(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மஹா சிவராத்திரியாம்-மண்ணாங்கட்டியாம்
மின்சாரம்
பிப்ரவரி 18ஆம் தேதி மஹா சிவராத்திரியாம்! வழக்கம்போல புராணக் குப்பைக் கதைகள்.
அன்றைய தினம் சிவன் கோயில்களில் சக்கைப் போடுதான் - பார்ப்பனர் சுரண்டலோ, சுரண்டல்தான்.
உண்மையிலே பக்திதான் என்றால், பரமேசுவரன் அருள் என்றால் அங்கே பணத்துக்கு என்ன வேலை? தட்சணத்துக்குத்தான் என்ன வேலை?
பக்தர்கள் சிந்திக்க வேண்டாமா?
கதையைப் படித்துப் பாருங்கள்:
“தேவர்களும், அசுரர்களும் வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். இந்த வேதனை தாங்காத வாசுகியின் வாயிலிருந்து கொடிய ஆலகால விஷம் வெளிப்பட்டது, அந்த விஷத்தின் கொடுமையிலிருந்து தேவர்களைக் காக்க அதை தான் எடுத்து உண்டார் சிவன். விஷம் கீழே இறங்கி சிவனுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதே என்பதற்காக பார்வதி தேவி தன் கைகளால் சிவபெருமானின் கழுத்தைப் பிடித்தார். இதனால் விஷம் கீழே இறங்காமல் கழுத்திலேயே நின்று கொண்டது. விஷம் கீழே இறங்காமல் இருக்க சிவபெருமான் ஒரு நாள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் என்பதற்காக பார்வதி தேவி அவரை தூங்காமல் பார்த்துக் கொண்டார். இரவு பார்வதி தேவியும், சிவனும் விழித்திருந்தனர். இந்த சம்பவம் நடந்தது மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி இரவுதான்.
எனவே, சிவனின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும் மகாசிவராத்திரி விரத வழிபாட்டை இருபத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து செய்து வருபவர்கள் சிவகதி அடைவார்கள், அவர்களின் மூவேழு தலைமுறைகளுக்கும் நற்கதி மற்றும் முக்தி கிடைக்கும் என்பது அய்தீகம்.”
- இவ்வாறு பக்தித் தேன் சொட்டச் சொட்ட ஓர் இதழ் எழுதியிருக்கிறது.
கொஞ்சம் அறிவைக் கொண்டு அலசலாமா?
வாசுகி பாம்பு கக்கிய விஷத்தின் கொடுமையிலிருந்து தேவர்களை மட்டும்தான் காக்கவேண்டுமா? ஏன் அந்த அசுரர்கள் என்ன ‘பாவம்‘ செய்தார்கள்? அந்த அசுரர்களும் சாட்சாத் அந்த ஆண்டவன் படைப்புதானே? அப்படி இருக்கும்போது ஒற்றைக் கண்ணில் வெண்ணெய்யும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்? பாரபட்சம் உள்ளவன்தான் பகவானா?
அது ஒருபுறம் இருக்கட்டும், அவன்தான் சர்வசக்தி வாய்ந்த கடவுளாயிற்றே - அவனை ஆலகால விஷம் என்ன செய்ய முடியும்?
விஷம் சிவனைக் கொன்று விடும் என்றால், சிவனுக்குச் சக்தியா- விஷத்துக்குச் சக்தியா?
கடுகளவு புத்தியுள்ளவர்கள் கூட - இப்படித்தானே சிந்திப்பார்கள்? ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் - ஓ சிந்திக்க மறுக்கும் - பயப்படும் இடம்தானே பக்தி?
கழுத்துக்குக் கீழே விஷம் இறங்காமல் தடுக்க ஒரு பார்வதி தேவையா?
அப்படியென்றால், சிவனைவிட சக்தியுள்ளவள் அவன் மனைவிதானா? விஷம் கீழே இறங்காமல் இருக்க கடவுள் ஓர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்க வேண்டுமா?
கடவுள் தூங்கக் கூடச் செய்வாரா? அப்படித் தூங்கும்போது இந்த மக்களை வேறு யார் காப்பாற்றுவார்களாம்?
இரவு முழுவதும் சிவனும், பார்வதியும் விழித்திருந்தார்களே - அந்த இரவுதான் மஹா சிவராத்திரியாம்!
அந்த ராத்திரியில் பக்தர்கள் விழித்திருந்து விரதம் காத்தால் சிவகதி அடைவார்களாம்!
ஒரு துண்டு விஷத்துக்காக சிவன் அடைந்த கதியைத்தான் பார்த்தோமே! சிவனுக்கே இந்தக் கதி என்றால், பக்தர்களின் கதி என்ன?
கள்குடித்த பைத்தியக்காரன்போல எவனோ எந்தக் காலத்திலோ உளறிக் கொட்டியது எல்லாம் பண்டிகையா? பணத்துக்கும், நேரத்துக்கும் கேடா?
பக்தர்களே, சிந்திப்பீர்!
குறிப்பு: வரும் பிப்ரவரி 18 அன்று மகா சிவராத்தியாம்.
No comments:
Post a Comment