''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

 குடியரசுத் தலைவர் தவறு செய்தால் ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வருகிறார்களே அதுபோல - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக

போட்டி அரசாங்கம் நடத்தினால் - குறுக்குசால் ஓட்டினால் சட்டப்பூர்வமாக ஆளுநரை வெளியேற்றுவதற்கு 

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்!

அதை நான் முன்மொழிகிறேன் - நீங்கள் வழிமொழியுங்கள்!

சென்னை, ஜன.21  குடியரசுத் தலைவர் தவறு செய்தால், இம்பீச்மெண்ட் கொண்டு வருகிறார்கள் அல்லவா! அது போன்று மாநில ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசிற்கு எதிராக குறுக்குசால் ஓட்டினால், போட்டி அரசாங்கம் நடத்தினால், ஆளுநரை வெளி யேற்றுங்கள் என்று சட்டப்பூர்வமாக செய்வதற்கு, அரச மைப்புச் சட்டத்தில் திருத்தம் வரவேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன் முதலில்; நீங்கள் கைதட்டி வழிமொழியுங்கள்! நாம் இன்றைக்கு சொல்வது நடக்குமா? என்பதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; திரா விட இயக்கத்தினுடைய இன்றைய தீர்மானம், நாளைய - வருங்கால அரசின் சட்டத் திட்டங்கள் என்பதுதான் வரலாறு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்‘‘ சட்டக் கருத்தரங்கம்!

நேற்று (20.1.2023) மாலை சென்னை- பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக சட்டக் கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சீரிய பகுத்தறிவாளர் என்.ஆர்.இளங்கோ

மிகுந்த எழுச்சியோடு திராவிட முன்னேற்றக் கழக சட்டத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘‘அர சமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்’’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பான இந்த சட்டக் கருத்தரங்கத்தின் தலைவர் - பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவையின் உறுப்பினரும், சீரிய சுயமரியாதைப் பகுத்தறிவாளருமான அன்பிற்குரிய அருமைச் சகோதரர் மானமிகு என்.ஆர்.இளங்கோ அவர்களே,

அண்ணா சொன்னதை 

நினைவூட்டினார் நீதியரசர்

இந்நிகழ்ச்சியில் நீதியரசர் சந்துரு அவர்கள் எனக்கு முன் சிறப்பாக உரையாற்றினார், ஒரு பிரச்சினைக்குத் தீர்வு எப்படி? அடிக்கடி தலைவலி வருவதைத் தடுப்பதற் காக சாரிடான் மாத்திரையோ, ஆஸ்பிரின் மாத்திரையோ சாப்பிடுவதல்ல. அடியோடு பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், வேரிலேயே கை வைக்கவேண்டும் என்பதற் காக, அண்ணா சொன்னதை நினைவூட்டினார் நீதியரசர் அவர்கள்.

‘‘ஆட்டுக்குத் தாடி தேவையில்லை- 

நாட்டுக்குக் கவர்னர் தேவையில்லை!’’

நீதியரசர் தீர்ப்பு எழுதினால், அது அப்பீலில் வெற்றி பெறக் கூடிய தீர்ப்பாகும். சாதாரண தீர்ப்பல்ல; சாதாரணமான தீர்ப்பல்ல என்று சொல்வதற்குக் காரணம், மக்கள் தீர்ப்பாகத்தான் அண்ணா அவர்கள் அதை சொன்னார்கள்; ‘‘ஆட்டுக்குத் தாடி தேவையில்லை- நாட்டுக்குக் கவர்னர் தேவையில்லை!'' என்பதை அழகாக எடுத்துச் சொன்னார்.

அந்தப் பிரச்சினை ஒரு பக்கத்தில் இருக்கிறது; அதை நோக்கித்தான் நாம் செல்லவேண்டும். அடுத்த கட்டத் திற்குச் செல்லவேண்டும். தனித்தனியே போராடிக் கொண்டிருப்பதைவிட, எங்கே பிரச்சினை இருக்கிறதோ -  நோய் நாடி நோய் முதல் நாடவேண்டும் - அதுதான் நம்முடைய அணுகுமுறை.

பாராட்டுதலுக்குரிய 

மாண்பமை நீதியரசர் சந்துரு

அந்த வகையில் ஒரு தீர்வையே சொல்லிவிட்டு அமர்ந்திருக்கின்ற நம்முடைய பாராட்டுதலுக்குரிய மாண்பமை நீதியரசர் சந்துரு அவர்களே,

இந்த நிகழ்ச்சியிலே, சட்ட ரீதியாக ஓர் ஆளுநருக்கு என்னென்ன அதிகாரங்களை இந்திய அரசமைப்புச் சட்டம் தந்திருக்கிறது; வகுத்திருக்கிறது என்பதையெல் லாம் தொகுத்து முறையாக சொல்லியிருக்கிற அருமைச் சகோதரர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை அவர்களே,

இந்நிகழ்ச்சியில், சிறப்பாக வரவேற்புரையாற்றிய தி.மு.க.வின் சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய சட்டத் துறை இணை செயலாளர்கள் சட்டப்பேரவை உ:றுப்பினர் பரந்தாமன் அவர்களே, என்.மணிராஜ் அவர்களே, கே.எம்.தண்ட பாணி அவர்களே, இராதாகிருஷ்ணன் அவர்களே, பி.ஆர்.அருள்மொழி அவர்களே, மற்றும் சட்டத்துறை துணை செயலாளர் கே.சந்துரு, பச்சையப்பன், பட்டு ஜெகன்னாதன், ப.வைத்தியலிங்கம், எஸ்.தினேஷ் அவர்களே,

அதேபோல, தி.மு.க. தலைமைக் கழக வழக்குரை ஞர்கள் சூர்யா வெற்றிகொண்டான் அவர்களே, கவி கணேசன் அவர்களே, எம்.எல்.ஜெகன் அவர்களே, மறைமலை அவர்களே, 

மற்றும் இங்கே சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரகு அவர்களே, பாபு அவர்களே, மருதகணேஷ் அவர்களே, கணேசபாண்டியன் அவர்களே,

‘பெரியார் விருது’ வழங்கப்பட்ட பாராட்டுதலுக்குரிய கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவரும், அண்மையில் தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது’ பெற்றவருமான பாராட்டுதலுக்குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

திராவிட இயக்கத்தினுடைய கொள்கையாளராகவும், பிரச்சாரத்தின் பாரம்பரிய பெருமைக்குரியவருமான அரு மைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

நாடாளுமன்றத்தில் பீரங்கி முழக்கமாக முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய மானமிகு திருச்சி சிவா

இந்தியாவினுடைய தலைநகரிலே எப்பொழுதும் திராவிட இயக்கக் கொள்கையினுடைய குரல் ஒலியை முழங்கிக் கொண்டே இருக்கக்கூடிய - நாடாளுமன்றத்தில் பீரங்கி முழக்கமாக முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய மானமிகு திருச்சி சிவா அவர்களே,

நம்முடைய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய அய்யா நீதியரசர் அக்பர் அலி அவர்களே, 

மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைத்துப் பெருமக்களே, நண்பர்களே, வழக்குரை ஞர்களான தோழர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நல்ல வழிகாட்டு முறையை இன்றைக்குத் தொடங்கியிருக்கிறீர்கள்!

இந்தக் கருத்தரங்கம் ஒரு முடிவல்ல - தொடக்கம்தான் என்று தலைவர் அவர்கள் அழகாகச் சொன்னார் - அதேபோல, முடிவு வருகின்ற வரையில் போராடுவதற்கு நமக்கு எந்தவிதமான தயக்க மும் கிடையாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரு நல்ல வழிகாட்டு முறையை இன்றைக்குத் தொடங்கியிருக்கிறீர்கள். அதற் காக, திராவிட முன்னேற்றக் கழக சகோதர வழக்குரைஞர் பெருமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த முயற்சி தொடரவேண்டும். ஏனென்றால், நாட் டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தார்கள் என்று சொல்லக் கூடிய வரலாற்றில்கூட, வழக்குரைஞர்களின் பங்குதான் மிக அதிகம் இருக்கும், எப்பொழுதுமே எந்த நிலையிலும்.

வழக்குரைஞர்கள் துணிந்து போராடக் கூடியவர்கள்; வழக்குரைஞர்கள் எதற்கும் எளிதில் வளைந்து கொடுக்காதவர்கள். சில நேரங்களில் நீதிமன்றங்களில் வழக்கு வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வேண்டு மானால், நாணல் மாதிரி அவர்கள் வளைந்திருப்பார்கள், அது வேறு செய்தி.

ஆனால், அப்படிப்பட்ட நேரத்தில், கொள்கை ரீதியாக இருக்கவேண்டிய நேரத்தில், அவர்கள் செய்ய வேண்டிய அருமையான பணி என்பது இருக்கிறதே, அதற்கு இந்தக் கருத்தரங்கம் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மக்களிடம் சட்ட நிலைகளை எடுத்துச் சொல்லுங்கள்!

தலைவர் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் - இந்தக் கருத்தரங்கத்தினுடைய அமைப்பு முறை 

ஏன் தேவைப்பட்டது என்பதை எடுத்துச் சொன்னார். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களிடம். இந்தக் கருத்தரங்கத்திற்காக அனுமதி கேட்டபொழுது, ‘‘தாராளமாக செய்யுங்கள்; வழக்குரை ஞராக இருக்கின்ற நீங்கள் சட்டத்தை நன்றாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்; வேறு யாரைப்பற்றியும் நமக்குக் கவலையில்லை. சட்ட நிலைகளை எடுத்துச் சொல்லுங் கள்'' என்று அவர்கள் அனுமதி கொடுத்ததற்காக அவர்களுக்கு நன்றி என்று சொன்னார்கள்.

அது உண்மை; நியாயம்!

காரணம், இந்திய அரசமைப்புச் சட்டப்படி- உங் களுக்குத் தெரியாதது அல்ல; நமக்குத் தெரியாதது அல்ல. இருந்தாலும், நாம் எல்லோரும் சேர்ந்து மக் களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இந்த அரசமைப்புச் சட்டம் இதுதான்- குடியரசுத் தலைவரிலிருந்து, ஊராட்சி மன்றத் தலைவர் வரையில், உறுதிமொழி ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு சட்டம்.

அதிகாரம் யாருக்கு இருக்கிறது?

இந்த அரசமைப்புச் சட்டத்தில், அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற பிரச்சினைக்கு, முதலில் எடுத்தவுட னேயே, பீடிகை என்று சொல்லக்கூடிய முன்னுரையில் மிக அழகாக, மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

அதிகாரம் யாரிடம் இருக்கிறது?

குடியரசுத் தலைவரிடத்திலா?

இல்லை.

நாடாளுமன்றத்திலா?

இல்லை.

நீதிமன்றத்திலா?

இல்லை

சட்டமன்றத்திலா?

இல்லை.

அரசமைப்புச் சட்டப்படி நான் சொல்கிறேன். நான் சொல்வது தவறாக இருந்தால் திருத்துங்கள், நான் ஏற்றுக்கொள்கிறேன்.

