மதுரை திறந்தவெளி மாநாட்டில் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 2, 2023

மதுரை திறந்தவெளி மாநாட்டில் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்புரை

 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்ஜெயலலிதா தேர்தல் அறிக்கையிலேயே வற்புறுத்திய திட்டம்

பி.ஜே.பி.அமைச்சரவையிலேயே ஒப்புக்கொண்ட திட்டம்!

மக்கள் வளர்ச்சித் திட்டத்தை மதப் பொய்க் காரணம் கூறித் தடுக்கலாமா?

மதுரை, பிப்.2 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்; ஜெயலலிதா தேர்தல் அறிக்கையிலேயே வற்புறுத்திய திட்டம்; பி.ஜே.பி.அமைச்சரவையிலேயே ஒப்புக் கொண்ட திட்டம்! மக்கள் வளர்ச்சித் திட்டத்தை மதப்  பொய்க் காரணம் கூறித் தடுக்கலாமா? என்றார் மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. பொருளாளரும், நாடாளு மன்ற தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு

கடந்த 27.1.2023  மாலை மதுரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலி யுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தி.மு.க. தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தமிழர் தலைவர் எங்கள் அன்பிற்குரிய அண்ணன் ஆசிரியர் அவர்களே, நிகழ்ச்சியில் பங்கேற்று இருக் கின்ற திராவிடர் கழக துணைத் தலைவர் 

கலி.பூங்குன்றன் அவர்களே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் 

கே.எஸ்.அழகிரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர், வி.சி.க. தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திருமா எம்.பி., அவர்களே, தம்பி நவாஸ்கனி எம்.பி., அவர்களே, கழக அமைச்சர் பெருமக்கள் அன்பிற்குரிய தம்பி மூர்த்தி அவர்களே, அன்பிற்குரிய தம்பி பிடிஆர் அவர்களே, 

நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்ற சட்டப்பேரவை உறுப்பினர் தம்பி தளபதி அவர்களே, தணிக்கைக் குழு உறுப்பினர் தம்பி வேலுசாமி அவர்களே,

உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்கள் அன்பிற்குரிய அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் அவர்களே, தம்பி குழந்தைவேலு அவர்களே,

சி.பி.அய். இயக்கத்தின் மாநில துணை செயலாளர் அண்ணன் பெரியசாமி அவர்களே, 

சி.பி.எம். இயக்கத்தின் பொறுப்பாளர் அன்பிற்குரிய அண்ணன் அருணன் அவர்களே, ம.தி.மு.க.வைச் சேர்ந்த தம்பி செந்திலதிபன் அவர்களே,

நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்ற தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திருவள்ளுவன் அவர்களே,

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்களே,

அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் அவர்களே, வல்லரசு பார்வர்டு பிளாக் அமைப்பின் நிறுவனத் தலைவர் அம்மாசி அவர்களே,

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் ராம.வைரமுத்து அவர்களே, கலை இலக்கியப் பணி ஆதித்தமிழர் பேரவையின் செல்வம் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய தம்பி ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் குணசேகரன் அவர்களே, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கின்ற அன்பிற்குரிய தம்பி செல்வம் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற மாவட்டக் கழக செயலாளர் சுப.முருகானந்தம் அவர்களே,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் இனத்தின் சார்பாக நன்றி!

முதலில், அன்பிற்குரிய அய்யா அவர்களுக்கு தமிழ் இனத்தின் சார்பாக நன்றியறிதலை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு மிகப்பெரிய பிரச்சினை சேது சமுத்திரத் திட்டம். இந்தத் திட்டம் ஏறத்தாழ 5, 6 ஆண்டுகளுக்குமுன் நிறைவேறி இருக்கவேண்டும்.

தமிழர் தலைவர் அவர்கள், எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொன்னார்!

இந்தத் திட்டம் நிறைவேறவில்லை என்று, குழந்தை பெற்றபொழுது, அந்தக் குழந்தை பிறக்கின்றவரை மகிழ்ச்சியாக இருந்த தாய், குழந்தை பிறந்து, ஓடி ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், அந்தக் குழந்தையின் கால் முடமாக்கப்பட்டால், அந்தத் தாய் எந்த அளவிற்கு வேதனை அடைவாரோ, அதுபோல, நான் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தேன் இன்றுவரை - எங்களுடைய அன்பு ஆசிரியர் அவர்கள்,  தமிழர் தலைவர் அவர்கள், எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்ல, நாடு, நகரமெல்லாம், பட்டிதொட்டிகளில் எல்லாம் அந்த வேதனையைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டுவருபவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான்.

