புனே, ஜன. 14- மகாராஷ்ட்ராவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடும் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீரடி சாய்பாபா கோயிலுக்கு பேருந்தில் சென்று கொண் டிருந்த போது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் காயமடைந்தவர் களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராட்டிரா மாநிலம் தானேவில் இருந்து சீரடியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. தானேவை சேர்ந்த 50 பேர் அந்த பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சீரடியில் உள்ள பிரசித்திபெற்ற சாய்பாபா கோயிலுக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், நாஷிக் - சீரடி நெடுஞ்சாலையில் பத்தாரே கிராமம் அருகே வந்த போது, எதிரே தறிகெட்டு வேகமாக வந்த லாரி ஒன்று இந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த கொடும் விபத்தில் பேருந்தில் இருந்த 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 10 பேர் நிகழ்விடத் திலேயே உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந் தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் குடும்பத்தி னருக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
என்னே கொடுமை!
கோவிலுக்குள் நுழைந்த
தாழ்த்தப்பட்ட சமூக வாலிபருக்கு சூடு
டேராடூன், ஜன. 14- உத்தரகாண்டில் கோவிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட சமூக வாலிபருக்கு கொள்ளிக் கட்டையால் சூடு வைத்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சால்ரா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது தலித் வாலிபர் ஆயுஷ். இவர் தங்கள் கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் வழிபட சென்றார். அவர் கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்து ஆத்திரமடைந்த சிலர் அந்த வாலிபரை அடித்து உதைத்து, ஒரு தூணில் கட்டிவைத்தனர். பின்னர் இரவு முழுவதும் அவர் உடலில் கொள்ளிக்கட்டையால் சூடு வைத்து அந்தக் கும்பல் கொடுமைப்படுத்தினர். மறுநாள் காலை, அரசு ஆரம்ப சுகாதார மய்யத்தில் சிகிச்சை பெற்ற அந்த வாலிபர், பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் அளித்த புகாரின் பேரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், கிராமத்தினர் 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட சமூக வாலிபருக்கு கொள்ளிக்கட்டையால் சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment