16.2.2023 அன்று புதுக்கல்லூரியில் உள்ள அல்லாமா புஹாரி அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் எஸ்.பஷீர் அகமது தலைமை வகித்தார். தொடக்க உரையினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன் ஆற்றினார்.
கருத்தரங்கிற்கு வருகை தந்தோரை வரவேற்று, புதுக்கல்லூரி வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் எம்.எஸ்.ஏ.ஜபருல்லாகான் உரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்றார்.
கருத்தரங்கிற்கு புதுக்கல்லூரி வரலாற்றுத் துறை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்ட, ஆய்வு மாணவர்கள் திரளாக வருகை தந்திருந்தனர், தென் சென்னை மாவட்ட ப.க. தலைவர் மாணிக்கம், பெரியாரிய ஆய்வாளர் நாகராஜன், கொடுங்கையூர் தங்கமணி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மற்றும் திராவிடர் வரலாற்றுப் பற்றாளர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொடக்கவுரை
கருத்தரங்கில் தொடக்கவுரை ஆற்றிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் குறிப்பிட்டதாவது:
இந்திய வரலாற்றுப் பேரவை(Indian History Congress) 1935ஆம் ஆண்டிலிருந்து இருந்து செயல்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகளில் தென்னிந்திய வர லாறு பற்றி விவாதிக்க, பங்கேற்றிட உரிய முக்கியத்துவம் அளிக்கப் படாத காரணத்தால், தென் மாநிலங்களிலிருந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் மிகப் பலர் முயற்சி எடுத்து தென்னிந்திய வரலாற்றுப் பேரவை (South Indian History Congress) எனும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தென்னிந்திய வரலாற்றில் மேலும் குறிப்பாக திராவிடர் வரலாறு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அவை குறித்த செய்திகள், கருத்துகள் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிந்தனையில் உருவானதுதான் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidan Historical Research Centre) வரலாற்றுப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் அங்கம் வகிக்கும் இந்த ஆய்வு மய்யத்தின் செயல்பாட்டிற்கு முழு சுதந்திரத்தினை, கருத்து சுதந்திரத்தினை, உண்மை நிலையினை கலந்துறவாடும் உரிமையினை ஆசிரியர் அவர்கள் வழங்கியுள்ளார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங் காலத்தில் அவருக்கு இந்திய நிலையின் உண்மை நிலையினை கண்டறியும் பணியினை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சமஸ்கிருத நூல்களை மொழியாக்கம் செய்திடும் பணிகளை, ஜோன்ஸ் முதலான ஆங்கில ஆய்வாளர்களைக் கொண்டு மேற்கொண்டார். இந் நாட்டுச் சூழலை வெறும் சமஸ்கிருத இலக்கிய கண்ணோட்டத்துடன் முழுமையற்ற முறையில் பார்த்திடும் அணுகுமுறைகள் நிலவியது.
இங்கிருந்த ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை, மத அடிப்படையில் குறிப்பிட ‘இந்து' என்ற சொல்லை பதிவிடும் நிலை வாரன் ஹேஸ்டிங் காலத்தில்தான் தொடங்கியது.
கருப்பு என்றாலே ஒவ்வாமை எனக் கருதிய ஆங்கிலேயர்கள் இங்குள்ள ஒப்பீட்டளவில் வெள்ளை நிறத்தில் உள்ளவர்கள் எல்லாம் தமது அய்ரோப்பிய மொழி, பண்பாட்டோடு தொடர்பு உள்ளவர்கள் என்று கூறுவதிலே அக்கறை, ஈடுபாடு காட்ட ஆரம்பித்தனர்.
இந்திய கல்வியாளர்களும் அதை வழி மொழியும் வகையில் இந்த மண்ணுக்கு வந்த ஆரியர்கள், அதற்கு முன்பு இங்கு வாழ்ந்த பூர்வ குடிகளான திராவிட மக்களுக்கு பண்பாடு, மொழி பற்றிய உணர்வை ஊட்டியதாக - உண்மைக்கு மாறான செய்திகளை - வரலாற்றுக் குறிப்புகளாக பதிவிடத் தொடங்கினர். இந்த வகையில் வரலாற்றாளர்களாக விளங்கிய ஏ.எல்.பாஷ்யம், ரெமிளா தாப்பர், டிரடட்ஸ்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துறைத் தலைவராக விளங்கிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (South Indian History - எனும் நூலை எழுதியவர்) அவர்களுடன் இணைப் பேராசிரியராக (Reader) பணியாற்றிய டி.ஆர்.சீனிவாச அய்யங்கார் History of Tamils (தமிழர்களின் வரலாறு) எனும் நூலை எழுதினார். அதே காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இருந்த டி.ஆர். சேஷய்யங்கார் Dravidian India (திராவிட இந்தியா) எனும் நூலை எழுதினார். அதுவரையில் நிலவிவந்த கருத்துகள் கல்வியாளர்கள் வெளியில் திராவிடர் குறித்து வெளிவரத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து பொது வெளியில் ஆரிய சனாதன (அ)தர்மத்தை எதிர்த்து வள்ளலார், அயோத்தி தாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோர் குரல் கொடுக்கின்றனர். அரசியல் தளத்தில் ஆரிய ஆதிக்க எதிர்ப்பினை நீதிக்கட்சி எனும் அரசியல் அமைப்பு உருவாகி சில தளங்களில் ஆதிக்கத்தைத் தகர்த்தது. இந்த திராவிட சிந்தனையை பொது வெளியில் தனது இடைவிடாத பிரச்சாரத்தால் அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும் பலவிதத்திலும் விரிவாக்கி ஆக்கம் கூட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். இன்று அந்த வழியில் சமுதாயப் பணியினை பல தளங்களில் பெருக்கி வரும் ஆசிரியர் கி.வீரமணி அவாகள் வரலாற்று ஆய்வின் மூலம் திராவிடர் பற்றிய குறிப்புகள் மேலும் வலுப்பட வேண்டும் என வரலாற்றாளர்கனை அங்கமாகக் கொண்டு ஏற்படுத்திய அமைப்புதான் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம். அதன் புரவலரான ஆசிரியர் அவர்களிடம், ஆய்வு மய்ய நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் குறிப்பாக மாணவர்களிடம் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் வைத்தபொழுது மகிழ்ச்சியுடன் உற்சாகப்படுத்தினார். அதன் முதல் நிகழ் வாக புதுக்கல்லூரியில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. அந்த வகையில் புதுக்கல்லூரியும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய வரலாற்றில் ஒரு சிறப்பிடம் பெற்றுவிட்டது எனக் கூறி முடிக்கிறேன்.
- இவ்வாறு முனைவர் பெ.ஜெகதீசன் தமதுரையில் குறிப்பிட்டார்.
கருத்தரங்கில் உரையாற்றிய வரலாற்றுப் பேராசிரியர் களின் உரைச் சுருக்கம் பின்வருமாறு:
சிந்துவெளிப் பண்பாட்டில்
திராவிடக் கூறுகள்
பேராசிரியர் முனைவர் பி.சண்முகம் தமது ஆய்வுரையில் குறிப்பிட்டதாவது.
