"பா.ஜ.க.வுக்கு எங்கள் ஊரில் இடம் கிடையாது!" கோவை கிராம மக்கள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

"பா.ஜ.க.வுக்கு எங்கள் ஊரில் இடம் கிடையாது!" கோவை கிராம மக்கள் எதிர்ப்பு

கோவை மாவட்டம், அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி காலனியில் வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பம் ஊர் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.பி.சி. தமிழ் இணையம் (29.12.2022) வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:

“எங்கள் ஊரில் பாஜகவை அனு மதிக்க மாட்டோம்” என  அந்தப் பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற கட்சிகளின் கொடிக்கம்பம் இருப்பது போல பாஜக கொடிக் கம்பமும் அங்கே இருக்க வேண்டும் என்கிறது மாவட்ட பாஜக.

கோவை மாவட்டம் துடியலூரிலி ருந்து இடிகரை செல்லும் வழியில் அமைந்துள்ளது அசோகபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள் இருக்கும் காந்தி காலனி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பான்மையாக ஆதி திராவிடர் சமூக மக்கள் வசிக்கும் பகுதி இது.

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியினர் இங்கே பாஜக கொடி கம்பம் அமைத்தது சர்ச்சையாகியுள்ளது. தங்கள் பகுதியில் பாஜகவை அனுமதிப் பதில்லை என்று தாங்கள் முடிவு செய் திருப்பதாகவும் அதையும் மீறி, உரிய அனுமதியின்றி இங்கே பாஜக கொடிக் கம்பம் நடப்பட்டிருப்பதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஊர் மக்கள் சார்பில் சுமார் 50 பேர் கையெழுத்திட்டு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் காவல்துறை உதவியுடன் பாஜக கொடிக் கம்பத்தை அகற்றியுள்ளனர். 

இந்த சர்ச்சையின் பின்னணி தொடர் பாக மேலும் விசாரிக்க காந்தி காலனிக்கு நேரில் சென்றோம். செவ்வாய்க்கிழமை வரை 10 காவலர்கள் இங்கு கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள். புதன்கிழமைதான் காவலர்கள் சென் றனர் என்று காந்தி காலனி மக்கள் தெரிவித்தனர். 

பாஜகவை 30 ஆண்டுகளாக அனுமதிப்பதில்லை காரணம் என்ன?

எங்கள் ஊரில் கடந்த 30 ஆண்டு களாக பாரதிய ஜனதா கட்சியினரை நாங்கள் அனுமதிப்பதில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த யாரும் அந்தக் கட்சியில் சேர்வதில்லை,” என்றார் காந்தி கால னியை சேர்ந்த ரங்கநாதன். 

காந்தி காலனியில் பாஜக கொடிக் கம்பம் அமைப்பது தொடர்பான சர்ச்சை உருவான இடத்தில் அய்ந்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. ஆனால் பாஜக கொடிக் கம்பம் மட்டும், வைத்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. 

பிபிசி தமிழிடம் பேசிய ரங்கநாதன், “30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் பாஜக வில் இணைந்தனர். அப்போதிலிருந்தே இங்கு பாஜகவினரால் பிரச்சினைகள் உருவாயின.

அதனால் ஊர் மக்கள் கூடி பாஜகவை அனுமதிப் பதில்லை, பாஜகவில் யாரும் இணைவதில்லை எனத் தீர்மானத்து விட்டோம். இங்குள்ள இளைஞர்கள் அனைத்து கட்சிகளிலும் இருப்பார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும் நாங்கள் அண்ணன் தம்பியாக இருப்போம். ஆனால் பாஜகவை மட்டும் அனுமதிக்க மாட்டோம்.

இதனால் பக்கத்து ஊர்களான மணியகாரன் பாளையம், இடிகரை ஆகிய பகுதிகளிலிருந்து பாஜகவினர் இங்கு வருவார்கள். சில மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர் பாஜகவில் இணைந்தார். அவர் மூலம் தான் பாஜகவினர் கொடி வைப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தனர்.

டிசம்பர் 23ஆம் தேதி இரவு சின்ராஜ் கொடிக் கம்பம் வைக்கும் வேலைகளைச் செய்தபோதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். முதலில் சின்ராஜ் அகற்று வதாக ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் பக்கத்து பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் சின்ராஜை வற்புறுத்தி நள்ளிரவில் வந்து கொடிக் கம்பத்தை அமைத்துவிட்டுச் சென்றனர்.

இதனால் நாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல்நிலையத்தில் முறையாகப் புகார் அளித்தோம். அதன் பின்னர் அதிகாரிகளே வந்து அந்தக் கொடிக் கம்பத்தை அகற்றியுள்ளனர்,” என்றார் ரங்கநாதன்.

மேலும், “ஊர் மக்களின் முடிவு அது. எங்கள் பகுதி அமைதியாக இருக்கவே நாங்கள் பாஜகவை அனுமதிப்பதில்லை,” எனக் கூறுகிறார்.

"எங்கள் ஊரில் அந்தக் கட்சியினர் யாரும் இல்லை. அதனால், அந்த கட் சிக்கு இங்கே கொடிக் கம்பம் வேண்டிய தில்லை" என்கிறார் 60 வயதான பூவாத்தா.

அவர் கூறுகையில், "அந்தக் கட்சி யைச் சேர்ந்த மக்கள் யாருமே இங்கு இல்லை. பிறகு இங்கு ஏன் கம்பம் வைக்க வர வேண்டும். அவர்கள் வந்தபோதும் உங்கள் பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினோம். அதை மீறி பிரச்சினை செய்தார்கள். கடைசியாக காவல்துறையினர் வந்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்" என்றார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில்லை

ஒரு முறை, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஏற்பட்ட பிரச்சினைகளே பாஜகவை ஊர்மக்கள் அனுமதிக்காத தற்குக் காரணம் என்கிறார் லெனின்.

அவர் கூறுகையில், “30 ஆண்டு களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி நாள் அன்று, பாஜகவினரால் எங்கள் ஊரில் தகராறு ஏற்பட்டது. அப்போதில் இருந்துதான் காந்தி காலனி மக்கள் பாஜகவை தவிர்க்கத் தொடங்கினர்.

அதேபோல், 15 ஆண்டுகளுக்கு முன்பும் விநாயகர் சதுர்த்தியன்று பாஜகவினரால் பிரச்சி னைகள் உருவாயின. அதனால் எங்கள் ஊரில் பொது வெளியில் பெரிய சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில்லை. ஊர்வலம் போவதில்லை.

இங்கு விநாயகர் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் உள்ளன. நாங்கள் எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப வழிபட்டு வருகிறோம். ஆனால் அதை வைத்துப் பிரச்சினை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்,” என்றார் லெனின். 

காந்தி காலனி சந்திப்பிலிருந்து நூறு அடிக்கு முன்பு உள்ள செங்காளி பாளையம் பிரிவில் பாஜக கொடிக் கம்பம் அமைந்துள்ளது. இரு பகுதி களுக்கும் இடையே ஒரு சிறிய பாலம் மட்டுமே உள்ளது.

கொடிக் கம்பம் வைத்தது தொடர்பாக ஊர் மக்கள் அளித்த புகாரின்பேரில், சின்னராசு, சேகர் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

பாஜக என்ன சொல்கிறது?

ஊருக்குள் இருக்கும் ஒரே பாஜக உறுப்பினர் எனக் கூறப்படும் சின்னராஜ் இந்தப் பிரச்சினை குறித்துப் பேச முன் வரவில்லை.

இருப்பினும் ஊர் மக்களின் குற்றச் சாட்டில் உண்மை இல்லை என்கிறார் கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா கூறுகையில், “பாஜக வின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத சில அரசியல் கட்சியினர் தான் இதைச் செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்கவில்லையென்றால் முற் றுகைப் போராட்டம் நடத்துவோம்,” என்றார். 

இது தொடர்பாக பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறுகையில், “பாஜகவின் கொடிக் கம்பம் அமைக்க மட்டும் அனுமதிக்காதது முறையல்ல. பாஜக கொடிக் கம்பம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோட் டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். பாஜகவின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் மற்ற கட்சிகளின் கொடிக் கம் பங்களையும் அங்கிருந்து அகற்றவேண்டும். எங்கள் மனு மீது நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடி வெடுப்போம்” என்றார்.

No comments:

Post a Comment