அவர்களுக்காக, நாட்டிலுள்ள அனைத்து மக்கள் சார்பாக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நீண்ட நேரம் பேசுவதற்கில்லை. ஏனென்றால், நான் பேச நினைத்ததையெல்லாம் என்னுடைய அன்புத் தம்பிகள் எல்லாம் இங்கே பேசிவிட்டார்கள்.

நிறைய சொல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென் றால்,  எல்லோரும் அப்டேட்டாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்பொழுது, மீண்டும் அப்டேட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதைவிட மக்கள் எல்லோரும் அப்டேட்டாக இருக்கிறார்கள்.

அந்தப் பணியை இன்றைக்கு ஆசிரியர் அய்யா அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்!

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; ஆனால், அந்தப் பிரச்சினைகளில் எல்லாம் இவ்வளவு அறி வார்ந்த ஆய்வும், தெளிவும் உங்களிடம் இருந்ததில்லை. ஆனால், இன்றைக்கு சேது சமுத்திரத் திட்டம்பற்றி மக்கள் ஒவ்வொருவரும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பது மட்டுமல்ல; இப்படி ஆகிவிட்டதே என்ற கவலைக்குரிய வர்களாக நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய முகத்தில் மலர்ச்சியை வரவழைப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதனுடைய தோழமை இயக்கங்களுக்கும், குறிப்பாக தாய்க் கழகத் திற்கும் இருக்கிறது. அந்தப் பணியை இன்றைக்கு ஆசிரியர் அய்யா அவர்கள் செய்துகொண்டிருக் கிறார்கள்.

தந்தை பெரியார் சொன்னார்!

மறைந்த பெரியார் அய்யா அவர்கள் சொல்வார்கள், ‘‘இந்தப் பொதுப் பணி, சமூகநீதி வழங்குகின்ற பணியை, பெண்களுக்கு உரிமை கொடுக்கின்ற அந்தப் பணியை, ஆண்டான், அடிமை இல்லை என்று சொல்லுகின்ற பணியை, ஜாதி வேற்றுமை பாராட்டுகின்ற அந்த நிலையை ஒழித்துக் கட்டுகின்ற நிலைக்கு நம்முடைய மக்கள் எப்பொழுது வருவார்கள் என்கின்ற ஏக்கம் எனக்கு இருந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பொதுப் பணியை செய்வதற்காக, யாருமே முன்வரவில்லை; ஆகவே, நான் என்னுடைய தலையிலே சுமந்துகொண்டு, ஊர் ஊராக அலைந்து ஒவ்வொரு தமிழனுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுகின்ற வரை நான் பாடுபடு வதற்குத் தயாராகிவிட்டேன்’’ என்று சொன்னார்.

யாருமே தயாராக இல்லை; யாருமே வருவதில்லை என்று அவ்வளவு பெரிய கவலைக்குரியவராக அவர் இருந்தார்; மறைந்தார்.

நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களால் அந்தப் பணி இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கின்றது!

ஆனால், அந்தப் பணியைத் தொடர்ந்து நான் செய்கிறேன் என்று, நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களால் அந்தப் பணி இன்றைக்கும் நடந்துகொண் டிருக்கின்றது; அதனால்தான் இந்த மாநாடு.

2001 ஆம் ஆண்டு வெளியிட்ட 

தேர்தல் அறிக்கை

கலி.பூங்குன்றன் அவர்கள், மிக விளக்கமாக சொன்னார் - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை 2001 குறித்து. அன்றைக்கு இருந்த இந்தியப் பிரதமர் வாஜ் பேயி படம் இருக்கிறது; அன்றைக்கு இருந்த பி.ஜே.பி. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி படம் அதில் இருக்கிறது.

அந்த 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆதம் பிரிட்ஜ் வழியாகவே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 

திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் வாஜ்பேயிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்!

இது ஓர் ஆதாரம்.

