அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்துவிடும் ஒன்றிய அரசின் முடிவால் ஏற்படவிருக்கும் விபரீதம்!
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநிலச் செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்
அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறக்க அனுமதி வழங்கும் நடை முறைக்கான வரைவை, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பல்கலைக்கழகங்களுக்கு அரசு நிதி வழங்குவதையும், அதன் முன்னேற்றம் குறித்து சிந்திப்பதையும் அறவே துறந்துவிட்டு, வியாபார நோக்கில் நீங்கள் செயல்பட்டுக் கொள்ளுங்கள் என்று கைகழுவிவிட்ட ஒன்றிய அரசு, பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குக் கதவு திறந்துவிட மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது கல்வி வளர்ச்சிக்காகத்தான் என்று எண்ணுவதற்கு நமக்கென்ன அறிவா மழுங்கிப் போய்விட்டது? மிகத் தெளிவாகத் தான் அந்த வரைவில் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே!
இந்தியாவில் கடை திறக்கும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் சேர்க்கை யையும், அவர்களுக்கான கட்டண விகிதத்தையும் தாங்களே முடிவு செய்துகொள்ளலாம். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. (இருந்தாலும் அந்தக் கட்டணத்தை ஏதோ கொஞ்சம் பார்த்து ரீசனபிளாக வைத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொஞ்சம் கெஞ்சிக் கேட்டுள்ளது.)
அயல்நாட்டு நிறுவனங்கள் பேராசிரியர்கள், பணியாளர்களை, இந்தியாவிலிருந்தோ, அயல்நாடு களிலிருந்தோ நியமிப்பதும் அவர்களின் எதேச்சதி காரத்திற்கு உட்பட்டது.
இந்தியாவின் அயல்நாட்டு உறவுகள், பாதுகாப்பு, நிதி போக்குவரத்து போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
மற்றபடி என்னவும் செய்துகொள்ளுங்கள் என்று கூறுகிறது அந்த வரைவு. தேசிய கல்விக் கொள்கையில் எதற்கு அடித்தளம் இட்டிருந்தார்களோ, அதற்குத்தான் அடுத்த கட்டுமானத்தை எழுப்பியிருக்கிறார்கள்.
யார் இதன்மூலம் பலன் பெறப் போகிறார்கள்?
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பலன் உண்டா? அதுதான் வெளிப்படையாகச் சொல்லி விட்டார்களே, எந்தக் கட்டுப்பாடுமின்றி கல்லூரிச் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று! அப்படியானால் என்ன பொருள்? இட ஒதுக்கீடு கிடையாது; சமூகநீதி என்ற பேச்சு அறவே கிடையாது என்பது தானே!
எப்போதும் பொருளாதார ரீதியில் கரிசனம் காட்டுவதாக நடிப்பார்களே, அந்த ஏழை, எளிய மக்களுக்கு இதனால் பலன் உண்டா? கல்விக் கட்டணம் இனி டாலர் கணக்கில் தானே இருக்கப் போகிறது. பிறகெப்படி?
மேற்சொன்ன பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தானே பெரும்பாலான ஏழைகள்? அவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? அப்படியெனில், மாதம் 62,000 சம்பாதிக்கும் அந்த அரிய ஆரிய வகை ஏழைகள்? அவர்களுக்கு மட்டும் சலுகைகள் வரலாம்.
வேலை வாய்ப்பு, பேராசிரியர் நியமனம், பணியாளர்கள் அதிகாரிகளில் இட ஒதுக்கீடு? மூச்... பேசப்படாது. துப்புரவுப் பணியிடங்களை வேண்டு மானால் முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.
இதன் மறைமுகப் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இந்திய பல்கலைக்கழகங்கள் முற்றிலும் தற்சார்பாக இயங்க அறிவுறுத்தப்படும். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கப்படும். அதாவது ’சுயநிதியில் இயங்குங்கள். அதற்கான காசை மாணவர்களிடம் சுரண்டிக் கொள்ளுங்கள். மானியம், கீனியம் என்றெல்லாம் கேட்டு இந்தப் பக்கம் கால்வைக்கக் கூடாது’ என்பது தான் பதிலாக இருக்கும். நிதியின்றி நசிந்து போகட்டும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி பறிபோகட்டும். இல்லை, பல்கலைக்கழகங்கள் கட்டணங்களை அதிகப்படுத்திக் கொள்ளட்டும். ’என்னவோ செய்து கொள்ளுங்கள், எங்களைவிடுங்கள்’ என்பார்கள்.
அரசுப் பல்கலைக்கழகங்களுக்கே இதுதான் நிலை என்றால், தனியார் பல்கலைக்கழகங்கள்? அவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் கட்டணத்தில் கட்டுப்பாடு இல்லை என்றால், நாங்கள் சுதேசி, எங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என்பார்கள்.
“ஆமாமாம்... சரிதானே உங்கள் கோரிக்கை! நீங்களும் அவர்களைப் போல தரமுயர்த்திக் கொள்ள வேண்டும், சரியா? பிடியுங்கள் உங்களுக்கும் விலக்கு!” என்று கண்ணடிப்பார்கள்.
பொய்யில்லை... இப்போதே துண்டு போட்டு வைத்துவிட்டார் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர். அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படுவது போன்றே, அதே அளவில் கல்வி, நிர்வாகம், நிதி ஆகியவற்றில் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் உயர் கல்வியை மேம்படுத்த நல்ல போட்டி நிலவும்” என்கிறார் திரு. வைத்திய சுப்பிரமணியன். (தி இந்து, ஜனவரி 5)
அதாவது?
‘அதாவது இட ஒதுக்கீடு, கட்டண விகிதக் கட்டுப்பாடு போன்றவை குறித்தெல்லாம் எங்களிடம் கேட்கக் கூடாது. இந்துத்துவாவைக் கல்வியில் திணிக்க முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.’ என்று பொருள்.
உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மாணவர்கள், மகளிர், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஃபாரின் பிராண்ட் பட்டை நாமம் சாத்தப்படும். அந்த ஃபாரின் லேபிளுக்குப் பின்னால், உள்ளூர் கல்வி முதலைகளும் மறைந்துகொள்ளும்.
இன்று பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர் களுக்கும், நாளை படிக்கப் போகும் மாணவர்களுக் குமான பேராபத்து இது!
சமூகநீதியும், அனைவருக்கும் உயர்கல்வி என் னும் கனவும் கலைந்து போகட்டுமா? நூறாண்டுகள் போராடி ஆயிரம் ஆண்டு அடிமைத் தனத்தை மாற்றியிருக்கிறோமே, மீண்டும் கல்வியறிவற்ற நிலைக்குப் போகப் போகிறோமா?
என்ன செய்யப் போகிறோம் மாணவர்களே?
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநிலச் செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment