பணம் கோயில்களிலே நகையாய், வாகனமாய் நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்குவாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம். இது எதை உணர்த்துகிறது. இந்த நாடு ஏழை என்பதையா? எப்படி ஏழை என்று கூற முடியும் இந்நாட்டை? தில்லைக் கூத்தரின் தங்கஓடு வேய்ந்த சன்னிதானத்தையும், வரதரின் வயிர நாமத்தையும் காஞ்சிகாமாட்சியின் வைடூரியக் கற்களையும், அரங்கநாதரின் அற்புத இரத்தினங்களையும் வேங்கடத்தானின் பத்து இலட்சம் பெறும் வைரமுடியையும் காணும்போதும், கேட்கும் போதும் - அதிலும் இந்தத் திரவியம் எவ்வித நலனுமின்றி மூலையில் முடங்கிக் கிடக்கிறது. ஒரு சில சாமி (ஆசாமி)கள் உல்லாச வாழ்வைக் கருதி என்பதை அறிந்த பிறகு இந்த நாட்டை ஏழைநாடென்று எவராவது கூற முடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக்கிறது. யாரிடம் பொருள் உளது? மதத்தின் பெயரால் கோயி லாகவும், வாகனமாகவும், ஆண்டவர் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது. அந்த பொருள் பிறவி முத லாளிகளைக் (ஆரியரை) கொழுக்க வைக்கப் பயன் படுகிறது. பரமன் பேரால் உள்ள பணம் அதிர்வெடிக்கும், அலங்கார ஆர்ப்பாட்டப் பூசைக்கும், தேருக்கும் திருவிழாவிற்கும் உபயோகமாகிறது. அநாவசியமாக, அர்த்தமற்று இது நீதியா? முறையா? என்று கண்டிக்கிறோம் இதில் தவறென்ன?
செல்வமிக்க இந்த நாட்டில் வறுமையால் வதங்கி வெளிநாடு செல்லும் தோழர்கள் இந்த நாட்டை வாழ்த்தியிருப்பர் என்றா நினைக்கிறீர்கள்? துக்கம் நெஞ்சையடைக்கக் கண்ணீரைக் கடல் நீரிலே கலக்கி, அந்தக் கதியற்றவர்கள் இந்நாட்டைப் பார்த்து, அளவற்ற செல்வம் உன்னிடம் இருந்தென்ன? நாங்கள் அனாதை கள்தானே! வற்றாத நதிகள் இங்கே பாய்ந்தென்ன? எங்கள் வாழ்க்கைப் பாலைவனம்தானே! நஞ்சையும் புஞ்சையும் இருந்தென்ன? நாங்கள் பஞ்சைகள்தானே! பணமிருந்தென்ன? பராரிகள்தானே நாங்கள்! ஒரு கவளம் சோறில்லாது ஓடுகிறோம் நாட்டை விட்டு, தங்க ஓடு வேய்ந்த கோயில் உள்ள தில்லையான் (சிதம்பரம் நடராசர்) வாழும் இந்த நாட்டில் வதியும் நாங்கள்! செல்வமுண்டு இந்த நாட்டில், ஈசனைப் போற்றியேத்தும் மக்களிடம், நாங்கள் வாழ வழி செய்யாமல் எங்களை வெளிநாட்டிற்குப் போகச் செய்யும் திருநாடே! அரசி யலை ஆங்கிலேயனிடமும் ஆத்மார்த்தத்தை ஆரிய னிடமும், வாணிபத்தை வடநாட்டானிடமும் ஒப் படைத்து விட்டுக் கிடக்கும் ஏ அடிமை நாடே! சோறில்லை எங்களுக்கு, சொர்ணம் விளையும் இந்த நாட்டில், எங்களை இக்கதியில் விடும் நீ இருந்தென்ன? போயென்ன? அக்ரமத்துக்கு இடமளித்து அனாதை களைத் துரத்துகிறாய் அறிவிழந்து. ஏ அறிவிழந்த நாடே! நீ அழிந்து படு! அழிந்து படு என்று தான் சபித்திருப்பர்; தம் நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருப்பர்.
ஆண்டவனுக்குப் பேசும் சக்தியிருந்தால்!
ஆண்டவனுக்குப் பேசும் சக்தியிருந்து அவன் உங்களிடம் பேசுவதானால், அது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஆண்டவன் நயவஞ்சகம் அற்றவ ரானால், அறிவுடைய, அன்புடைய, அறம் மிகுந்த தந்தையாரானால் அவர் கேட்பார் உங்களை; அப்பா நான் இந்த அகில உலகை, அண்ட சராசரங்களை படைத்தேன், அதிலே ஜீவராசிகளைப் படைத்தேன், நெல்லைப் படைத்தேன், நீரைப் படைத்தேன், கடலைப் படைத்தேனே, அதிலே முத்தைப் படைத்தேன், முத்தெடுக்கும் முறையைப் படைத்தேன் உன்னிடம், திமிங்கிலத்தைப் படைத்தேன்; அதை விலக்க, எதையும் எண்ணிச் செய்ய, பகுத்துச் செய்ய, பகுத்தறிவைப் படைத்தேன் உனக்கு. அதன் மூலம் பாராள்வாய், பலரும் வாழ வகைசெய்வாய் என நினைத்தேன். அதைவிட்டு நீ எனக்கு அரைவீசை வெண்பொங்கல் தந்து வரம் வேண்டுகிறாயே! வகையற்ற மூடனே! அறிவைக் கொண்டு ஆவன செய்! என்று தான் கேட்பார். ஆனால், ஆண்டவன் அவ்விதம் கேட்ப தில்லை உங்களை. ஏன்? அவர் எப்போதும் பேசினதில்லை. எப்பொழுதும் வெளிப்படையாக, விவேகத்துடன் பேசிப் பழக்கமுமில்லை.
குடந்தையில் யார் பெரிய முதலாளி?
குடந்தையில் எப்படிப் பார்த்தாலும் கும்பேசுவர நாதரைவிடப் பெரிய முதலாளி எவரும் இல்லை. உண்மைதான், மனித முதலாளியைவிட அவர் மிக மிகப் பெரிய முதலாளி, மனிதனுக்கு இல்லாத சவுகரியங்கள் அவருக்குண்டு. அவருடைய ஆட்சியே இப்பூமண்டலம் எங்கும் பரவும், குடி படைகள் குவலயத்தோர் எல்லாரும்; அவரது இருப்பிடமோ கோயில், கோட்டை போன்றது, கொத்தளங்களோடு கூடியது, பணம் பல கோடி நிலம் ஏராளம், பண்ணையாள்கள் பலப் பலர், வாகனங்கள் வகை வகையானவை. வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆனவை, ஊர் சுற்றிவர உன்னதத்தேர், உல்லாசத் துக்குப் பல்லக்குச் சவாரி, ஆம் இத்தனைக்கும் அவர் தம் கைவிட்டுச் சல்லிக் காசும் செலவிடார், மாறாக அவரிடம் பணம் மலைபோல் மேலும் மேலும் குவியும், தம்முடைய பணம் போகுமே, குறையுமே பெருக வேண்டுமே என்ற கவலை அவருக்கில்லை, அவருக்கு வழக்கில்லை, தொல்லை இல்லை, கிண்டி குதிரைப் பந்தயமும் இல்லை, திருமணமும் வருடா வருடம் தவறாமல் பக்த கோடிகள் செய்து வைக்கக் காத்திருக்கின்றனர். இத்தகைய முதலாளியைப் பொது உடைமைவாதிகள் கண்டிப்பதில்லை, ஏன்? அவர்கள் பொது உடைமைப் பொது உடைமை என்று கூறித் தங்கட்குப் புது உடைமை தேடுகின்றனர் போலும். இதுபோது ஒன்று என் நினைவிற்கு வருகிறது. பொது உடைமைத் தோழர்கள் அண்மையில் இங்கு பஸ் தொழிலாளர் குறைகளைத் தீர்த்துக் கட்ட ஒரு மாநாடு நடத்தினாராம், நல்ல வேலை, நான் பாராட்டுகிறேன் அதை. அதோடு ஒரு செய்தி, இதே குடந்தையில் அடிக்கடி 20 டன் நிறையுள்ள இரதத்தில் கால் டன் அரை டன் நிறையுள்ள சாமிகளை வைத்து, அத்துடன் கோயில் பட்டாச்சாரியையும் இன்னும் அவர் அத்திம்பேர், அம்மாமி, குழந்தை குட்டிகளையும், அக்கப்போர் ஆசாமிகளையும் அமர வைத்து நம் இனத் தோழர்கள் வீதிவீதியாய், நெஞ்சு உடைய, மார்பு விரிய இழுத்துச் செல்கின்றனரே இது படவில்லையா அவர்கள் கண்களில்? என்று தீரும் இவர்கள் குடைமடமை? அதற்கு மாற்று மருந்து பொது உடைமைவாதிகள் தேடார் ஏன்? அவர்களுக்குச் சங்கம் அமைத்துச் சந்தா செலுத்தத் தெரியாது என்பதாலா?
சமுதாயத்தைச் சீர்திருத்த, செப்பனிட, உண்மை யிலேயே பொது உடைமையாளருக்கு உறுதி இருக்குமானால் அவர்கள் செய்ய வேண்டிய வேலையே வேறு, முதலில் பிறவி முதலாளியை ஒழிக்க வேண்டும்.
சொற்பொழிவு, குடந்தை - (1948 )
சுயமரியாதைத் திருமணம்
அண்மையில் எங்கோ ஓர் இடத்தில் பாரத பிரசங்கம் நடந்ததாம். அதன் கடைசி நாளன்று பீமன் வேடம் போடுபவன் துரியோதனனைக் கொல்வதற்காகப் படுகளம் நடந்தது. அன்று ஆறு அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் மண்ணினால் செய்யப்பட்டி ருந்தது. இதனை பீமவேடதாரி வெட்டி வீழ்த்தினான். இதனைச் சுதேசமித்திரன் பத்திரிகை படம் பிடித்து பெரிதாகப் போட்டுக் காட்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட கேவலமான பழக்கங்களையும், அர்த்தமற்ற திருவிழாக்களையும், பொருத்தமற்ற சடங் குகளையும் விட்டொழித்தால்தான் நாம் உண்மை யிலேயே முன்னேற முடியும். ஆகவேதான் சீர்திருத்தத் திருமணங்கள் நடப்பதன் மூலம் அறிவுப்பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம்.
சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத் திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக்கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்து கொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துகிறேன்.
இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக் கூடாதா? என்று சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இப்படிப்பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல் களைப் பாடத்தான் மாட்டோம், பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்.
அந்தக் காலத்தில் ஊசிமுனையில் நின்றும், ஒற்றைக் காலில் நின்றும் பற்பலவிதமாக அகோரதவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும்; சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.
மக்கள் வாழ வேண்டும் உலகம் உருப்பட வேண்டும். வறுமை ஒழிய வேண்டும். உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது, எந்தப் பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொதுநன்மைக்காகக் கடவுளிடம் வரம்கேட்ட பக்தர் களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.
எல்லோரும் தங்கள் சுயநலத்தைத்தானே பெரிய தாகக் கருதியிருக்கிறார்கள். எனக்கு இந்திர பதவியைக் கொடு என்றொரு முனிவர் கேட்பார். எனக்குக் காமதேனு வேண்டும், கற்பக விருட்சம் தேவை என்று மற்றொரு தவசி கேட்டிருக்கிறார். மேனகை, இரம்பை, திலோர்த்தமை, ஊர்வசி போன்ற தேவலோகத்து நடனமாதர்களின் சுகத்தை அனுபவிக்க சொர்க்க வாசம் தேவை என்று ஒரு நாயன்மார் கேட்பார்.
வைகுந்தபதவியும் சிவலோகவாசத்தையும் தங்க-ளுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும், அவர்கள் பாடிய பாடல்களையும் இந்தத் திருமணத்தில் அழைப் பதும், பாடுவதும் பொருத்தமற்றதுதானே. இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்குத்தான் எதையாவது கேட்பார்களே தவிர நமக்காக ஒன்றும் பேச மாட்டார்கள், கேட்க மாட்டார்களே! ஆகவேதான் இங்கே எந்தப் பக்தரையும் சரி, அய்யரையும் சரி நாங்கள் அழைக்க வில்லை; அழைப்பதும் இல்லை. அதைப்போலவே நமக்காக எழுதப்படாத பாடப்படாத எந்தப் பாடலையும் பாடுவதில்லை; பாடவும் விடுவதில்லை.
நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படும், அக்கறைக் காட்டும் நண்பர்களைத்தான் நாம் அழைக்கிறோம். அப்படிப்பட்டவர்களால் தானே நாம் முன்னேற வழிவகைகளைக் காட்ட முடியும், கூற முடியும்! ஆகவே தேவாரம் பாடவில்லை, திருவாசகம் படிக்கவில்லை, அய்யரைக் கூப்பிட்டு மந்திரம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை என்பதை மறு முறையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
கடைசியாக சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி காட்டவில்லை. அக்கினி வளர்க்க வில்லை. ஆண்டவனைப் போற்றவில்லை என்று குறை படுவதற்கும் அர்த்தம் இல்லையென்று சொல்லி விடுகிறேன்.
திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக? திருமணத்திற்கு அக்கினிதேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத்தானே? அந்த அக்கினி பகவான் யோக்கியதை என்ன? அருந்ததி என்று ஒரு சினிமாக்கூட வந்ததே, அதைப் பார்த்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், நான் கூறப்போவது.
ஒரு காலத்தில் சப்தரிசிகள் ஒரு யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்பாகம் வாங்கிச் சென்ற அக்னிபகவான் அந்த ஏழு இரிஷிபத்தினிகளின் மீதும் காமமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடமே கூறினார். இந்தக் காலத்தில் எப்படிப் பட்ட கேடுகெட்ட மனிதனும்கூட கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின் மீது ஆசை வைத்திருப்பதாகக் கூற மாட்டான்.
ஆனால், ஆண்டவனாக அக்னி தன் மனைவியிடம் தான் இரிஷிபத்தினியிடம் காமுற்று இருப்பதைக் கூறிய உடன் தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படி கேட்டானாம். அவன் மனைவியும் சப்த இரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியரைப் போலவே உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தடுத்தாளாம். ஆனால், ஏழாவது முனிவரின் மனைவி யான அருந்ததியைப்போல மட்டும் உருவம் எடுக்க முடியவில்லை என்றும், அதற்குக் காரணம் அருந்ததி ஆதிதிராவிடப்பெண்மணி என்றும் புராணம் கூறுகிறது.
பிறர் மனைவியை காமுறும் தீயகுணம் படைத்த அக்னியையா நம்முடைய திருமணக் காலங்களிலே சாட்சிக்கு அழைப்பது? கூடாது கூடவே கூடாது.
சுயமரியாதைத் திருமணத்தில் சொற்பொழிவு
No comments:
Post a Comment