சிறுபான்மையின பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் 10ஆம் வகுப்பு மொழி பாடத் தேர்வினை எழுதலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

சிறுபான்மையின பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் 10ஆம் வகுப்பு மொழி பாடத் தேர்வினை எழுதலாம்

சென்னை, பிப். 16- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006இன் படி, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில்  சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அதே சமயம், வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள (Migration Transfer  மூலம்) மாணவர்கள் தமிழ் மொழியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடம் எழுவதுதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுவழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  2020-2022 வரையிலான கல்வி ஆண்டு வரை மட்டும் சிறுபான்மை மொழியைத் தாய் மொழியாக கொண்ட மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில்,  2023ஆம் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்கக் கோரி மாணவர் தரப்பில் இருந்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதி மன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஓ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழை கட்டாய பாடமாக்குவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்களித்து உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து, மொழிச் சிறுபான்மை  மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து தவிர்ப்பு கோரலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment