சட்டமரபை மதிக்காத ஆளுநரும், ஊடக அறத்தை மதிக்காத தமிழ் நாளேடுகளும்
தமிழ்நாட்டையும் அதன் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட தமிழ்நாட்டு அரசையும் மதிக்காதது மட்டுமல்ல இந்திய அரசமைப்பு சட்ட நெறி முறைகளையும் மீறி உள்ளார் தமிழ்நாடு ஆளுநராக உள்ள கே.என். ரவி என்பவர்.
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரின் முதல்நாளில், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப் பெற்று ஆளுநரால் ஒப்புதலளிக்கப்பட்ட உரையை, அரச மைப்பு சட்டம் பிரிவு 176 இன்படி சட்டப் பேரவையில் ஆளுநர் வாசிப்பது சட்ட மரபு. ஆனால் 9.1.2023 தேதிய சட்டப் பேரவை கூட்டத்தில் இந்த மரபை அப்பட்ட மாக மீறியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் கே.என்.ரவி..
ஒப்புதலளிக்கப்பட்ட உரையில் இருந்த அம்பேத்கர், காமராஜர், பெரியார், திராவிட மாடல் அரசு போன்ற முக்கியமான வாசகங்களை, அரசியல் உள்நோக்கத்தோடு கயமைத்தனமாக ஆளுநர் ரவி வாசிக்காமல், அலட்சியப்படுத்திப் புறக்கணித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அவையின் நடவடிக்கையின் முக்கிய பகுதியான நாட்டுப் பண் இசைக்கப்பட்ட பின்னர்தான் ஆளுநர் அவையை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் நாட்டுப் பண்ணையும் அவமதிக்கும் வகையில் இடையிலேயே மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்டப் பேரவையை விட்டு வெளியேறியுள் ளார். ஆளுநரின் இந்த அராஜகப் போக்கு, தமிழ்நாடு மக்களை ஒட்டுமொத்தமாக₹ அவமதித்ததற்குச் சமம்.
ஆளுநரது இந்த சட்ட மீறல் குறித்து ஓரிரு கட்சி களைத் தவிர்த்து ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஊடகங்களும் தங்களது விமர்சனங்களை பல வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றன.
ஆங்கில நாளேடுகள் குறிப்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 'தி இந்து', 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'டெக்கான் கிரானிகல்' ஆகிய நாளிதழ்கள் மறுநாளே தங்களது தலையங்கம் வாயிலாக ஆளுநர் ரவியின் போக்கை விமர்சித்து உள்ளன. ஆனால் தமிழ் நாளேடுகளான 'தினமணி', 'இந்து தமிழ்', 'தினமலர்' உள்ளிட்ட நாளிதழ்கள் கபட மவுனம் சாதித்து ஆளுநருக்கு வெண்சாமரம் வீசுகின்றன.
குறிப்பாக, ஆங்கில நாளேடான 'தி இந்து', 11.1.2023 தேதிய தலையங்கத்தில்
” The constitutional convention is that the President or the Governor should not depart from the text as it is nothing but a statement of policy of the elected government…. Mr.Ravi walked out, apparently treating the move to adopt the resolution as an affront. The Governor need not have reacted in such a manner, as there is no reason why a deviation from convention on the Governor’s part should not be met with an immediate response that was also a deviation from convention. Future confrontation can be avoided if the Governor gives up his penchant for making politically loaded remarks and is heedful of the state’s political sensibilities.In the longer term, the role of the Governor in the country’s constitutional scheme needs a thorough overhaul, so that incumbents in RJ Bhavan give up their sense of overlordship and focus on their core constitutional functions such as granting assent to Bills”
என்று குறித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை அப்படியே ஆளுநர் வாசிப்பதுதான் சட்ட மரபு - அதிலிருந்து ஆளுநரோ, குடியரசுத்தலைவரோ வழுவக் கூடாது என்று சுட்டிக் காட்டியுள்ளது தி இந்து ஆங்கில நாளேடு. மேலும் தங்களது அடிப்படைக் கடமையான சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோ தாக்கள் மீது ஒப்புதல் அளித்தல் போன்ற விடயங்களில் மேட்டிமைதாங்கிய எஜமான உணர்வுடன் செயல் படும் போக்குகளால், ஆளுநர் போன்ற சட்ட நிறு வனப் பதவிகள் குறித்து ஒரு முழுமையான மேலாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் 'தி இந்து' கருத்து தெரிவித்துள்ளது.
அதே போன்று ஆங்கில நாளித ழான 'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வும் தமிழ்நாடு ஆளு நரது நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. அதிகாரபூர்வ பெயரான தமிழ்நாடு என்றிருப்பதை, வேண்டுமென்ற தனது பொங்கல் விழா அழைப் பிதழில் தமிழகம் என அவர் விளித்திருப்பது - திடீர் ஞானதோயம் பெற்றுவிட்டது போல செயல்பட் டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசமைப்பு பிரிவு 200 இன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் எந்தக் காலவரையறையுமின்றி ஒப்புதல் தராமல் நிலு வையில் வைத்திருப்பது எந்த வகையிலும் சரியல்ல. இந்திய காவல் மற்றும் உளவுத்துறையில் பணியாற்றி யுள்ள ரவி, தனது கடமையில் நேர்மையாக நடந்து கொள்ள வேணடும் என 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் ஆளுநர் ரவியை அறிவுறுத்தியுள்ளது.
இதே வழியில் மற்றொரு ஆங்கில நாளேடான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தனது தலையங்கத்தில் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில் சில ஆளுநர்கள் சட்ட மரபுகளை பின்பற்றாமல் நடந்து கொள்கின்றனர் என்றும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டிய மசோதாக்கள் மீது நீண்டகாலம் மவுனம் காப்பது என்பது சரியல்ல எனவும் ஆளுநர் நடவடிக் கையை விமர்சித்துள்ளது.
டில்லியிலிருந்து பிரசுரமாகும் ஆங்கில நாளிதழ் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 11.1.2023 அன்று தலையங்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நட வடிக்கையை மிக கடுமையாக விமர்சித்துள்ளது. சட்டபூர்வமான தனது பதவிக்கு களங்கத்தை ஏற் படுத்தியுள்ளது ரவியின் தற்போதைய நடவடிக்கை என சாடி உள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். தொடர்ந்து தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப் பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதலளிக் காமல் நிலுவையில் வைத்திருப்பதும் தனது வரம்பு களை மீறி ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார் எனவும் கண்டித்துள்ளது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'.“Ravi”s conduct hurts his constitutional office” என்று முடிவாக முத்தாய்ப்பாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
'டெக்கான் கிரானிகல்' என்ற ஆங்கில நாளேடும் தமிழ்நாடு ஆளுநரது போக்கை விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளது. பாஜக அல்லாத மாநில அரசுகள் மீது பகைமை கடைப்பிடித்துவரும் ஒன்றிய அரசின் தந்திர உபாயத்தின் விளைவுதான் தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கை என்றும் - அது தான் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்தாக உள்ளது என்றும் - 'டெக்கான் கிரானிகல்' விமர்சித்துள்ளது.
முதன்மையான ஆங்கில நாளேடுகள் தலையங் கங்கள் மூலம் தங்களது சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தி வரும் நிலையில் சற்றும் பொறுப்பற்ற முறையில் தமிழ் நாளேடுகள் சில, தமிழ்நாடு ஆளுநரது சட்ட மரபு மீறல் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் கயமைத்தனமான முறையில் மவுனம் சாதித்து வருகின்றன. விதி விலக்காக தினகரன், விடுதலை, முரசொலி ஆகிய நாளிதழ்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஆளுநரது போக்கை, நடவடிக்கையை விமர்சித்து தலையங்கம் தீட்டியுள்ளன என்பது பாராட்டுதலுக் குரியது.
நேர்கொண்ட பார்வை என பெருமை பீற்றிக் கொள்ளும் கோணல் தினமணியோ, சம்பந்தா சம்பந்த மில்லாத விடயங்களுக்கெல்லாம் தலையங்கம் மூலம் தனது கருத்தை திணிக்கும் தினமணியோ, ஆளுநரது சட்ட மரபு மீறல் குறித்து கருத்து எதுவும் கூறாமல், மவுனம் சாதிப்பது அப்பட்டமாக தமிழ்நாடு ஆளுநருக்கு ஆதரவானதும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிப்பதற்கும் ஒப்பாகும்.
அதேபோல் உண்மை நின்றிட வேண்டும் என கூறிக்கொள்ளும் இந்து தமிழ் நாளேடும் தமிழ்நாடு ஆளுநரது சட்ட மீறல் நடவடிக்கை குறித்து தலையங்கத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தினமணியின் போக்கையே பின்பற்றி, தனது கடமையிலிருந்து வழுவி உள்ளது. இதுவும் ஆளுநர் ரவிக்கு ஆதரவான நிலையாகும்.
தினத்தந்தி நாளிதழைப், தமிழ்நாடு ஆளுநர் உரை பற்றி தலையங்கம் தீட்டி உள்ளது. அதுவும் தீர்க்கமான கருத்து எதுவும் சொல்லாமல் ஆளுநர் மனது புண்படக்கூடாது என்ற கோணத்தில் வழவழா கொழ கொழா என தலையங்கம் எழுதியுள்ளது.
தினமலர் நாளிதழைப் பொறுத்த மட்டில் தலையங்கம் என்ற பகுதிக்கு தனக்கு தகுதியில்லை என உணர்ந்து கொண்ட பத்திரிகை. எனவே அந்த நாளிதழில் தினமும் இடம் பெற வேண்டிய தலையங்கம் இடம் பெறாது. மாறாக தனது எஜமான விசுவாசத்தைக் காட்டும் வகையில் அவ்வப்போது ஒன்றிய அரசுக்கும் அதன் கட்சிக்கு ஆதரவாகவும் மட்டும் தலையங்கம் வெளிவரும். அந்த பத்திரிகை தாமரைக் கட்சியின் சொல்லப்படாதஅதிகாரபூர்வ நாளிதழ் என்பது அனைவரும் அறிந்ததே. அதனிட மிருந்து நியாயம், நேர்மை, ஊடக அறம் இவற்றை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.
அச்சு ஊடகங்கள் என்பன குறிப்பாக மக்க ளிடையே பரவலாக விற்பனையாகும் தமிழ் நாளிதழ்கள், சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய காலகட்டம் இது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசை அவமதிக்கும் வகையில் செயல்படும் ஆளுநரைப் பற்றி மவுனம் சாதிப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் புறந்தள்ளுவதற்கு ஒப்பாகும்.
தமிழ்நாட்டையும், அதன் மக்களையும், தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசையும் துச்சமென கருதி அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் போக்கினை கண்டித்து ஊடக அறம் சார்ந்தும், சமூகப் பொறுப்புணர்வோடும் செயல்படும் ஆங்கில நாளிதழ்கள் கருத்து வெளியிடுகையில் தமிழ் நாளேடுகள் ஆளுநர் ரவிக்கு ஆதர வாகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதை உணர்ந்து அந்தப் பத்திரிகைகளுக்கு எதிராக மக்கள் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
- முகவை ந.சேகரன்
மதுரை - 625009.
No comments:
Post a Comment