இன்றைக்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன்பு திரா விடப் பண்பாட்டு குறிப்புகள் அகழாய்வின் முடிவுகளாக உலகிற்கு எடுத்துச் சொல்லப்பட்டன. திராவிடம் பற்றிய குறிப்புகள் அதற்கு முன்பிருந்தே நிலவி வந்தாலும், அகழாய்வின் முடிவுகளாக வெளியிடப்பட்டது 1922ஆம் ஆண்டில்தான். அன்றைய பிரிட்டிஷ் இந்தியா, இன்றைய பாகிஸ்தான் நிலப்பரப்பில் ஹரப்பா எனும் இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுக் குறிப்புகள் வெளிவரத் தொடங்கின. 1924ஆம் ஆண்டில் மெகஞ்சதாரோ அகழாய்வுக் குறிப்புகள் வெளிவந்தன. இந்த அகழாய்வுக் குறிப்புகளை சிந்துவெளிப் பண்பாட்டின் அடையாளங்களாக முதன் முறையாக அறிஞர் ஜான் மார்ஷல் வெளியிட்டார். அகழாய்வினை நடத்திய பின் லண்டனிலிருந்து ‘தி இல்லஸ்டிரேட் வீக்லி‘ எனும் இதழில் அந்த ஆய்வு முடிவினை கட்டுரையாக வெளியிட்டார். அதுவரை மொழி சார்ந்த முடிவுகளாக, இலக்கியச் சான்றுகளாக நிலவிவந்த திராவிடப் பண்பாட்டு கூறுகள் சிந்து வெளியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த நாகரிக மக்களின் பண்பாட்டு, அடையாளங்களாக வெளிவந்தன. சிந்து வெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு கூறுகளின் வழக்கம் அதற்கும் முந்தையது. அதன் தொடக்கம் கி.மு. 6000களில் என கணிக்க முடியும். அப்படித் தொடங்கிய திராவிட நாகரிகம் கி.மு. 2500-1900 ஆண்டுகளில் முன்னேறிய நிலையினை அடைந்தது. பின்னர் நடைபெற்ற இயற்கை இடர்களால் அந்த மக்கள் வாழ்ந்த இடங்கள் புதையுண்டு போயின.
விந்திய மலைக்கு வடக்கே கங்கைச் சமவெளிக்கு மேற்கே ஏறக்குறைய 1500 ச.கி.மீ. பரப்பில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்களாக வெளிப்பட்டன. பாபிலோனிய, எகிப்திய நாகரிகங்கள் நிலவி வந்த பரப்பினை ஒப்பிடுகையில் சிந்துவெளி நாகரிகம் பரந்து விரிந்தது. இன்றைய இந்தியா, பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகள் இதனை வெளிப் படுத்தின. இதன் தொடக்கம் புதிய கற்காலம்(neolithic period) எனக் கணிக்கின்றனர்.
சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்கள், பின்னர் புலம் பெயர்ந்த ஆரியர்களுக்கு முன்பே அந்த மண்ணில் வாழ்ந்த மக்கள், அங்கு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் பல கி.மு. 4000 ஆண்டில் நிலவிய மெசபடோமியா பகுதியில் அகழாய்வில் எடுக்கப்பட்ட முத்திரைகளுடன் ஒத்துப் போகின்ற வகையில், பண் பாட்டுக் கூறுகள் ஒத்துப் போகின்ற வகையில் உள்ளன. குறிப்பாக மாக்கல் முத்திரை முக்கிய ஒற்றுமையாகும். இப்படிப்பட்ட ஒற்றுமை சிந்துவெளி நாகரிகமான திராவிட பண்பாட்டின் கூறுகளின் தொன்மையினைப் புலப்படுத்துவாக உள்ளது. மொழி அடிப்படையில் கூறினாலும் சிந்து சமவெளி நாகரிக மக்கள் பேசிய மொழி தமிழாக இருக்க முடியும் என மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
தமிழில் இன்றும் வழக்கத்தில் உள்ள வேளாண் பயிர்களில் ‘எள்' என்பது அன்றைய மெசபடோமியா இன்றைய ஈரான், ஈராக் ஆகிய பகுதிகளிலும் ‘எள்' என்றே அழைக்கப்படுகிறது.
ஆரியர்கள் போற்றிய வேதங்களில் திராவிட மொழி களின் கூறுகள் பல உள்ளன. அன்றைய பயன்பாட்டில் திராவிட பண்பாட்டுச் சொற்களைத்தான் பின்னர் வேதத்தில் ஆரியர்கள் கையாளும் சூழ்நிலை உருவானது.
லிங்க வழிபாடு சிந்து வெளி நாகரிக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டைக் கடைப் பிடிக்கும் மக்களை மிலேச்சர்கள் - தாழ்வானவர்கள் என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி சிந்து வெளி நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் திராவிடக் கூறுகளே. அதன் காலம் தொன்மை யானது. ஆரியர் ஊடுருவலுக்கு முன்பே இந்த மண்ணில் வாழ்ந்த மக்களுடையது.
இவ்வாறு முனைவர் பி.சண்முகம் தமது ஆய் வுரையில் குறிப்பிட்டார்.
இந்தியப் பண்பாட்டு மரபுகளின்
அடிப்படை திராவிட வேர்களே!
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன், ‘இந்திய பண்பாட்டு மரபுகளின் அடிப்படை திராவிட வேர்களே’ எனும் தலைப்பில் உரையாற்றியதில் ஒரு பகுதி.
திராவிடர்கள் இந்த மண்ணில் நாகரிகமாக வாழ்ந்த காலத்தில் ஊடுருவிய நாடோடி கும்பல்தான் இந்த மண்ணின் மைந்தர்களை, உழைக்கும் மக்களை, வெகு மக்களை இழிவுபடுத்தி பேசி வருகிறது. ஆரியர்கள் இங்கு வந்தபொழுது மிகவும் நாகரிகமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். வேளாண்மைத் தொழிலை சிறப்பாகச் செய்து வந்தவர்கள். சிந்து சமவெளி அகழ்வாய்வில் கிடைக்கப் பெற்ற அரிசி, கோதுமை எச்சங்கள், அந்தப் பயிர்களின் பயன்பாட்டை நன்கு அறிந்திருந்த நிலையைக் காட்டுகிறது. ஆனால், நாடோடிகளாக வந்த ஆரியர்கள் தங்களுக்கு தெரியாத வேளாண்மையை இழி தொழில் என்றும், அந்தத் தொழிலைச் செய்பவர் களை இழிவானவர்கள் எனவும் கருதும் நிலைகளை உருவாக்கி விட்டனர். உடல் உழைப்பு வீணானது என தங்களுக்குத் தெரியாத, தாங்கள் செய்யாத தொழிலை இழிவாகக் கருதினர். ஆடு மாடுகளுடன் புலம் பெயர்ந்த மக்களாகிய ஆரியர்கள், நிலையான வாழ்வினை - நாகரிகமான வாழ்வினை மேற்கொண்ட இந்த மண்ணில் வாழ்ந்தவர்களை இழிவான குறிப்புகளுடன் தங்களது வேதங்களில் குறிப்பிட்டுவிட்டனர். வேதமே உயர் வானது - தேவர்களால், வானுலகத்தில் உள்ளவர்களால் வழங்கப்பட்டது வேதம் - என்பதை நம்ப வைத்து விட்டனர்.
இங்கு வாழ்ந்த மக்களை தஸ்யூக்கள் என பாகுபடுத்தி, வேறுபடுத்தி வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தொடக்க நிலையிலிருந்து தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி உயர்வானதாகக் காட்டிக் கொள்ளும் போக்கு ஆரியர்களிடம் நிலவியது. பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கைக் கூறுகளை தங்களது மந்திரத்தால் தெய்வங்களாக்கிட முடியும் எனக் கூறி மக்களை நம்ப வைத்தனர். மன்னர் களுக்கு ஆலோசகர்களாக இருந்து, தங்களது ஆதிக் கத்தை நிலைநாட்டிக் கொண்டவர்கள் ஆரியர்கள். வைதிகம் (வேதத்தின் சொல் திரிபு) வணிகத்தை இழி வாகக் கருதியது. கடல் கடந்து செல்வதை வைதிகத்திற்குப் புறம்பானது என கூறியது. வேளாண்மை என்பது உயர்குடியினர் செய்யக் கூடாது என வலியுறுத்தியது. இதன் அடிப்படை, திராவிடர் செய்யும் இவை அனைத் தும் தாழ்வானவை. அவர்களிடமிருந்து தாங்கள் வேறு பட்டவர்கள், உயர்வானவர்கள் என அரசியல் ஆதிக்க சக்திகளை - மன்னர்களை அண்டி மன்னர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிக்கொண்டு தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்திக் கொண்டார்கள் ஆரியர்கள்.
