உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
அய்தாராபாத், பிப். 27- அய்.அய்.டி.யில் முதலாமாண்டு படித்த தர்ஷன் சோலங்கி என்ற குஜராத் மாணவர் கடந்த 12 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இம்மாணவர் ஜாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவர்கள் புகார் தெரி வித்தனர்.
இந்நிலையில் அய்தராபாத்தில் உள்ள சட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய பல் கலைக்கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பங்கேற்று பேசியதாவது:
மும்பை அய்.அய்.டி. தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக அண்மையில் படித்தேன். கடந்த ஆண்டு ஒடிசாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பழங்குடியின மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை இது எனக்கு நினைவூட்டியது. இந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர் களை எண்ணி மிகவும் கவலைப்படுகிறேன். மாணவர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற உயிரைத் துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நமது நிறுவனங்கள் எங்கே தவறு செய்கின்றன என்று நானும் யோசிக்கிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் வழக்கமாகி வருகின்றன. இவர்களின் எண்ணிக்கை வெறும்புள்ளி விவரங்கள் அல்ல. அவை பல நூற்றாண்டு கால போராட்டத்தைச் சொல் கின்றன. இந்தப் பிரச்சினையை நாம் தீர்க்க விரும்பினால் பிரச்சினையை அங்கீகரிப் பதே அதற்கான முதல் படி என நான் நம்புகிறேன்.
மாணவர்களின் மன ஆரோக்கியம் போன்று வழக்குரைஞர்களின் மன ஆரோக் கியமும் முக்கிய மானது. மாணவர்களிடையே கருணை உணர்வை கல்வி பாடத் திட்டம் ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர் களின் பிரச்சினையை கல்வி நிறுவனத் தலைவர்களும் உணர வேண்டும். கல்வி நிறுவனங்களில் கருணை இல்லாததே பாகு பாடுகளுக்கு காரணமாக இருக்கும் என நான் கருதுகிறேன். எனவே கருணையை ஊக்குவிப்பதே கல்வி நிறுவனங்களின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் கூறினார்.
No comments:
Post a Comment