இராமேசுவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
இராமேசுவரம், பிப்.27 திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவராக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (26.2.2023) இராமேசுவரம், தேவகோட்டை யில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இராமேசுவரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
ஈரோடு கிழக்குத் தொகுதியின் தனிப்பெரும் வெற்றியின்மூலமாக....
செய்தியாளர்: திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட் டில் எந்த அளவிற்கு எழுச்சியை ஏற்படுத்தி இருக் கிறது?
தமிழர் தலைவர்: மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளிவரும் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவின் தனிப்பெரும் வெற்றியின் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
அதுமட்டுமல்ல, 2024 ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தமிழ்நாட் டைத் தான் - தமிழ்நாட்டின் கூட்டணியைத்தான் - தமிழ்நாட்டின் முதலமைச்சரைத்தான் - தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டுதலைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது; எதிர்க்கட்சிகள் எதிர்பார்க் கின்றன என்று சொல்வதே திராவிட மாடல் ஆட்சியின் எழுச்சிக்கு மிகத் தெளிவான ஆதாரமாகும்.
இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவராக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செய்தியாளர்: மார்ச் ஒன்றாம் தேதி 70 ஆவது பிறந்த நாளை முதலமைச்சர் கொண்டாடவிருக்கிறார்; அவருக்கு உங்கள் வாழ்த்துச் செய்தி என்ன?
தமிழர் தலைவர்: என்றும் இளைஞர் அவர். மேலும் சிறப்பாக அவருடைய கிரீடத்தில் முத்துகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன; அவை ஒளிமுத்துக்களாக இருக்கின்றன. இந்தியாவிற்கே அவர் வழிகாட்டக் கூடியவராக இருக்கிறார்.
தான் மட்டும் இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே முதல் முதலமைச்சராக இருந்தால் மட்டும் போதாது; தமிழ்நாடும் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று அவர் சொன்னது அவருடைய குறிக்கோளைக் காட்டுகிறது.
என்றைக்கும் அவர் அந்த இலக்கு நோக்கியே சென்று கொண்டிருக்கிறார்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment