திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குக!

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குக!

தேசியக் கல்விக் கொள்கை எந்த வடிவத்திலும் கூடாது!

தஞ்சை, ஜன.22 நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குக! கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குக! தேசியக் கல்விக் கொள்கை எந்த வடிவத்திலும் கூடாது உள்பட 9 தீர்மானங்கள் திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடலில் நிறை வேற்றப்பட்டன.

நேற்று (21.01.2023) தஞ்சையில் திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு 

ஒப்புதல் வழங்குக!

மருத்துவக் கல்லூரி நுழைவுக்கு நீட் தேர்வைத் திணித்த ஒன்றிய அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டுக்கு அவசியமில்லை என்பதை ஆதாரப் பூர்வமாக எடுத்து வைத்து, சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம், நீட் தேர் விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக் காமல், தேவையில்லாத கேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பி, திட்டமிட்டுக் காலம் தாழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க் கையில் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் இக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உடனடியாக தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, நீட் என்னும் சுருக்குக் கயிறை அறுத்தெறிய வேண்டும் என குடியரசுத் தலைவரை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. நீட் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும்வரை திராவிட மாணவர் கழகம் ஓயாது.  தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்று இக் கூட்டம் சூளுரைக்கிறது.

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் 

சமூகநீதி ஒழிப்பும்!

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி என்ற பெயரில் கட்டற்ற கல்வி கொள்ளைக்கும், சமூக நீதிப் பறிப்புக்கும் வழிகோலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு முற்றாகத் தடுக்கப்பட வேண்டியதாகும்

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமையும்போது அவற்றில் மாணவர் சேர்க்கையிலும், பணியிடங்களை நிரப்புதலிலும் சமூக நீதிக்கு இடமே இல்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக் கும் இந்த வரைவு, மாணவ சமூகத்தின் எதிர்காலத்திற்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கும் ஆபத்தானது என்பதை மாணவர்களுக்கும், பேராசிரியர் களுக்கும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம் ஒன்றிய அரசின் இத்தகைய அநீதியான போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்கள் சமூகமும் திரண்டு எழ வேண்டியது அவசியம் என்பதையும், இல்லையேல் இந்த நிலை அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் என்று விஷக் கிருமி போல பரவிவிடும் என்பதையும் எச்சரிக்க வேண்டியது நமது கடமையாகும். திராவிட மாணவர் கழகம் இந்தப் பிரச்சினையில் முன்னின்று போராட்டங்களை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

துறைதோறும் பயிலரங்குகள்

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் ‘அரசியல் சட்டமும் சமூக நீதியும்' என்ற தலைப்பிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ‘மருத்துவமும் மூடநம்பிக்கையும்', ‘மருத்துவக் கல்வியும் சமூக நீதியும்' ஆகிய தலைப்புகளிலும், பொறியியல் கல்லூரி மாணவர் களுக்கு ‘அறிவியலும் பகுத்தறிவும்' என்ற தலைப்பிலும் ஒரு நாள் பயிலரங்குகளை நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

சுற்றுச் சூழல் காப்பில் மாணவர்கள்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், காலநிலை மாற்றத் தில் இருந்து உலகைக் காப்பதும் இன்றைய அவசியத் தேவை என்பதை உணர்ந்து, பள்ளிகளிலும், கலை அறிவியல் கல்லூரிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத் துவதும், சுற்றுச்சூழல் காப்புச் செயல்பாடுகளில் மாணவர் களை பெருமளவு ஈடுபடுத்துவதும் அவசியம் என்று இந்தக் கூட்டம் கருதுகிறது. அதற்கான திட்டத்தை வகுத்து, பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது  

அரசு உதவி பெறும் பள்ளிகளும், 

அரசுப் பள்ளிகளே!

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களின் பல்துறை வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளை இந்த கூட்டம் மனதார வரவேற்கிறது. பள்ளிக்கூடங்கள் என்பவை கல்வியைத் திணிக்கும் கூடங்கள் என்பதை மாற்றி, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல்துறைகளிலும் அவர்களுக்கு வழிகாட்டும் அமைப்புகளாக செயல்படும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டும் வரும் முயற்சிகள் நல்ல தொடக்கமாகும்.

அரசுப் பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கட்டமைப்பிலும், அங்கு படிக்கும் மாணவர்களின் சமூக, பொருளாதார நிலைகளிலும் வேறுபாடுகள் எதுவும் இருப்பதில்லை. அரசுப் பள்ளிகள் அமைய வாய்ப்பற்ற இடங்களில், கல்வியின் சேவையை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் சேர்வதை அரசு உதவி பெறும் பள்ளிகளே உறுதிப் படுத்தின. இன்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சேவையும், தேவையும் அதிகமே என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளைப் போன்றே கருதப் பட்டு, அரசு எடுக்கும் முயற்சிகளிலும் திட்டங்களிலும், முன்னெடுப்புகளிலும், இடஒதுக்கீடு வாய்ப்புகளிலும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் பங்களிக்கப்பட வேண்டும். அரசின் சீரிய முயற்சிகள் பெரும் தளத்திற்குச் செல்வதற்கு அதுவே உதவும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் இக் கூட்டம் கொண்டு செல்ல விரும்புகிறது. 

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குக!

ஜாதிப் பட்டங்கள் ஒழிந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாவதற்குத் தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை மாநாடே மூல காரணம். அதன் தொடர்ச்சியாக, தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தெருப் பெயர்களில் இருந்த ஜாதிப் பெயர்களை நீக்க தந்தை பெரியாரின் நூற்றாண்டில் அரசு ஆணையிட்டது. எனினும், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறு வனங்களில் ஜாதிப் பெயர்கள் இன்னும் இடம்பெற்றி ருப்பது கவலையுடன் கவனிக்கத்தக்கதாகும். ஜாதி ஒழிந்த சமூகத்தை உருவாக்க அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் முதல் கட்டமாக ஜாதிப் பெயர் களை ஒழித்திட ‘திராவிட மாடல்' அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சுவரெழுத்தும், துண்டறிக்கைகளும்

திராவிட மாணவர் கழகத்தில் சேர்ந்து சமூகப் பணியாற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், சுவரெழுத்துகள், துண்டறிக்கைகள் மூலம் அனைத்துக் கல்வி நிறுவன மாணவர்களிடையேயும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது. 

தேசியக் கல்விக் கொள்கை 

எந்த வடிவத்திலும் கூடாது

"தேசியக் கல்விக் கொள்கையை எவ்விதத்திலேனும் திணித்துவிட வேண்டும்; கல்வித்துறையை ஒன்றிய அரசின் கைகளில் எடுத்து, அதைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்" என்று ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆளுநர்களை அதற்கான கருவிகளாகவும் பயன் படுத்திக் கொண்டிருக்கிறது. "தேசியக் கல்விக் கொள் கையை ஏற்பதில்லை; மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும்" என்று தெளிவாக அறிவித்து, அதற்கான குழுக்களையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நிலை யில், ஆளுநரின் போக்குகள் அதற்கெதிராக அமை வதும், வேந்தர் என்னும் பெயரில் கல்வி நிறுவனங்கள் மீது ஆளுநர் ஆதிக்கம் செலுத்துவதும் விரும்பத்தக் கவை அல்ல. வெவ்வேறு பெயர்களில் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகள் நுழைவதையும், இந்தி-சமஸ் கிருதத் திணிப்புகள், இந்துத்துவச் சதிகள் பல்கலைக் கழகங்கள்.  கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதையும் தீவிரமாகத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி-உயர்கல்வித் துறையை மீறி, ஆதிக்கக் கரங்கள் நுழைவதையும் முன்கூட்டியே தடுத்திடவும், உரிய அறிவுரைகளைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிடவும் வேண்டும் என அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள் கிறது.

சமூகவலைதளப் பயிற்சிகளை நடத்துதல்

உலகத் தலைவர் தந்தை பெரியாரின் கருத்துகள் இளையதலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கப்பட வும், உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்திகளைப் பரப்பும் தீய சக்திகளுக்கு ஆதாரப்பூர்வமான தகவல் களைத் திரட்டி தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திராவிட மாணவர் கழகம் சமூகவலைதளப் பயிற்சிகளை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment