'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டமா? தி.மு.க. கடும் எதிர்ப்பு மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டமா? தி.மு.க. கடும் எதிர்ப்பு மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு கடிதம்

புதுடில்லி, ஜன. 17- நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. தரப்பு கருத்தை கடிதமாக சட்ட ஆணையத்துக்கு அளித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் இதுதொடர்பான கடிதத்தை டில்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 1951ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் பின்பு சில மாநிலங்களில் ஆட்சிக் காலம் முடியும் முன்பே அரசுகள் கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளு மன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த இயலவில்லை. 6, 7, 9, 11, 12 மற்றும் 13ஆவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்ட மன்றத்துக்கும் தேர்தல் நடத்த முடியாமல் போனது. அரசமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தை சுட்டிக்காட்டி ஆளு நரும் ஆட்சியை கலைக்கலாம். 

ஒரு ஆட்சி என்னென்ன காரணங் களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற் காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பத என்பது மக்கள் எண்ணத்துக்கு எதிரானது.

இந்த திட்டத்துக்காக அரசை கலைத்தால் தேர்தலுக்காக செலவிடப் பட்ட மக்க ளின் வரிப்பணம் வீணாகும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் ஆகும். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment