விருதுக்கு விருது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

விருதுக்கு விருது!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குக் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் காயிதே மில்லத் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 'தி வயர்' ஆசிரியர் சித்தார்த் வரதராசன் அவர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. ஆம், தந்தை பெரியார் கொள்கை விருதுக்கு விருது அளிக்கப்பட்டது.

தமிழர் தலைவரைப் பொறுத்தவரை விருதுகள் ஒன்றும் புதிதல்ல - தந்தை பெரியார் அளித்த பாராட்டுகள், நம்பிக்கையை விடவா பெரிய விருது?

ஆனாலும் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு - இயக்கத்தை நடத்திய விதமும், தந்தை பெரியார் நிறுவிய அறக்கட்டளையை நீதிமன்றம் வரை சென்று மீட்ட வகையிலும், அதனை மேலும் மேலும் செழுமைப்படுத்திய வகையிலும், இயக்கத்தையும், கல்வி நிறுவனங்களையும் வளர்த்த பாங்கிலும் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய அரும் பெரும் பணிகளுக்கான அங்கீகாரங்கள்தான் இந்த விருதுகள் என்பது அடி கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அற்புதமாகும்.

இந்தியாவிற்குள் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும்கூட விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டதுண்டு.

(1) 1993 - நாகை பெண்கள் மாநாட்டில் "இனமானப் பேரொளி" 

(2) 1996 - தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட "தந்தை பெரியார்" விருது.

(3) 2000 - புதுடில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் வழங்கிய ("பாரத் ஜோதி") விருது.

(4) 2003 - ஆக்ஸ்போர்டு தமிழ்ச் சங்கம் வழங்கிய "ஆக்ஸ் போர்டு தமிழ் விருது"

(5) 2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் வழங்கிய "கவுரவ டாக்டர்" பட்டம்.

(6) 2003 - மியான்மர் நாட்டில் வழங்கப்பட்ட "பேரறிவாளர்" விருது.

(7) 2009 - மலேசிய திராவிடர் கழகம் வழங்கிய "கருத்துக் கனல்" விருது.

(8) 2009 - முரசொலி அறக்கட்டளை வழங்கிய "கலைஞர் விருது"

(9) 2010 - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய "பெரியார் ஒளி" விருது.

(10) 2010 - கோவை கே.ஜி.  அறக்கட்டளையால் வழங்கப் பட்ட "ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர்" விருது

(11) 2011 - ஆந்திர மாநிலத்தின் பி.எஸ்.ஏ. சாமி அறக்கட்டளை அளித்த "ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சாமி" விருது.

(12) 2012 - சென்னை லயோலா கல்லூரியால் வழங்கப்பட்ட 'வாழ்நாள் சாதனையாளர்' விருது.

(13) 2019 - அமெரிக்க மனிதநேய சங்கம் வழங்கிச் சிறப்பித்த "மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்" விருது.

(14) 2019 தி.மு.க. வழங்கிய "தந்தை பெரியார்" விருது. 

(15) 2020- அமெரிக்காவில் இயங்கும் மகாராட்டிர ஃபவுண்டேஷன் சார்பில் "நரேந்திர தபோல்கர்" விருது.

(16) 2022 - உலக திராவிடர் மகளிர் மாநாட்டில்  (காணொலி மூலம்) "பகுத்தறிவுப் போராளி" விருது

(17) 2022 கனடா டொராண்டாவில் வழங்கப்பட்ட "வாழ்நாள் சாதனையாளர்" விருது.

(18) 2023 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் "சமூகநீதிப் போராளி" விருது.

(19) நேற்று (31.1.2023) காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் "அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான" விருது

(Quaide Milleth Educational & Social Trust  சார்பில் Probity in Political and  Public life) 

Probity-  என்ற சொல்லுக்கு  உண்மை, நேர்மை, நாணயம் என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில - தமிழ் அகராதி கூறுகிறது.

தந்தை பெரியார் அவர்கள் நாணயத்தை, நேர்மையை, ஒழுக்கத்தைப் பெரிதும் விரும்புவார் - கொள்கையில் ஓட்டை விழுந்தால் கூட சரி செய்து விடலாம். ஆனால் ஒழுக்கத்தில், நாணயத்தில் ஓட்டை விழுந்தால் சரி செய்ய முடியாது என்பார். 

தலைவர் ஆசிரியரைப் பொறுத்தவரை Probity என்று விருதில் வடிக்கப்பட்ட சொல்லுக்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு ஒளி வீசக் கூடிய மாமனிதர் ஆவார்.

மாலைக்காக அவருக்கு அளிக்கப்படும் ரூபாயைக்கூட கழக நிதியில் சேர்க்கக் கூடியவர்.

எடைக்கு எடை ரூபாய் நாணயம், எடைக்கு எடை வெள்ளி, எடைக்கு எடை தங்கம் என்று அவருக்கு வழங்கப்பட்டதெல்லாம் இயக்கத்திற்கும், பெரியார் அறக்கட்டளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அக்கணமே அளித்த "அக்மார்க்" நாணயத்துக்குச் சொந்தக்காரர்.

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ. இரண்டரை இலட்சத்தையும் "பெரியார் உலகத்திற்கு" அளிப்பதாக விழா மேடையிலேயே அறிவித்தார்.

என்னே, அவருடைய இயக்க - கொள்கை உள்ளம்!

தான் மட்டுமல்ல; தன்னோடு இருக்கக் கூடியவர்களும், இயக்கத்தவரும் நாணயமாக, நேர்மையாக நடக்க வேண்டும் என்பார். நடந்துகொள்ள வேண்டும் என்று  எதிர்பார்க்கக் கூடியவர்.

இத்தகு பண்பாடு நிறைந்த கொள்கலனாக தலைவர் ஆசிரியர் அவர்கள் விளங்குவதால்தான் இயக்கமும் வளர்கிறது - கல்வி நிறுவனங்களும், அறக்கட்டளை நடத்தும் அமைப்புகளும் அன்றலர்ந்த மலர்கள்போல் பூத்துக் குலுங்குகின்றன.

ஆசிரியர் பெற்ற விருது கட்சிக்கு அப்பாற்பட்டவர்களின் உள்ளத்திலும், இயக்கத்தவர் இதயத்திலும் இன்ப அலைகளை எழுப்புகிறது என்பதில் அய்யமில்லை. வாழ்க தமிழர் தலைவர்! வெல்க தந்தை பெரியார் கொள்கை!!

No comments:

Post a Comment