அடுத்த ஆதாரம், அந்தத் திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா அவர்களின் 2001 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கை. அதில் தெளிவாக இருக்கிறது; 2, 3 பக்கங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்று, பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கே கடிதம் எழுதியிருக்கிறார்.

இது இரண்டாவது!

வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 

40-க்கும் 40 இடங்களை தாருங்கள்!

சொல்லவேண்டிய நேரத்தில் நான் உண்மைகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்; எனக்கு வாக்களித்த மக்கள் - தமிழ்நாட்டு மக்கள், 40-க்கு, 39 இடங்களைக் கொடுத்த மக்கள். வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கும் 40 இடங்களைத் தரப் போகிறீர்கள்.

எல்லா அமைச்சர்களும் மிக விரைவாக முடியுங்கள் இந்தத் திட்டத்தை என்றுதான் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்!

இதோ என் கைகளில் இருக்கும் ஆதாரம் - அருண்ஜெட்லி கையெழுத்துப் போட்டது. எங்கள் அலுவலகத்தில் அய்ந்தாண்டுகளில், 6, 7 அமைச்சர்கள் இருந்தார்கள். நான் ஒருவன்தான் 5 ஆண்டுகள் முழுவதுமாக இருந்திருக்கிறேன்.

என்னுடைய அலுவலகத்தில் எனக்கு 5, 6 போர்ட் ஃபோலியோ; அதில், இந்தப் போர்ட் ஃபோலியோ, மிகமிக சுவையான போர்ட் ஃபோலியோ. இதில் அருண் ஜெட்லி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், இந்தப் பாதை வழியாகத்தான் போகவேண்டும்; அதை மிக விரைவாக முடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அடுத்ததாக, இன்றைக்கு பீகார் முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதிஷ்குமார், அன்றைக்கு இத்துறை அமைச்சராக இருந்தார். பிறகு ராஜ்நாத்சிங் இந்தத் துறை அமைச்சராக இருந்தார். அவரும் கையெழுத்துப் போட்டு, இந்தத் திட்டத்தை மிக விரைவாக முடிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

இன்றைக்கு ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சராக  உள்ள பியூஸ் கோயல் அவர்களின் தந்தை, வி.பி.கோயல் அவர்கள் அன்றைக்கு என்னுடன் ஒன்றிய அமைச்சராக இருந்தவர். அன்றைக்கு இந்தத் துறையில் அவர் அமைச்சராக இருக்கும்பொழுது கையெழுத்துப் போட் டுக் கொடுத்திருக்கிறார். நம்மூர் திருநாவுக்கரசர்கூட கையெழுத்துப் போட்டு இருக்கிறார்.

சேது சமுத்திரத் திட்டம்குறித்து சீக்கிரம் முடிவு செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கப்பல் துறை அமைச்சராக இருந்த 

சத்ருகன் சின்ஹா எழுதிய கடிதம்!

மறைந்த கன்னியாகுமரி சங்கரலிங்கம் அவர்கள் எம்.எல்.சி.,யாக இருந்தவர்; அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக  ராஜ்ய சபாவில் இருந்தார். 

அவர் அன்றைக்கு கப்பல் துறை அமைச்சராக இருந்த சத்ருகன் சின்ஹா அவர்களுக்கு.

அவர் எழுதிய கடிதத்திற்குப் பதில் வருகிறது.

ஆடம்ஸ் பாலம் வழியாக இந்தத் திட்டம் செல்வதற்கு பரிந்துரை செய்திருக்கிறார்; அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் சத்ருகன் சின்ஹா.

பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயிக்கு 

ஜார்ஜ் பெர்னாண்டஸ் எழுதிய கடிதம்!

அடுத்ததாக, ராணுவத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள், பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார்

தேசிய பாதுகாப்பிற்காகவாவது இந்தத் திட்டம் நிறைவேறவேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அவர்கள் கடிதம் எழுதியது மட்டுமல்ல; அந்தத் துறையின் செயலாளர் இதேபோன்று கடிதம் எழுதுகிறார். அதற்குப் பிறகு உள்துறை அமைச்சகத்திலிருந்து சொல்கிறார்கள், இந்தத் திட்டத்தை விரைவாக முடிக்கவேண்டும் என்று.

மேற்கண்ட கடிதங்களையெல்லாம் வெளிப்படை யாக இங்கே நான் படித்துக் காட்டாததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

2.7.2005 அன்று, மதுரை பாண்டி கோவில் பக்கத்தில் சேது சமுத்திரத் திட்டம் - மிகப்பெரிய தொடக்கவிழா நடந்தது.

இன்னும் 23 கிலோ மீட்டர் பணிகள்தான் மீதமிருந்தன!

வெளிப்படையாக அந்தப் பணி நடைபெற்றதை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்தார்கள். பிரதர் மன்மோகன்சிங் அவர்கள் பட்டனை அழுத்தியவுடன்,  பணிகள் தொடங்கிற்று. அப்படி தொடங்கிய பணி, வேக வேகமாக நடைபெற்று, இன்னும் 23 கிலோ மீட்டர் பணிகள்தான் மீதமிருந்தன. என்னை கொஞ்சம் விட்டிருந்தால், அந்தப் பணியையும் முடித்திருப்பேன்.

எப்படி முடித்தேன் என்றெல்லாம் கேட்காதீர்கள்; அதை இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாது. அதற்கும் ஒரு காலம் வரும்; அப்பொழுது சொல்கிறேன்.

இடிக்காதே, இடிக்காதே, உடைக்காதே, உடைக்காதே என்றெல்லாம் சொன்னார்கள். அதுபோன்று நான் செய்யவேயில்லை. ஆனால், 23 கிலோ மீட்டர்தான் பணிகள் மீதமிருந்தன.

இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொன்னார்கள். 

ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இண்டியாவின் ஆய்வறிக்கை!

அப்படி இராமர் பாலத்தை உடைக்கக் கூடாது என்றால், வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுது, ஒன்றிய அமைச்சராக இருந்த உமாபாரதி அவர்கள், 81 இடங்களில் ஃபோர்வெல் போட்டார்கள்; அப்படி 100 மீட்டர், 200 மீட்டர் ஃபோர்வெல் போடும்பொழுது ஆடம் பிரிட்ஜ் உடையவில்லையா? அப்படி போட்ட ஃபோர்வெல் போட்டு, மண்ணை எடுத்துப் பார்த்து ஆய்வு செய்து என்ன சொன்னார்கள்?

2002 டிசம்பர் மாதம், 2003 மார்ச் மாதம் ஜி.எஸ்.அய்.  (ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இண்டியா) அறிக்கை தருகிறது.

கடலினுடைய ஏற்றத் தாழ்வு- உயரம் - தாழ்வு நிலையைத்தான் சொல்லுகிறதே தவிர, அங்கிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அங்கே கட்டடம், கல்லும், மண்ணும் இருந்தது; கட்டடம் இருந்தது என்றும் சொல்லவில்லை.

ரகசியமாக வாஜ்பேயி அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

உமாபாரதி அம்மையார், ரகசியமாக வாஜ்பேயி அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

என்னிடம் தனிப்பட்ட முறையில் என்ன சொன் னார்கள் என்றால், வெறும் மணல்தான் இருந்தது என்று சொன்னார்கள்.

உமாபாரதியே இப்படி சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.காரர், சந்நியாசி அவர்.

பிறகு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டடமே அங்கு கிடையாது என்று ஜிதேந்திர சிங் சொன்னார் என்று எனக்குமுன்பு உரையாற்றிய பேச்சாளர்கள் சொன்னார்கள்.

இந்திய வரலாற்றை எழுதிய 

ரொமிலா தாப்பருக்குக் கடிதங்கள் எழுதி ஆலோசனை கேட்பேன்!

இப்பொழுது விவாதத்திற்கு வருவோம்; முதன் முதலாக இந்திய வரலாற்றை எழுதிய வின்சண்ட் ஸ்மித் அவர்கள்,  ரொமிலா தாப்பர் அவர்களும் இந்திய வரலாற்றை எழுதியவர்; இன்றும் உயிரோடுதான் அவர் இருக்கிறார். அந்த அம்மையாருக்கு இத்திட்டம் குறித்து நான் செய்கின்ற பணிகள் சரியானதுதானா? என்று அடிக்கடி கடிதம் எழுதி, அவரிடமிருந்து பதில் கடிதங்களைப் பெற்றவன் நான்.

அவ்வளவு பெரிய வரலாற்று ஆசிரியரைவிட வேறு யார் இருக்கிறார்கள்.

ஒரு வரலாற்றுத் தன்மையைத் தெரிந்துகொள்வதற்கு, சரியான வரலாற்று ஆசிரியரை நான் தேர்ந்தெடுத்தேனா, இல்லையா என்பதைத் தமிழ்நாட்டு மக்களே எண்ணிப் பாருங்கள்.

மனிதர்களால் உருவாக்கப்பட்டது 

அங்கே எதுவும் இல்லை!

வரலாற்று உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்; வெளியில் எதுவேண்டுமானாலும் பேசலாம். ஆனால், ரொமிலா தாப்பர் சொன்னார்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்டது எதுவும் இல்லை என்று.

நேரு அவர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திர மானவர் சத்தியநாத அய்யர். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவர்.

‘‘பொலிட்டிக்கல் அண்ட் கல்ச்சுரல் 

ஹிஸ்ட்ரி ஆஃப் இண்டியா!’’ 

அவர் இந்திய வரலாற்றை எழுதும்பொழுது, ‘‘பொலிட்டிக்கல் அண்ட் கல்ச்சுரல் ஹிஸ்ட்ரி ஆஃப் இண்டியா'' என்ற தலைப்பில் எழுதிய வால்யூம் ஒன் - பக்கம் நெம்பர் 51 இல் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

மனிதர்களால் கட்டப்பட்ட கல்லோ, மண்ணோ எதுவுமே கிடையாது. அது கட்டுக்கதை என்று சொன்னார்.

நம்முடைய காங்கிரஸ் தலைவர் அண்ணன் 

கே.எஸ்.அழகிரி அவர்கள், சக்ரவர்த்தி திருமகனைப் பற்றி - அது ஒரு கட்டுக்கதை என்று இராஜாஜி முன் னுரையிலேயே எழுதியிருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டார். இராஜாஜியைவிட இந்து மதத்தை ஆதரிப்பவர்கள்  வேறு யாராவது இருக்கிறார்களா?

‘‘டிஸ்கவரி ஆஃப் இண்டியா’’ எழுதிய நேரு

இராஜாஜி சொன்னது மட்டுமல்ல - ‘‘டிஸ்கவரி ஆஃப் இண்டியா'' எழுதிய நேரு அவர்கள், ‘‘இராமாயணம் ஆரிய - திராவிட யுத்தம்; அதிலொன்றுமில்லை, அது ஒரு கட்டுக்கதை'' என்று சொல்லியிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல, சுப்பிரமணிய பாரதியாரும் சொல்லியிருக்கிறார்.

அறிவியல் ரீதியாக சிந்திக்கவேண்டும்!

இப்படி ஒவ்வொருவரும் சொல்லியது - தமிழ்நாட்டுக் காரர்கள் சொன்னது மட்டுமல்ல, அயல்நாட்டுக்காரர்கள் மட்டும் சொன்னது மட்டுமல்ல, வரலாற்று ஆசிரியர்கள் சொன்னது மட்டுமல்ல; இந்தியப் பிரதமர் சொன்னது மட்டுமல்ல - எல்லா தலைவர்களும், எல்லா அரசியல் வாதிகளும், எல்லா நிபுணர்களும் சொன்னதை ஏற்றுக் கொள்ளாத நம்முடைய நண்பர்களே - அரசியல் ரீதியாக சிந்தியுங்கள்! 

ஆனால், படுபாதகமான, ஒரு முட்டாள்தனமான சிந்தனை உங்களுக்கு இருக்கக் கூடாது. அறிவியல் ரீதியாக சிந்திக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 51-ஏ

அரசமைப்புச் சட்டப் பிரிவு 51-ஏ என்ன சொல்லுகிறது என்பதைப் பாருங்கள்.

அறிவியல் மனப்பான்மை வேண்டும்; பகுத்தறிவை வளர்க்கவேண்டும்; அதற்காகப் பாடுபடவேண்டும் என்று சொல்லுகிறது.

ஆனால், நீங்கள் அதை குழிதோண்டிப் புதைக் கிறீர்கள். இது நியாயமா? என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்குப் புரியும்படி சொல்லுகிறேன் - கருத்துக் கணிப்பு ஆறு மாவட்டங்களில் நடைபெற்றது. ஒருமுறை அல்ல; இருமுறை நடத்தினோம்; கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடத்தினேன்.

யாராவது ஒருவர் சொன்னார்களா?

கருத்துக் கணிப்பு நடக்கும்பொழுது, ‘‘இந்த இடத்தில் இராமன் பாலம் இருக்கிறது; அங்கே இந்தத் திட்டத்தை செய்யாதீர்கள்'' என்று யாராவது ஒருவர் சொன் னார்களா?

ஜெயலலிதா சொன்னார்களா? 

பி.ஜே.பி. சொல்லிற்றா?

யாருமே சொல்லவில்லையே!

அப்பொழுது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு,  அதற்குப் பிறகு இந்தத் திட்டத்தை நான் ஆரம்பித்த வுடன், வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்ற ரயிலை, செயினைப் பிடித்து நிறுத்துவதுபோல், நிறுத்திவிட் டீர்களே, இது நியாயமா?

‘சாபம்’ என்று சொல்வதை 

ஆசிரியர் அய்யா நம்பமாட்டார்!

தமிழர்களுடைய ‘பாவம்’ பொல்லாதது; இந்த முறை நீங்கள் வெற்றி பெறவே மாட்டீர்கள். நான் வயிறெரிந்து சொல்கிறேன்.

என்மீது, ஆசிரியர் அய்யா கோபம் கொண்டாலும் பரவாயில்லை. 

‘‘சாபத்தை’’யெல்லாம் அவர் நம்பமாட்டார்; இருந்தாலும் நான் ‘சாபம்’ விடுகிறேன்.

நான் பட்ட வேதனை; துடித்த துடிப்பு - மறைந்த அண்ணன் கலைஞர் அவர்களுக்கும், ஆசிரியர் அவர் களுக்கும்தான் தெரியும்.

எந்தெந்த இடத்திற்குத் தீர்வுக்காகச் சென்றிருக்கி றேன்; தமிழ்நாடு சுற்றுச்சூழல் குழுமத்திற்குச் சென்றிருக் கிறேன்; காட்டிலாகாவை சந்தித்துப் பேசியிருக்கிறேன். கடல்வாரியக் குழுவைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்; வனவிலங்கு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருக் கிறேன். 

இந்திய அரசின் சுற்றுச்சூழல் இலாகா, பாதுகாப்புத் துறை, புராதன சின்னங்கள் துறை, கப்பல் துறை, வெளிவிவகாரத் துறை, இலங்கை அரசு வரை பேசி யிருக்கிறேன்.

எல்லோரிடமும் கலந்தாலோசித்து இருக்கிறேன். இவை தவிர பெரிய பெரிய நிறுவனங்களிடம் கலந்தலோசித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் முழு வதுமாகச் சொன்னால், நேரம் போதாது.

மனித நம்பிக்கைகள் எப்படி இருக்கவேண்டும்?

நூறு ஆண்டுகளாக இருந்த கோவிலை 

இடித்து இருக்கிறேன்

நூறு ஆண்டுகளாக இருந்த கோவிலை இடித்து இருக்கிறேன், இதே டி.ஆர்.பாலு - என்னுடைய இன் னொரு துறை சார்பாக.

நான்கு வழி சாலைகள் அமைக்கும் நேரத்தில், மேற்கு வங்காளத்தில் நூறு ஆண்டுகள் இருந்த மசூதியை இடித்திருக்கிறேன்.

கோவிலை இடித்திருக்கிறேன்; மசூதியை இடித்து இருக்கிறேன்; மாதாக் கோவிலை இடித்திருக்கிறேன்.

முதலமைச்சர் ஜோதிபாசு 

என்னை அழைத்தார்!

மேற்கு வங்காளத்தில் முடிசூடா மன்னனாக இருந்த முதலமைச்சர் ஜோதிபாசு அவர்கள் என்னை அழைத் தார்கள்.

அங்கே சென்று அவரைச் சந்தித்தேன். அவர்களு டைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் போர்க் குணம் நிறைந்தவர்கள்.

மெரைட் பல்கலைக் கழகத்தைக் கொண்டுவந்த பொழுது, கோப்பை இழுத்தார்கள்; ஓராண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோபங்களையெல்லாம் சரிப்படுத்தி, பிறகு பல்கலைக் கழகத்தைக் கொண்டு வந்தோம்.

வாக்கு வங்கியை பாதிக்குமே! 

மத நம்பிக்கையை பாதிக்குமே!!

ஜோதிபாசு அவர்கள் சொன்னார், ‘‘நூறு ஆண்டு களாக இருந்த மசூதியை இடித்துவிட்டால், வாக்கு வங்கியை பாதிக்குமே! மத நம்பிக்கையை பாதிக்குமே!! நீங்கள் செய்வது சரியா?’’ என்று என்னிடம் கேட்டார்.

நான் சொன்னேன், ‘‘அய்யா நீங்கள் அரசியலில் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கக் கூடியவர்; மிகப்பெரிய தலைவர்; இந்த நாட்டில் இருக்கின்ற மிகப்பெரிய தலைவர் யார் என்று கேட்டால், எங்கள் தலைவரைகூட சொல்லமாட்டேன்; உங்களைத்தான் சொல்வேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

‘‘நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்; கலை ஞரைவிடவா, நான் பெரிய ஆள்?’’ என்று சொன்னார். அவ்வளவு எளிமை.

‘‘உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகும் உங்களிடம் வந்திருக்கிறார்கள்’’ என்றேன்.

‘‘சரி, பரவாயில்லை. அவர்கள் வெளியில் இருக் கிறார்கள்; அவர்களை அழைத்து சமாதானம் செய்’’ என்றார்.

அவர்களை அழைத்துச் சொன்னேன்; ‘‘என்னுடைய ஊரில், என்னுடைய தொகுதியிலேயே சரசுவதி, லட்சுமி, பார்வதி கோவில்களை இடித்திருக்கிறேன். எனக்கு வாக்குகள் வராது என்று தெரியும். ஆனாலும், வாக்கு களை எப்படி வாங்குவது என்றும் எனக்குத் தெரியும்.

எனக்கு வேறு வழி கிடையாது; 

அதை  இடித்துத்தான் ஆகவேண்டும்

தயவு செய்து கோவில்களை இடிக்காதீர்கள்; நமக்கு வாக்குகள் வராது என்று எங்களுடைய தோழர்கள் எல்லாம் சொன்னார்கள்.

ஆனால், எனக்கு வேறு வழி கிடையாது; அதை  இடித்துத்தான் ஆகவேண்டும். அவர்களுக்கு இதைவிட பெரிய கோவிலாக, மண்டபத்தோடு கட்டித் தருகிறேன் என்று சொல்லி, அதே மாதிரி செய்துகொடுத்தேன்.

இதுபோன்று பல இடங்களில், மத நம்பிக்கை என்று சொல்பவர்களையெல்லாம் சமாதானம் செய்து நான் திட்டங்களை நிறைவேற்றினேன்’’ என்று அவர்களிடம் கூறினேன்.

வடபுலத்தில் உள்ள அத்துணை சாமியார்களையும் அழைத்தேன்!

ஆசிரியர் அவர்கள் என்னை திட்டக் கூடாது; வடபுலத்தில் உள்ள அத்துணை சாமியார்களையும் அழைத்தேன். கீழே இறங்கிச் சென்றேன்; வாசலில் நின்று அவர்களை அழைத்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றேன். அவர்களை அழைத்துச் சென்று, ஒரு மணிநேரம் பிரசன்டேசன் செய்து காட்டினேன். சேது சமுத்திரத் திட்டத்திற்காக என்னவெல்லாம் செய்கிறோம்; அங்கே இராமர் பாலம் என்று ஒன்று இல்லை என்று சொன்னதை, அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு சென்றார்கள்.

அப்படி அவர்கள் ஒப்புக்கொண்டு போனார்களா? இல்லையா? என்பதை அவர்களை அழைத்துக் கேளுங்கள்; இன்றைக்கும் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

நான் என்னுடைய தலைவரிடம்கூட சொல்லவில்லை;  நானே முயற்சிகள் எடுத்துச் செய்தேன்!

இந்தப் பணிகளையெல்லாம் நான் என்னுடைய தலைவரிடம்கூட சொல்லவில்லை. நானே முயற்சிகள் எடுத்துச் செய்தேன். அவர்களை எப்படியாவது சமாதானம் செய்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்று.

ஒப்புக்கொண்டு போன சாமியார்கள், தலைவர் கலைஞர் அவர்களுடைய நாக்கை அறுப்போம் என்று  சொன்னார்கள்.

தலைவருடைய நாக்கை அறுத்துக் கொண்டு வருபவர்களுக்கு பரிசு தருகிறோம் என்று சந்நியாசிகள் சொன்னார்கள்.

‘‘எங்களுடைய மத நம்பிக்கை’’ என்று அப்பொழுது சொல்லவில்லையே!

நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்; மத நம்பிக்கை, மத நம்பிக்கை என்று சொல்கிறீர்களே, நான் கொள்ளிடம் குறுக்கே அணை கட்டினேன்; காவிரிக்குக் குறுக்கே பாலம் கட்டினேன். கங்கையைப் போற்றிப் புகழுகிறீர்களே, அங்கே வெடி வைத்துத் தகர்த்துத்தானே பாலம் கட்டினேன். அப்பொழுதெல்லாம் அந்தப் பாலங்களைக் கட்டவேண்டாம் என்று சொல்லவில்லை; ‘‘எங்களுடைய மத நம்பிக்கை’’ என்று அப்பொழுது சொல்லவில்லையே!

மத சாயம் பூசவேண்டாம் என்பதுதான் என்னுடைய அன்பு வேண்டுகோள்!

மத நம்பிக்கை, மத நம்பிக்கை என்று சொல்லுகின்ற நீங்கள், காவிரித் தாய், கங்கைத் தாய், எங்கெங்கே எல்லாம் தண்ணீர் ஓடுகிறதோ, அவற்றை தாய் என்று சொல்லுகிறீர்கள்; தவறொன்றுமில்லை. ஆனால், அவற்றிற்கெல்லாம் மத சாயம் பூசவேண்டாம் என்பது தான் என்னுடைய அன்பு வேண்டுகோள்.

சரி, நீங்கள் நடந்துகொண்டது சரியா?

ராமேஸ்வரம் கோவில் முதல் பிரகாரம்; மூன்று தீர்த்தம் இருந்ததே! 

சிவ தீர்த்தம் 

சர்வ தீர்த்தம்

சத்யா அமிர்த தீர்த்தம்

அந்தப் பிரகாரத்தில் மூன்று கிணறுகள் இருக்கும்; அவற்றில் தண்ணீர் எடுத்து இந்துக்கள் எல்லாம் ஊற்றிக் கொள்வார்கள்.

பொதுமக்களிடம் 

கருத்துக் கேட்டீர்களா?

ஒரு நம்பிக்கைதான். ஆனால், அப்படி இருந்த தீர்த்தத்தை யாரைக் கேட்டு மாற்றினீர்கள். பொதுமக் களிடம் கருத்துக் கேட்டீர்களா? இல்லையே!

பக்தர்கள் சொன்னால் நீ கேட்கமாட்டாய்; சிருங்கேரி மடம் சொன்னால், சங்கராச்சாரி மடம் சொன்னால், நீ மாற்றிவிடுவாயா?

இவற்றையெல்லாம் கேட்கவேண்டிய நேரம் வந்தால், கேட்கின்றபொழுது, உங்களுடைய தலைகுனிய வேண்டிய நேரம் வந்துவிடும்.

 1964 இல் வந்த புயலில் அக்னி தீர்த்தம் அடித்துக்கொண்டு போய்விட்டது. சிருங்கேரி சங்கராச் சாரியும், காஞ்சி சங்கராச்சாரியும் சொன்னவுடன், மீண்டும் அக்னி தீர்த்தம் அங்கே வந்தது.

மனிதர்கள் நினைத்தால், 

மாற்றங்களை ஏற்படுத்த முடியும்!

இவற்றையெல்லாம் மனிதர்கள் நினைத்தால், மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றால், டி.ஆர்.பாலுவோ, அருமை அண்ணன் வீரமணி அய்யாவோ, அண்ணன் கலைஞர் அவர்களோ, தளபதி ஸ்டாலின் அவர்களோ, என்னுடைய அருமை நண்பர் அழகிரி அவர்களோ, வி.சி.க. தலைவர் தோழர் திருமா அவர் களோ, தோழமை இயக்கங்களோ சொன்னால் ஏன் கேட்கமாட்டேன் என்கிறீர்கள்?

உங்களுக்கு சரியாகப் படுகிறதா?

(தொடரும்)


No comments:

Post a Comment