடி நகர் செயலாளர் இராமதாசு நன்றி கூறினார். 

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment