மூன்று முறை தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது சரியல்ல! விளைவுகளுக்கு யார் பொறுப்பு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

மூன்று முறை தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது சரியல்ல! விளைவுகளுக்கு யார் பொறுப்பு?

சென்னை, பிப்.12  மூன்று முறை தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான ஆர்.எஸ்.எசுக்கு சென்னையில் ஊர்வலம் நடத்திட  அனுமதி அளிப்பது சரியல்ல - விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்பது முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (11.2.2023) சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நீதித் துறையிலும் சமூகநீதி கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காவல்துறைக்கு புதிதாக மனுபோடச் சொல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறதே?

செய்தியாளர்:  ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் குறித்து ஏற்கெனவே தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து, புதிதாக மனு போடச் சொல்லி இரண்டு நீதிபதி அமர்வு உத்தரவு போட்டிருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: மற்ற கட்சிகளைவிட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வித்தியாசமானது; பயங்கரவாத இயக்கங்களை தனித்தனியே நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.

அதுமட்டுமல்ல, மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு இந்தியாவிலேயே வேறு எந்த இயக்கமும் கிடையாது; அந்த வரலாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உண்டு.

ஷாகாக்கள் நடத்தப் போகிறோம் என்று சொல்லி உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். இன்னுங்கேட்டால், வெடி மருந்துகளைப் பயன்படுத்திய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து, எம்.பி.,க்களாக இப்பொழுது இருக்கிறார்கள் என்கிற வரலாறும் உண்டு.

கோட்சேவை மிக முக்கியமான வழிகாட்டியாகக் கொண் டுள்ள ஓர் அமைப்பால் நாட்டில் கலவரங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டில் கலவரங்கள் வரக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கிறது.

ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகள் வேறு மாதிரியாக இருக்கின்றன என்று சொன்னால், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு?

எனவேதான், இப்படிப்பட்ட சிக்கல்கள் இருப்பதினால், இன்னும் அதிகமாக நாங்கள் பணியாற்றவேண்டும்; மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக் கூடிய பணியை செய்யவேண்டும்.

வேலியே பயிரை மேயக்கூடிய நிலை இருந்தால், புது வேலிகளைத் தேடவேண்டும். அதுதான் முக்கியம்.

மக்கள் தீர்ப்புதான் இறுதித் தீர்ப்பு!

செய்தியாளர்: இன்றைக்கு மதுரையில் ஆர்.எஸ்.எஸ். வழக்குரைஞர்கள் நடத்தும் மாநில கருத்தரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்திருக்கின்றனவே, அதுகுறித்து தங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: ஆர்.எஸ்.எஸ். வழக்குரைஞர்கள் கருத் தரங்கில் மட்டுமல்ல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கின்ற ஓர் அம்மையார், கேரள மாநிலத்தில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, இருக்கிறார்; மோசமான தீர்மானங்களைப் போட்டிருக்கிறார்கள்; முழுக்க நனைந்த பிறகு, முக்காடு தேவையில்லை என்று வெளியே வந்திருக்கிறார்கள்; ஒன்றியத்தில் தங்களுடைய ஆட்சி நடை பெறுகிறது என்கிற தைரியத்தில், எதுவும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு மக்கள் தீர்ப்பு; 2024 ஆம் ஆண்டு நடை பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான்!

                                              நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment