திரு. டி.ஆர். பாலு எம்.பி. பேசியதில் என்ன குற்றம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 2, 2023

திரு. டி.ஆர். பாலு எம்.பி. பேசியதில் என்ன குற்றம்?

மதுரையில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த (27.1.2023), சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட திறந்தவெளி மாலை மாநாட்டில் தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான மானமிகு டி.ஆர். பாலு அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிடுங்கி "ஆகா இப்படி எல்லாம் பேசலாமா? இது நியாயமா?" என்று 'ஆச்சா போச்சா' என்று 'தினமலர்' அலறுகிறது. 

"தன் தொகுதியில் - ஜி.எஸ்.டி. ரோட்டில் இருந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற தெய்வங்களின் கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கினாராம். கோவில்களை இடித்த தன்னை ஹிந்துக் கடவுள்கள் எதுவும் செய்யவில்லை என்றும் தன் வீர தீர பராக்கிரம செயல்களைப் பட்டியலிடுகிறார்.

கோவில்களை இடித்தால் ஓட்டுகள் வராது என்று எனக்குத் தெரியும். அந்த ஓட்டுகளை எனக்கு எப்படி விழ வைக்க வேண்டும் என்பதும் தெரியும்" என்று திரு டி.ஆர். பாலு எம்.பி., பேசியதாக ஒரு கடிதத்தை 'தினமலர்' வெளியிட்டுள்ளது. ('தினமலர்' 1.2.2023)

திரு. டி.ஆர். பாலு அவர்கள் பேசியதை முழுமையாக வெளியிடும் அறிவு நாணயம் இல்லையே! "ஹிந்துக் கோயில்களை மட்டுமல்ல; தர்க்காக்களையும், மாதா கோயில் களையும் இடித்தேன்.  சாலை வசதிகள், மேம்பாலங்களை செழுமைப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் மட்டுமல்ல - மேற்கு வங்காளத்திலும் 19 கோவில்களை இடித்தேன். மேற்கு வங்க முதலமைச்சர் திரு. ஜோதிபாசு அழைத்துக் கேட்டபோது விளக்கங்களைக் கூறினேன்; அது மட்டுமல்ல, இடிக்கப்பட்ட கோயில்களுக்குப் பதிலாக கோவில்களையும் கட்டிக் கொடுத்தேன்" என்று சொன்னாரே, அந்தப் பகுதிகளை இருட்டடிப்புச் செய்த 'தினமலரின்' இருட்டுப் புத்தியை என்னவென்று சொல்ல!

இன்னொன்றையும் - இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். சட்டத்திற்குட்பட்ட, சொந்தமான இடங்களில் இருந்த எந்தக் கோயில் இடிக்கப்பட்டது? அரசு நிலத்தில் அனுமதியின்றிக் கோயில் கட்டுவதுதான் பக்தி கற்றுக் கொடுத்த ஒழுக்கமா? 

"தமிழ் நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை 77,450. அவை அகற்றப்பட வேண்டும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்; இதனைச் செயற்படுத்தாத மாநில  அரசின் தலைமைச் செய லாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியது உண்டே! (14.9.2010).

12 ஆண்டுகள் ஓடி விட்டன. உச்சநீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்படவில்லை. 

உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்று எங்களால் சட்டப் போர் நடத்த முடியாதா?

அப்படி இடிக்கும் பட்சத்தில், நீதிமன்றத் தீர்ப்பின்படி தான் நடக்கிறது என்று 'தினமலர்'க் கூட்டம் ஏற்றுக் கொள்ளுமா?

திராவிட இயக்கம் எதைச் செய்தாலும் குற்றம் கண்டு பிடிப்பது, இட்டுக்கட்டி எழுதுவது, திரிப்பது என்பது இந்தத் திரிநூல்களுக்கே உரித்தான பிறவிப் புத்தியாகும்.

"தி.க. தலைவர் வீரமணிமீது எவனாவது கையை வைத்தால், அவன் கையை வெட்டுவேன்... நான் தவறு நடக்கும்போது முரடனாக இருப்பேன். என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உங்களை (ஆசிரியர் கி.வீரமணியை) யாராவது சீண்டினால், நான் சும்மா இருக்க முடியுமா? உங்களால் திருப்பி அடிக்க முடியாது; பலம் கிடையாது.

ஆனால், எனக்குப் பலம் இருக்கு. திருப்பி அடிப்பேன் எவனாவது ஒருத்தன் வீரமணி மேல் கையை வைத்தால் அவன் கையை வெட்டுவேன். இது என்னுடைய தர்மம்" என்று திரு. டி.ஆர். பாலு கூறியதாக இதே "தினமலரிலேயே" வெளி வந்துள்ளது (29.1.2023).

இதில் என்ன குற்றம் காண முடியும்? திராவிடர் கழகத் தலைவரை அடித்தால் (உயிருக்கு ஆபத்தாகக்கூட இருக்கலாம்) அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று 'தினமலர்'க் கூட்டம் விரும்புகிறதா?

வாழ்நாள் முழுவதும் அகிம்சை பேசிக் கொண்டிருந்த - தேசத் தந்தை என்று போற்றப்பட்ட, 'மகாத்மா' என்று கூறப்பட்ட காந்தியாரையே திட்டமிட்டு சுட்டுக் கொன்ற கூட்டமாயிற்றே! இன்றைக்கும் அந்தக் கொலைகார  கோட்சேவுக்குக் கோயில் கட்டும் கூட்டம், தன்னால் மதிக்கப்படும் தலைவரைச் சீண்டினால், மேலே கையை வைத்தால், அந்தக் கையை வெட்டுவேன் என்பதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டதாம்?

"மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி" என்பது இதுதான்!

மதுரைக் கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தின் பலன் குறித்து ஆதாரங்களை அடுக்கடுக்காக திமுக பொருளாளர் திரு. டி.ஆர். பாலு எம்.பி. அவர்கள் அள்ளி வீசினாரே - அதற்கு ஒரு வரி பதில் உண்டா பார்ப்பனக் கூட்டமே!

No comments:

Post a Comment