கட்டாய மத மாற்ற வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

கட்டாய மத மாற்ற வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

 புதுடில்லி, ஜன. 11- மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வில் 9.1.2023 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன் மற்றும் வழக்குரைஞர் குமணன் ஆகியோர் வாதத்தில்,‘‘இந்த விவகாரத்தை பொறுத்த மட்டில் மனுதாரர் தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

அதனை ஏற்க முடியாது. மேலும் மனுதாரர் அஸ்வினி உபாத்யா பாஜ கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளராக இருப்பதால் இந்த வழக்கு என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். மேலும் இந்த வழக்கின் மனுதாரர் மனுவின் சாராம்சத்தில் தமிழ்நாட் டைத்தான் அதிகப்படியாக சுட்டிக்காடி உள்ளார்.  தமிழ் நாட்டில் கடந்த 2002ஆம் ஆண்டு மதமாற்றங்களை தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அது 2006ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரர் அஸ்வினி உபாத்யா கூறியுள்ள அனைத்தும் அப் பட்டமான பொய்யாகும்.

கட்டாய மத மாற்றம் தொடர்பாக முடிவெடுக்க  மாநில அரசுக்குத் தான் முழு அதிகாரம் உள்ளது. ஒன்றிய அரசு கூட அதில் எந்த தலையீடும் செய்ய முடியாது. மேலும் மாநிலங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். 

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள்,‘‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞராக வெங்கட்ரமணி நியமிக்கப் படுகிறார். அதேநேரத்தில் இந்த மனுவை கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான வழக்கு என்பதற்கு பதிலாக ‘‘மத மாற்றம் தொடர்பானது” என மாற்றப்படுகிறது. மேலும் சர்ச்சையான மனுவை தாக்கல் செய்த பிரதான மனுதாரரான பாஜகவை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா இந்த வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப் படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசார ணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment