மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங் கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறி யாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!
சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:
நாகப்பட்டினத் தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிர கத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).
சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?
No comments:
Post a Comment