இதனால் சகலருக்கும் அறிவிப்பது...
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்ன வென்றால், ஏகாதசி விரதம் (பட்டினி) இருந்தவர் களுக்கு இன்று சனி விடியற்காலை மகாவிஷ்ணு பரமபத வாசலைத் திறந்து வைத்து (வாட்ச்மேன்) காத்துக்கொண்டிருந்தார்.
இரவு முழுவதும் கண் விழித்து (பெண்கள் பாராயணம் செய்வார்கள் - ஆண்கள் சீட்டு ஆடிக் கொண்டிருப்பார்கள் - இரவு கழியவேண்டும் அல்லவா!).
இப்படியெல்லாம் அட்சரம் பிறழாமல் நடந்து கொண்டால் அவர்களுக்குச் செல்வம் கொழிக்குமாம்.
ரொம்ப சரி; நாடு பொருளாதார வளர்ச்சியில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.
77 சதவிகித மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானக் காரர்கள் என்று சென்குப்தா அறிக்கை கூறுகிறது.
சமையல் எரிவாயு விலை குடும்பத் தலைவிகளின் மண்டையைக் குடைந்துகொண்டு இருக்கிறது.
இந்தியாவில் 53 சதவிகித மக்களுக்கு (சுமார் 69 கோடி) கழிப்பறை வசதியில்லை.
அய்.நா.மன்றம் யுனிசெப் ஆய்வறிக்கையின்படி ஊட்டச்சத்துக் குறைவால் உருக்குலைந்து போயி ருக்கும் குழந்தைகள் 48 விழுக்காடு (உலகளவில்) என்றால், இந்தியாவில் மட்டும் 30 விழுக்காடு.
15 வயது முதல் 49 வயதுவரை உள்ள பெண்களில் 56.2 விழுக்காடு பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
வெளிநாட்டு செலாவணி கையிருப்பு கவலை யளிப்பதாக இருக்கிறது.
வாராக்கடன் இன்னொரு பக்கம் எகிறி நிற்கிறது. விவசாயம் பாழ்பட்டு அம்மக்கள் தற்கொலையின் விளிம்பில் அல்லாடிக் கொண்டு கிடக்கிறார்கள். கடனைக் கட்ட முடியாமல் அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பயிர்களை மஞ்சள் நோய் வாட்டுகிறது. கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் பாயவில்லை.
இவைகளுக்கெல்லாம் ஒரே பரிகாரம் - ஏகாதசி யன்று முழு நாள் பட்டினி கிடந்து விடியற்காலை வைணவக் கோவிலில் திறந்து வைக்கப்பட்டு இருக்கும் பரமபத வாசல் (கேட்) வழியாகச் சென்றால், பலன் கிடைக்கும் என்று பாகவதர்களும், பார்ப்பன சிரோன் மணிகளும், ஜீயர்களும், ஊடகங்களும் ஒரே குரலில் பேசும்போது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி எதற்காக விசனப்படவேண்டும்?
. . . . . . . .
எவ்வளவுப் பெரிய பலூனையும் ஏகாதசி விரதம் என்ற குண்டூசியால் உடைத்துவிடலாம் என்கிறபோது ஏன் தேவையற்ற கிலேசம்?
கடைசியாக ஒரே ஒரு சந்தேகம்.
திருப்பதி ஏழுமலையான், சிறீமான் மகாவிஷ்ணு வின் இன்னொரு வடிவம்தானே! அங்கும் சொர்க்க வாசல் திறந்திருக்கிறது அல்லவா!
அவரே தனது கல்யாணத்துக்குக் குபேரனிடம் வாங்கிய கடனை இன்றுவரை அடைக்க முடியாததால், இன்னும் உண்டியல் வைத்து பக்தர்களிடம் வசூல் செய்துகொண்டிருக்கிறார் என்று திருப்பதி ஸ்தல புராணமே கூறுகிறது.
அவரே கடனாளி - கடனைத் தீர்க்க முடியாத நிலையில் (வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!) இருக்கும்பொழுது, அவருக்காக விரதம் இருந்து, அவர் கோவிலில் உள்ள வாசல் வழியாக நுழைந்தால், எப்படி கடன் தீரும்?
எங்கிருந்து செல்வம் கொழிக்கும்?
எதற்கும் ஜீயரைக் கேட்டுச் சொல்லுங்கள்!
கருஞ்சட்டை
No comments:
Post a Comment