நூறாண்டு பல கடந்தாலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள, தங்களது உயர்வுத் தன்மையைக் காட்ட, தங்களது பண்பாட்டு அடையாளங்களை காத்து வரும் நிலை ஆரியப் பண்பாட்டினை போற்றி வரும் பிராமணர்களிடம் நிலவி வருகிறது. அழிக்க முடியாத சில பண்பாட்டை வேறு வழியில்லாம்ல் அரவணைத்து அவைகளை தங்களது பண்பாடு என்று சொல்லி தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர். ஆண்டாண்டு காலம் நடைபெற்று வரும் இந்த பண்பாட்டு தக்க வைப்பின் மூலம் தங்களது ஆரியத்தை நிலைநாட்டி விட்டு, ‘ஆரியமாவது? திராவிடமாவது?’ என போலி சமத்துவம் பேசி வரும் நிலையும் இருக்கிறது.
- இவ்வாறு பேராசிரியர் அ.கருணானந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழ்ப் பண்பாட்டின் மரபுகள்
புதுக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஏ.ரஷீத்கான், 'தமிழ்ப் பண்பாட்டு மரபுகள்' எனும் தலைப்பில் குறிப்பிட்டதில் சில பகுதி:
திராவிடம் என்பது இனம், மொழி குடும்பம், நிலம் - இவை எல்லாவற்றையும் குறிக்க திராவிடம் பயன் பட்டது. இ.பி. டைலர் என்ற சிந்தனையாளர் குறிப்பிடு கையில் பண்பாடு என்பது வாழும் வழிமுறை என்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. திராவிடம் "இனம்" ஆகும் (மக்கள் தமிழ்மொழி பேசுபவர்).
திராவிடர் (தமிழர்) பண்பாடு வேறு ஆரியர் பண்பாடு என்பது வேறு. விவசாயம், திருமண முறை, உறவுத் திருமணங்கள் இன்றி இறந்த உடல் புதைப்பு, பெண்ணுக்கு பரிசு, மஞ்சள் நீர் தெளித்தல், நீர் ஆதாரம் திராவிட பண்பாடு, சூரிய பண்பாடு இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டது. இறந்த உடல் எரிப்பு அக்னி (தீ), ரக்ஷாபந்தன், வரதட்சணை கொடுப்பது, கட்டாயம், பார்ப்பனர்கள் மொட்டை போட்டுக் கொள்வதில்லை, கடவுளின் பெய ரால் அலகு குத்திக் கொள்வதில்லை, தீமிதிப்பதில்லை, சொந்த காசில் கடவுளுக்கு வேண்டிய படைப்புகளை செய்வதில்லை. திராவிட பாரம்பரியம் என்பது அனைத் திற்கும் அடித்தளம் உடையது.
ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் தாய் வழிப் பண்பாட்டை உருவாக்கியது. "வேத பண்பாடு என்பது திராவிட பண்பாடே" இவை இதிகாசங்களில் பிரதிபலிக்கின்றது என்று தத்துவமேதை குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
பெரியார் கூறுகையில், “கடவுளை மற மனிதனை நினை என்றார். அண்ணா, தமிழக கோயில்கள் பார்ப் பனக் கூடாரமாக மாறியதைத்தான் ‘ஆரிய மாயையில்’ தமிழ்நாட்டில் ஆரியம் புகுந்த வரலாறு பற்றி பதிவு செய்துள்ளார். மொழி ஆதிக்கத்தில் கூட சமஸ்கிருதத்தில், இந்தி திணிப்பிலும் தொடர்ந்து ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டு இருக்கும் நிலை உள்ளது.
- இவ்வாறு முனைவர் ஏ.ரஷீத்கான் தமதுரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் இணை செயலாளருமான முனைவர் ஆர்.சரவணன் நன்றி கூறினார்.
-தொகுப்பு: வீ.குமரேசன்
No comments:
Post a Comment