போபால் நகரத்தில் பாபுகோனா என்ற பகுதியில் பூங்காவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த திருமணமான இணையரை காதலர்கள் என நினைத்து ஹிந்து அமைப்பினர் தாக்கியுள்ளனர்.
"காதலர் நாளைக்கொண்டாடுவது ஹிந்து கலாச்சாரத் திற்கு எதிரானது, காதலர் நாள் அன்று எங்காவது காதலர்களை எங்கள் அமைப்பினர் பார்க்க நேர்ந்தால் முதலில் அடி கொடுங்கள் - பிறகு அவர்களது தாய் தந்தையருக்குத் தகவல் தெரிவியுங்கள். லவ்ஜிகாத்தாக தெரிந்தால் தலைமை அலுவலகத்திற்கு இழுத்துவாருங்கள்" என வெளிப்படையாகவே வடக்கே ஆர்.எஸ்.எஸ். .அமைப்பின் சில்லரை இயக்கங்கள் ஒலிபெருக்கியில் பரப்புரை செய்யும் அளவுக்குக் கேடு கெட்டதுகள் இந்த சங்பரிவார்கள்.
இந்த நிலையில் போபால் நகரத்தில் உள்ள பாபுகோனா என்ற பகுதியில் உள்ள பூங்கா உணவகத்தில் திருமணமான இணையர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அங்கு காவிக்கொடியுடன் உள்ளே சென்ற ஹிந்து அமைப்பினர் இருவரையும் காதலர்கள் என்று நினைத்து அடிக்கத் துவங்கி விட்டனர்.
முதலில் கணவரை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள், தடுக்க வந்த மனைவியையும் தாக்கினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலைக் கண்டதும் உணவு விடுதி நிர்வாகத்தினர் ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த பிறகு அவர்கள் அங்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான இணையரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக மாவட்டக் காவல்துறை ஆணையர் ஊடகவியலாளர்களின் சந்திப்பில் பேசும் போது, "நகரத்தின் முக்கிய பகுதியில் இருக்கும் ஒரு உணவு விடுதி தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல் வந்ததன் அடிப்படையில் அங்கு சென்றோம். தாக்குதலுக்கு ஆளான கணவன் மனைவியை மருத்துவப் மருத்துவப் பரிசோதனைக்காக நகர மருத்துவமனையில் சேர்த் துள்ளோம்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை; இருப்பினும் நாங்கள் குற்றவாளிகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.
தாக்குதல் நடத்திய அமைப்புக் குறித்தும் கைது குறித் தும் காவல் ஆணையர் எந்த விபரமும் செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். நடப்பது பிஜேபி ஆட்சி யாயிற்றே!
நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? இந்த அவலமான குணக்கேடான நாட்டில்தான் நாம் குடி மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் - அசல் வெட்கக்கேடு.
"காதல் என்பது உயிரியற்கை அது
கட்டில் அகப்படும் தன்மையதோ?"
என்று கேட்டார் புரட்சிக் கவிஞர்.
காதலைக் கண்டு கசக்கும் சங்கிகளைப் பார்த்து ஒரு கேள்வி... முதலில் அதற்குப் பதில் சொல்லட்டும்.
"உங்கள் மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் 'கிருஷ்ண பரமாத்மா, கிருஷ்ண பரமாத்மா' என்று ஒரு கடவுளைத் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறீர்களே, அது காதல் கடவுள் அல்லாமல் வேறு என்னவாம்?
மனிதன் உருவிலே தானே கடவுள் படைக்கப்பட்டது. தன்னைப் போலவே கடவுள்களுக்கும் குடும்பத்தை உருவாக்கினான். கடவுளும் காதல் செய்வதாக - இன்னும் சொல்லப் போனால், காதலைக் கொச்சைப்படுத்தும் வகையில் காமவெறியராகக் கடவுள் நடந்துகொண்டார் என்று எழுதியது கடவுள் பக்தர்கள்தானே!
காதலைக் கொச்சைப்படுத்துவது - கடவுளையும் சேர்த்துக் கொச்சைப்படுத்துவதே! உண்மையைத் தெரிந்து கொள்ள புராணங்களை ஒரே ஒரு முறை படித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment