அசாம் மாநிலத்தில் பெருகி வரும் குழந்தைத் திருமணங்கள் - ஒரே நாளில் 1,800 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

அசாம் மாநிலத்தில் பெருகி வரும் குழந்தைத் திருமணங்கள் - ஒரே நாளில் 1,800 பேர் கைது

கவுகாத்தி, பிப்.5- அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரே நாளில் 1,800 பேர் அங்கு கைது செய்யப் பட்டுள்ளனர். 

நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம். அப்படி செய்வது தண்ட னைக்குரிய குற்றம் ஆகும். அசாம் மாநி லத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள் வது என்று கடந்த 23ஆம் தேதி முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில அமைச்ச ரவை முடிவு எடுத்தது. இதுபற்றி முதல மைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா சில கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:-

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வோர் மீது போக்சோ சட்டம் பாயும், 14-18 வயது பிரிவு சிறுமி களை திருமணம் செய்கிறவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டம், 2016 பாயும். இந்த திருமணங்கள் செய்வோர் கைது செய்யப்படுவார்கள், அவர்களது திருமணங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்படும்.

14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்தால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த முடியாது என்ற நிலையில், சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இப்படிப்பட்ட திருமணங்களை நடத்தி வைக்கிற மத குருமார்கள், குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் குழந்தை திருமண விவகாரத்தில் அசாம் காவல்துறையினர் 3.2.2023 அன்று ஒரே நாளில் 1,800-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை முடக்கி விடப்பட்டு, கைது செய்யும் படலம் அதிகாலை முதல் தொடங்கி விட்டது. இந்த நடவடிக்கை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடரும்" என குறிப்பிட்டார். இந்த மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 4 வழக்குகள் 15 நாட்க ளுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தூப்ரியில் 370 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு, 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையொட்டி முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், " மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் காவல்துறை மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 4 வழக்குகளைப் (குழந்தை திருமணம்) பதிவு செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் மீதான நடவடிக்கை தொடரும். அனை வரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறி உள்ளார்.

No comments:

Post a Comment