மக்களிடம்தான் அதிகாரம் இருக்கிறது!

ஆனால், அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், மக்களிடம் இருக்கிறது.

We the People...

இதுதான் மிக முக்கியம்.

மக்களுக்காகச் சட்டம் -

மக்களுக்காக ஆட்சி -

மக்கள் நலனுக்காக மற்றவர்கள் அரசியலில் இருக்கிறவர்கள் பணிபுரியவேண்டும்.

‘நம்பர் ஒன் முதலமைச்சர்!’

இந்தக் கடமையைத்தான்,  தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியினுடைய தலைவராக, அதுவும் இந்த ஒன்றரை ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவி லேயே இப்படி ஓர் ஆட்சி இல்லை என்ற பெருமிதத்தோடு, ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்று மற்ற ஏடுகளாலும் பாராட்டப்படக் கூடிய ஒரு முதலமைச்சர் - ஒப்பற்ற திராவிட மாடலுடைய முதலமைச்சராக இருக்கக் கூடிய ஒரு முதலமைச்சர் தன்னுடைய கடமையைச் செய்தார்.

வேறு யாரும் செய்ய முடியாத ஒரு பணியை, அவர்கள் துணிந்து செய்தார்கள்.

அவர்கள் சமூக நீதியை நிலைநாட்டினார்கள்; சட்ட நீதியையும் நிலை நாட்டினார்கள்.

எப்பொழுது?

கடந்த 9 ஆம் தேதியன்று

மிக விசித்திரமான ஒரு சூழல் ஏற்பட்டது அன்றைக்கு. இதுவரை ஆளுநராக இருந்தவர்கள், உரை நிகழ்த்தினார் என்று சொல்வதைவிட, உரை யைப் படித்தார் என்று சொல்வதுதான் - மக்களுக்கு விளங்கக் கூடிய மொழியில் சொல்லவேண்டும்.

எங்கோ உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக செய்தார்கள்

உரை நிகழ்த்துவது வேறு; படிப்பது வேறு. அவர்கள் சொந்தமாக எழுதிப் படித்தால், அவர்கள் உரை நிகழ்த்து கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் கையிலே கொடுத்துப் படியுங்கள் என்று சொன்னால், அவர்கள் உரையைப் படிக்கிறார்கள்.

படிக்கவேண்டியவர்கள் படிக்கவேண்டுமே தவிர, படிய மறுக்க- மறுத்தேன் என்று காட்டுவதற்கு, எங்கோ உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக செய்தார்கள்.

இது இதுவரையில் கேள்விப்படாதது. கேள்விப் படாதது மட்டுமல்ல, அவர் நடந்துகொண்ட முறை என்பது, இதுவரையில் சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாகும்.

நாங்கள் சட்டமன்றத்திற்கு உள்ளே எப்பொழுதுமே போவாதவர்கள்; உள்ளே போனவர்களைப் பாதுகாப்பது தான் எங்களுடைய வேலை.

எதிர்க்கட்சிகள்தான் இதுவரையில், ஆளுநர் உரையைப் படிக்கும்பொழுது வெளியே போயிருக் கிறார்கள்; ஆளுநரே வெளியே போனார் என்பது இருக்கிறதே, அது இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமானது.

ஆளுநர் எப்பொழுது எதிர்க்கட்சியில் சேர்ந்தார் என்பது தெரியாது; ஒருவேளை அது ரகசியமாக நடந்திருக்கிறதோ என்றும் தெரியவில்லை.

ஆளுநரை வெளியேற்றவில்லை; வெளியேற்றவும் மாட்டார் பேரவைத் தலைவர்!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆளுநர் வெளியேறு கிறார். ‘‘வெளியேற்று’’ என்று சொன்னவர்களைப் பார்த் திருக்கிறோம். பேரவைத் தலைவர்தான் வெளியேற்றுவார்; பேரவைத் தலைவர், ஆளுநரை வெளியேற்றவில்லை; வெளியேற்றவும் மாட்டார்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஆளுநர் வெளியே போனார் என்று சொன்னால், இது அசாதாரணமான சூழ்நிலையா, இல்லையா?

தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் 

ஆளுநர் வெளியேறினார் என்று நடந்தது உண்டா?

இது ஜனநாயகமா? இதுவரையில் இப்படி நடந்ததுண்டா? என்று கேட்கிறார்களே, அவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்; சட்டமன்ற வரலாற்றில், தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் ஆளுநர் வெளியேறினார் என்று இதுவரையில் நடந்தது உண்டா?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்!

ஏன் அப்படி நடந்தது?

அப்படி வெளியேறவேண்டிய அவசிய மென்ன?

சட்டப்படி நாம் நடந்துகொண்டோமா என்று அவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

இந்தக் கருத்தரங்கத்தினுடைய தலைவர் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., அவர் கள் சொன்னார்கள்,

ஆளுநருக்கு, யார் யோசனை சொன்னார்கள்,

யார் அவருக்கு அறிவுரை சொன்னார்கள்?

நிச்சயமாக உங்களைப் போன்றவர்கள் அவ ருக்கு அறிவுரை சொல்லமாட்டார்கள்; அப்படி சொன்னாலும், அவர் கேட்கமாட்டார்.

சரியானவரிடம் அறிவுரை பெற்றிருக்கிறார் நமது முதலமைச்சர்

ஆனால், சரியானவரிடம் அறிவுரை பெற்றிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

யாரிடம் அறிவுரை பெறவேண்டும் என்று பார்த்த நேரத்தில், அவர் திருவள்ளுவரின் திருக்குறள் புத்த கத்தைப் புரட்டினார். அதில் ‘‘பெரியாரை துணைக் கோடல்’’ என்று இருந்தது.

எனவே, அந்தப் பெரியாரிடம் அறிவுரை போற்றி னார். ‘‘பெரியாரைப் பிழையாமை’’ என்று இருந்தது. அந்தப் பெரியாரிடம் அவர் அறிவுரை கேட்டார்.

அதை அப்படியே பின்பற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், அவரிடம் அறிவுரை கேட்டார்.

மானத்தை மீட்டவர்கள் யார்? 

உரிமைகளை மீட்டவர்கள் யார்?

அந்த இரண்டு பேரையும் நன்றாகப் படித்துப் புரிந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரை, தினசரி அவரிடம் கற்றுக்கொண்டு, உழைப்பினாலே போட்டி போடக் கூடிய அவரிடமும் அறிவுரை கேட்டார் - இவர்களைவிட வேறு எவரிடம் அறிவுரை கேட்கவேண்டும்? இவர்களை விட இந்த நாட்டிற்கு உழைத்தவர்கள் அறிவுரை சொல்லி, மானத்தை மீட்டவர்கள் யார்? உரிமைகளை மீட்டவர்கள் யார்? என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

எது அரசமைப்புச் சட்ட ரீதியாக இருக்கிறதோ, அதைத்தான் நாம் கேட்கிறோம்.

இங்கே மாண்புமிகு நீதியரசர் அவர்கள் சொன் னார்கள்; என்ன திட்டத்தோடு வந்திருக்கிறார் என்பதைப்பற்றி சொன்னார்கள்.

மற்றவர்களாக இருந்தால், 

ஆவேசப்பட்டு இருப்பார்கள்!

தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும்; ஆளுநர் நடந்துகொண்ட விதத்தைப்பற்றி ஓர் அறிக்கையைக் கொடுத்தார் நம்முடைய முதலமைச்சர். மற்றவர்களாக இருந்தால், ஆவேசப்பட்டு இருப்பார்கள்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் கோபாவேசத் தோடு குரல் எழுப்பிய நேரத்தில், அவர்களை அடக்கினார்; அடக்குவார். அது அவர் கற்றுக்கொண்ட பாணி.

இளைஞர்களாக இருக்கின்ற சில வழக்குரைஞர் நண்பர்களுக்கு நான் இதைச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்பதைக் காக்கக் கூடிய இயக்கம்!

40 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது, சட்டப்பேரவை நிகழ்வின்போது, பெருமதிப்பிற்குரிய, இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர் எச்.வி.ஹண்டே அவர்கள், நல்ல நண்பர் அவர்.

சட்டப்பேரவையில் அவர் பேசும்பொழுது, அவர் ஆங்கிலத்தில் சொன்னார்,

This is a third-rate Government - the DMK Government and your Leadership

என்று வேகமாக, எல்லோரும் ஆத்திரப்படும்படியாகச் சொன்னார்.

உடனடியாக தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆவேசமாக எழுந்தார்கள்.

முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார்?

அவர்கள் நன்றாக பாயட்டும் என்று விட்டுவிட்டாரா? என்றால், அதுதான் இல்லை.

காரணம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ப தைக் காக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கம். அண்ணாவிடம் பயின்றவர் அல்லவா!

கையை அசைத்து எல்லோரும் அமைதியாக அமருங்கள்; நான் பதில் சொல்கிறேன் என்று எழுந்தார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

மூன்றாந்தர அரசு அல்ல; நாலாந்தர அரசு என்றார் 

முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

‘‘மாண்புமிகு உறுப்பினர் ஹண்டே அவர்களே, நீங்கள் சொன்னீர்கள், எங்களுடைய அரசு, தி.மு.க. அரசு, மூன்றாந்தர அரசு என்று. இல்லை, இல்லை, மூன்றாந்தர அரசுகூட இல்லை இந்த அரசு. நாலாந்தர அரசு.

நாலாந்தர மக்களாக இருக்கின்ற சூத்திர மக்களுடைய உரிமைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இருக்கின்ற அரசு என்று தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் பதிவு செய்தவர் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

அவருடைய உழைப்பின் போட்டியாக இன்றைக்கு இருப்பவர்தான் 

திராவிட மாடலினுடைய முதலமைச்சர்

அவருடைய பிம்பமாக, அவருடைய வாரிசாக, அவருடைய உழைப்பின் போட்டியாக இன்றைக்கு இருப்பவர்தான் திராவிட மாடலினுடைய முதலமைச்சர் அவர்கள், அவர் வேறு யாருடைய அறிவுரையைக் கேட்கவேண்டும்?

ஆகவே, அந்த அடிப்படையில்தான் நான் சொல் லுகிறேன். 

ஆளுநர் என்பவர், அமைச்சரவை எழுதிக் கொடுப்பதைத்தான் படிக்கவேண்டும் என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

மிக அழகாக ஒன்றைச் சொன்னார் நம்முடைய மூத்த வழக்குரைஞர் விடுதலை அவர்கள். சட்ட ரீதியாகவும் சொன்னார்.

தி.மு.க.வைச் சார்ந்தவர்கள், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் - ஆகவே, இவர்கள் இப்படித்தான் பேசு வார்கள்; அல்லது நியாயப்படுத்துவார்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டிய அவசியமில்லை.

பொது நிலையில் இருந்து சொல்கிறோம்;  அரச மைப்புச் சட்டத்தை ஆதாரமாக வைத்துச் சொல் கின்றோம்.

‘இந்து’ ஆங்கில நாளிதழில் 

வெளிவந்த கட்டுரை

இதோ ஒரு கட்டுரை - இந்தக் கட்டுரை நான் எழுதிய கட்டுரை அல்ல. கடந்த 17 ஆம் தேதி ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. 

அந்தக் கட்டுரையை எழுதியவர் யார்?

தி.மு.க.வினுடைய தலைமைக் கழக உறுப்பினரா? அல்லது திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக வழக்குரைஞர் அணியைச் சேர்ந்தவரா? அல்ல.

அந்தக் கட்டுரையை எழுதியவர் P.D.T.Acharya, former Secretary General Lok Sabha 

மக்களவையின் மேனாள் செகரட்டரி ஜெனரல் - அவர்தான் முடிவுகளை எடுப்பார். சட்ட ரீதியாக இருக்கும் நிலைகளை சொல்லிக் கொடுப்பவர்.

அந்த P.D.T.Acharya அவர்கள் மிக அழகாக சொன்னதைத்தான் நம்முடைய சகோதரர் விடுதலை அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும்; அப்படி சட்டமன்றத்தைக் கூட்டும்பொழுது, ஆளுநர் ஒருமுறை பேசவேண்டும்; படிக்கவேண்டும். இது அரசமைப்புச் சட்டத்தின் கூறு.

நீங்கள் நீதிமன்றத்திற்குள் வாதாடுகிறவர்கள்; நான் 

வீதிமன்றத்தில் வாதாடுகின்றவன்

இங்கே என்னைவிட அதிகமாகத் தெரிந்த வர்கள் இருக்கிறார்கள். நான் உங்களைப் போன்ற ஒருவன். நீங்கள் நீதிமன்றத்திற்குள் வாதாடுகிற வர்கள். நான் வீதிமன்றத்தில் வாதாடுகின்றவன். இதுதான் நம்மைப் பிரிக்கக் கூடியது.

Article 176 of the Constitution requires the Governor to mandatorily address the Members of legislature at the commencement of the first session of each year and to inform them of the causes of its summons. Clause 2 says that the legislature will discuss the matters referred to in such an address. The “address” here means the complete address and not a truncated or garbled version. Therefore, what the Governor reads before the legislators is a complete address whose entire contents are to be mandatorily discussed by the legislators in the House.

ஆளுநர் உரை என்பது முழு உரை - அதை நீட்டலும் கூடாது; கழித்தலும் கூடாது!

எதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்களை ஆளுநர் அழைத்தார். எதற்காக அழைத்தார் என்கிற காரணங் களை விளக்கவேண்டும். இதை நாம் சொல்லவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 176 ஆவது பிரிவில் சொல்லப் பட்டு இருக்கிறது. ஆளுநர் உரை என்பது முழு உரை - அதை நீட்டலும் கூடாது; கழித்தலும் கூடாது. அவருடைய சொந்த சரக்கைக் கொண்டு வந்து சொல்வதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

ஆளுநர் பதவியிலிருந்து விலகி, சர்சங் சலக்கில், சனாதன பிரசங்கம் செய்யும்பொழுது எதை வேண்டு மானாலும் செய்யலாம்; அது அவருடைய உரிமை; அதை மறுப்பதற்கு நாம் இங்கே வரவில்லை.

அதேநேரத்தில், ஆளுநராக இருக்கக்கூடிய ஒருவர், அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒருவர் என்ன செய்யவேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் சொல்லுகிறது.

நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டாம்; குறைந்த பட்சம் ‘இந்து’ நாளிழில் வெளிவந்த கட்டுரையையாவது படிக்கவேண்டாமா?

அரசமைப்புச் சட்டத்தையே ஒழுங்காகப் படிக்காதவர், ஜி.யு.போப்பைப்பற்றி ஆராய்ச்சி செய்யலாமா?

அய்.பி.எஸ்.சாக இருந்தவர் அவர். அரசமைப்புச் சட்டத்தையே ஒழுங்காகப் படிக்காதவர், ஜி.யு.போப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாமா? அதெல்லாம் அறிஞர்கள் செய்யவேண்டிய வேலை; ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய வேலை.

முந்தைய தீர்ப்புகளை ஏன் நாம் மறுபடியும் மறுபடியும் படிக்கிறோம்?

சட்டம் என்பதைத் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும்; நேற்றுதான் அரசமைப்புச் சட்டத்தைப் படித்துவிட்டோமே, நேற்றுதான் அய்.பி.சி. (Indian Penal Code) படித்துவிட்டோமே என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் படிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் படிக்கும்பொழுது, நம்முடைய அறிவு எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ அவ்வளவு அறிவுத் தெளிவு வழக்குரைஞர்கள் வாதாடும்பொழுது ஏற்படும். நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை ஏன் நாம் மறுபடியும் மறுபடியும் படிக்கிறோம்? அதுதானே அடிப்படை.

அந்த ஆளுநர் உரையை தயாரித்தது யார்? ஆளுநரா? ராஜ்பவனில் தயாரித்ததா அந்த உரை?

அதற்காகவே அமைச்சரவை கூடுகிறது ஒரு நாள். ஆளுநர் உரையில் என்னென்ன இடம்பெறவேண்டும் என்று அமைச்சரவை விவாதிக்கிறது. அப்படி விவாதித்த பிறகு, ஆளுநர் உரை தயாரிக்கப்படுகிறது. அந்த உரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்புகிறார்கள்.

இந்த உரையை நீங்கள் படிக்கவேண்டும்; இது கொள்கை அறிக்கை என்று ஆளுநருக்கு அனுப்பு கிறார்கள்.

சில வாசகங்களோ, மாற்றுக் கருத்தோ ஆளுநருக்கு இருக்குமேயானால்...

அதில், சில வாசகங்களோ, மாற்றுக் கருத்தோ ஆளுநருக்கு இருக்குமேயானால், மனிதநேயத்தோடு, உரிமையோடு அவர் சிலவற்றை மாற்றும்படி கேட்டால், அதற்கும் இவர்கள் இடம் கொடுக்கிறார்கள்.

‘‘இல்லை, இல்லை, அதை மாற்ற முடியாது; நாங்கள் எழுதியதைத்தான் நீங்கள் படிக்கவேண்டும்; இது மனுதர்ம சாஸ்திரம் போன்றது; இதை யாரும் மாற்ற முடியாது; இது சனாதன சாஸ்திரம் போன்றது - மாறவே மாறாது’’ என்று சொல்லமாட்டார்கள்.

சரி, இது உங்களுடைய கருத்தா? மாற்றிக் கொள்ள லாம் என்று எந்த அளவிற்கு அவர்கள் சொன்னார்களே, அதை மாற்றி, திருத்தி, என்னென்ன செய்யவேண்டுமோ, அதை செய்திருக்கிறார்கள்.

அதை மாற்றித்தான் தீரவேண்டும் என்கிற அவசியம் அரசுக்கு இல்லை.

அப்படி அரசு தயாரித்த உரையை, சட்டப்பேரவையில் ஆளுநர் முழுவதையும் படித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு ஆளுநர், மிக நாசூக்காகக் கையாண்டிருக்கிறார்.

தலைசிறந்த ராஜதந்திரம் வேறு இருக்கவே முடியாது; அவையின் மாண்பைக் காப்பாற்றி இருக்கிறார்!

நம்முடைய முதலமைச்சர் அதை லாவகமாகக் கையாண்ட முறை என்பது இருக்கிறதே, அதை விட  தலைசிறந்த ராஜதந்திரம் வேறு இருக்கவே முடியாது. அவையின் மாண்பைக் காப்பாற்றி இருக்கிறார்.

அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு, அவையையே நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படாதவாறு தடுத்து; ஆவேசங்களையெல்லாம் தடுத்து, கொதிநிலைகளையெல்லாம் மாற்றி, நடுநிலையில் நின்றிருக்கிறார்.

நம்முடைய முதலமைச்சர் மிகவும் பொறுமை சாலி. அவர் எப்பொழுதுமே ‘‘பொறுத்தவர் பூமி ஆள்வர்’’ என்று சொல்வதுபோன்று, நடந்து கொண்டு இருக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றி ருக்கிறார்.

ஆத்திரப்பட்டு அவையிலிருந்து 

வெளியேறியது ஏன்?

ஆளுநர் உரையில் மாற்றம் செய்வதற்கு ஆளு நருக்கு உரிமையில்லை. அப்படி அவர் அந்த உரையில் மாற்றம் செய்த பிறகு, அதை நாசூக்காக சுட்டிக் காட்டியதோடு, நிலைமைகளை சுமூகமாக கையாண்ட பிறகு, ஆளுநர் அவர்கள் ஆத்திரப்பட்டு அவையிலிருந்து வெளியேறியது ஏன்?

அதற்குப் பிறகுதான், அதுகுறித்து விவாதம் நடைபெற்றது.

ஆளுநர் உரைக்குப் பதில் யார் சொல்லவேண்டும்?

முதலமைச்சர்தான் பதில் சொல்லவேண்டும்.

நாடாளுமன்றத்தில், பிரதமரோ, அமைச்சரோ பதில் சொல்கிறார்கள்.

அப்படியென்றால், அதனுடைய அடிப்படை என்ன?

ஆளுநர் உரை என்பது, அவருடைய தனிப்பட்ட உரை அல்ல. அரசாங்கம் தயாரித்த, அமைச்சரவை தயாரித்த உரை என்பதுதானே அதற்கு அடையாளம்.

ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல; ஆளுநர் பதவி என்பதே நியமனப் பதவியாகும்.

மக்களுடைய நலனுக்காக 

சட்டத் திருத்தங்கள் வருகின்றன!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி - அந்த மக்களுடைய நலனுக்காக சட்டத் திருத்தங் கள் வருகின்றன; புதிய சட்டங்கள் நிறை வேற்றப்படுகின்றன. தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றைத்தான், நடைமுறையில், செயலாக் கத்திற்குக் கொண்டு வருவதற்காக ஓர் அரசாங்கம் செய்கிறது.

அப்படியென்றால், ஆளுநருடைய பணி என்ன?

மறுபடியும் அரசமைப்புச் சட்டத்திற்குச் செல்வோம்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 163 ஆம் பிரிவைப்பற்றி சொன்னார்கள். 200 பிரிவுகள் வரை இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஒருமனதாக நிறை வேற்றி, ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை 

ஆளுநர் என்ன செய்யவேண்டும்?

அப்படி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் என்ன செய்யவேண்டும்? ஒன்று, திருப்பி அனுப்பலாம்; அல்லது அதுகுறித்து விளக்கம் கேட்கலாம்; அல்லது மாற்றங்கள் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்கலாம். இந்த மசோதாவை நான் இன்னின்ன காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லலாம்.

ராஜ்பவன் ஊறுகாய் ஜாடி இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது!

அப்படியில்லாமல், நாங்கள் பெரிய ஊறுகாய் ஜாடி வைத்திருக்கின்றோம்; அதில் எல்லாவற்றையும் ஊறப் போடுவோம் என்று சொன்னால், ராஜ்பவன் ஊறுகாய் ஜாடி இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவே தெரியாது.

நீங்கள் யார்?

மக்களாகிய நாங்கள் உங்களைப் பார்த்து கேள்வி கேட்க உரிமை உண்டு.

ஆளுங்கட்சியினர் கேட்கிறார்களே, அமைச்சரவை கேட்கிறதே என்பது அப்பாற்பட்டது.

மக்களாகிய நாங்கள் கேட்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் அரசு ஊழியர்; சம்பளம் வாங்கக்கூடிய ஒருவர். உங்களைக் கேள்வி கேட்பதற்கு மக்களாகிய எங்களுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா?

மக்களுடைய நலன் சார்ந்த விஷயங்கள் - உயிர் சார்ந்த விஷயங்கள்.

ஆளுநர் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்ன?

மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்!

குடியரசுத் தலைவரிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவர் வரை பதவிப் பிரமாணத்தின்போது உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்களே, அவரவர் விருப்பம் போல் எழுதிக் கொண்டு வந்து படிப்பதல்ல. அந்த உறுதிமொழி என்பது வரையறுக்கப்பட்டு இருப்பது.  அப்படி வரையறுக்கப்பட்ட உறுதிமொழியினை, சட்டத் துறையில் இருக்கக்கூடிய நம்முடைய வழக்குரைஞர் சகோதரர்கள் அருள்கூர்ந்து மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

அமைச்சர்கள் பதவியேற்கும்பொழுது எடுக்கின்ற உறுதிமொழி,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும்பொழுது எடுக்கின்ற உறுதிமொழி,

அதேபோல, மற்ற மற்ற பதவிகளுக்காக எடுக்கின்ற உறுதிமொழியைவிட, ஆளுநர் பதவியேற்கும்பொழுது எடுக்கும் உறுதிமொழி என்பது வித்தியாசமானது.

அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு

அரசமைப்புச் சட்டத்தில் 159 என்ற பிரிவின்படி 

Oath or affirmation by Governor 

Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that court available, an oath or affirmation in the following form, that is to say swear in the name of God I, A B, do that I solemnly affirm will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well being of the people of (name of the State)

இந்தப் பகுதி, மற்ற பதவிப் பிரமாணத்தின்போது எடுக்கப்படும் உறுதிமொழி போன்றதல்ல.

நீதியரசர் சந்துரு ஒப்புக்கொண்டிருக்கிறார்!

இதை நீதியரசர் ஒப்புக்கொண்டிருக்கிறார்; அது போதும் எனக்கு. நாங்கள் பொதுவாக சட்டம் படிக்கின்றவர்கள். நீங்கள் உங்களுடைய பணிக்காகவே அதைப் படிக்கின்றவர்கள்.

இங்கே இரண்டு நீதியரசர்கள் இருக்கிறார்கள்; அவர் சட்டத் துறையில், ஒன்றிய அரசாங்கத்தில் இருந்தவர். இதைவிட ஓர் அறிவார்ந்த அவை எனக்குக் கிடைக்காது. 

ஆகவே, இவர்களுடைய ஒப்புதல் என்பது வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே சட்டத் துறையும் இருக்கிறது, நாடாளுமன்றத் துறையும் இருக்கிறது.

மிக முக்கியமாக நீங்கள் கவனிக்கவேண்டியது, 

I will devote myself to the service and well being of the people of (name of the State)

மக்கள் நலனுக்காக என்று சொல்லும்பொழுது, இத்தனை மசோதாக்களை ஊறுகாய் ஜாடியில் போடுவது மக்கள் நலனா?

ஏன் நாங்கள் ஆத்திரப்படுகிறோம்?

அதைவிடக் கொடுமை ரத்தம் கொதிக்கக் கூடிய ஒரு கொடுமை நண்பர்களே - ஏன் நாங்கள் ஆத்திரப் படுகிறோம் என்றால், வெறும் பதவிக்காக அல்ல!

இந்த இயக்கம் தொடங்கப்பட்டது பதவிக்காக அல்ல; பதவிக்கு வருவோம் என்று நினைத்து அல்ல - மக் களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகத் தான் - நீதி கேட்டு தொடங்கப்பட்ட இயக்கம் திராவிடர் இயக்கம்.

அதன் காரணமாகத்தான் நாங்கள் சொல்கிறோம் - 

ஆன்-லைன் சூதாட்டம் குறித்து, முன்பு இருந்த அரசு, வேக வேகமாக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அது செல்லாது என்று உச்சநீதிமன்றம் சொல்லிற்று. ஏனென்றால், அந்த மசோதாவில் சந்து பொந்துகள் இருந்த காரணத்தினால்.

முதலமைச்சரின் 

அறிவுத் திறனைக் காட்டுகிறது - ஆளுமைத் திறனைக் காட்டுகிறது!

அதே தவறு நம்முடைய சட்டத்திற்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, எச்சரிக்கையோடு சட்டம் செய்தார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதுதான் அவருடைய அறிவுத் திறனைக் காட்டுகிறது - ஆளுமைத் திறனைக் காட்டுகிறது.

நீதியரசர் சந்துரு தலைமையில் 

குழு அமைத்தார் முதலமைச்சர்!

சட்டத் துறை செயலாளர் போன்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்; அவர்கள் அந்த சட்டம் இயற்றுவதற்கு உறுதுணையாக இருக்கலாம். ஆனாலும்கூட, பழைய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஏற்பட்ட நிலை, நம்முடைய சட்டத்திற்கு ஏற்படக் கூடாது; உயிர்கள் காப்பாற்றப்படவேண்டும்; எந்த இடத்திலும் ஓட்டை, உடைசல் இல்லாமல் அந்த சட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீதியரசர் போன்றவர் களை அழைத்து, ஒரு குழு அமைத்து - இரண்டு மாதம் காலம் அவகாசம் கொடுத்தார்கள்.

நீதியரசர் தலைமையில் அந்தக் குழு ஆராய்ந்து, ஓர் அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்தது.

அந்தக் குழு கொடுத்த அறிக்கையின்படி, சட்டப் பேரவையில்  ஆன்-லைன் சூதாட்ட தடை சட்டத்தைக் கொண்டு வந்து, ஒருமனதாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

ஆன்-லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி கொடுத்தார். அந்த அவசர சட்டம் காலாவதியாகும் என்பதும் தெரியும். அதற்காக அவசர அவசரமாக ஆன்-லைன் சூதாட்டத் தடைக்கு ஒரு சட்டத்தைத் தயாரித்து, அனுப்பினார்கள்.

உறுதிமொழியை மீறி இருக்கிறீர்களா?

இன்றுவரையில் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை. மக்களுடைய பொதுநலனைக் காப்போம் என்று பதவிப் பிரமாணத்தின்போது உறுதிமொழி எடுத் தீர்களே, அந்த உறுதிமொழியை மீறி இருக்கிறீர்களா? அதன்படி நடந்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா?

மக்களாகிய நாங்கள் அதைக் கேட்கிறோம். இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை, வாக்கு இல்லை, அரசியல் இல்லை - இது உயிர்ப் பிரச்சினை - எங்கள் குடிமக்களின் உயிர்ப் பிரச்சினை.

பலகீனத்திற்கு ஆளாகும்பொழுது சூதாடுகிறார்கள். அதனால், தற்கொலைகள்  நடைபெறுகின்றனவே. அந்தத் தற்கொலைகளைத் தடுப்பது உங்கள் வேலை யல்லவா - நீங்கள் எடுத்த உறுதிமொழிப்படி. நீங்கள் மனிதாபிமானத்தோடு இருக்கிறீர்களா? இல்லையா? என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.

அந்தப் பதவியில் இருக்கின்ற காரணத்தினால், நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும்? அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கவேண்டும் அல்லவா!

மாறாக, திருத்தங்கள் கேட்டீர்கள். அதையும் சட்ட அமைச்சரும், மற்றவர்களும் செய்துகொடுத்திருக் கிறார்கள்.

அதற்குப் பிறகும் ஏன் அந்த சட்டம் ஊறுகாய் ஜாடியில் ஊறுகிறது?

சூதாட்டக் கம்பெனிக்காரர்களை 

ஓர் ஆளுநர் சந்திக்கலாமா?

அதுமட்டுமல்ல, இன்னொரு செய்தி, நீதிக்குப் புறம்பான ஒரு செய்தி என்னவென்றால், சூதாட்டக் கம் பெனிக்காரர்களை ஓர் ஆளுநர் சந்திக்கலாமா?

நீதியரசர் சந்துரு அவர்கள், வழக்குரைஞராக இருந்த காலத்தில், இஸ்மாயில் ஆணையத்தில் வாதாடினார். அந்த வழக்கு அவரிடம் இருந்தபொழுது, அவரை நாங்கள் போய் சந்தித்தால், அது நியாயமாக இருக்குமா? அல்லது அவர்தான் சந்திப்பாரா? அவர்தான் அதற்கு சம்மதிப்பாரா?

நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது, அந்த நீதிபதியை, சம்பந்தப்பட்டவர்கள் போய் சந்தித்தார்கள் என்றால், ஊடகங்கள் விடுமா? ஊர் விடுமா? நியாயமா? இதுதான் மக்கள் நலனா?

ஆகவே, எதற்காக ஆன்-லைன் சூதாட்டக் கம்பெனிக்காரர்களை ஆளுநர் சந்திக்கவேண்டும்?

சட்டத்தை அவர்கள் தங்கள் இஷ்டம்போல் வளைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கிறது? சட்டத்தை அவர்கள் தங்கள் இஷ்டம்போல் வளைக்க லாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறவர்கள் என்றுதானே அதற்குப் பொருள்.

அவருக்கு தன்னிச்சையான அதிகாரம் - அவாள் மொழியில் சொல்லவேண்டுமானால், யுக்தானுச்சாரம்.

ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு கால அவகாசம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆம், உண்டு. ஆளுநர் எவ்வளவு கால அவகாசம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு நீதிமன்றத் தீர்ப்புகள் சரியாக இருக்கின்றன.

ஒரு மசோதாவை எவ்வளவு காலத்திற்கு வேண்டு மானாலும் கிடப்பில் போடலாம் என்பதற்கு ஆளுநருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்பதுதான் அந்தத் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. 

ஆளுநரே, பதவியில் இருக்க உங்களுக்கு அறவழிப்பட்ட 

ஆதரவு உண்டா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் திற்கு, ஆளுநர் இடையூறை ஏற்படுத்துகிறார். தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதுமில்லாமல், அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு வழிகாட்டக் கூடிய தலை வர்களாக இருக்கிறார்களே, அந்தத் தலைவர்கள் சமூகத்தைப் புரட்டிப் போட்டு, புரட்சி செய்த தலைவர்கள். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களையெல்லாம் விட்டுவிட்டு, அவர்களின் பெயர்களைச் சொல் வதற்கு எனக்கு மனம் இல்லை என்று சொல்கிறாரே ஓர் ஆளுநர் - அவருக்கு மனமில்லாமல் இருக்க லாம், ஆனால், நீங்கள் இந்தப் பதவியில் இருக்க உங்களுக்கு அறவழிப்பட்ட ஆதரவு உண்டா?

இந்தக் கேள்வியை நாங்கள் கேட்கவில்லை; நியாயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள்.

அந்தப் பெயர்களை விட்டுவிட்டுப் படிப்பதைக்கூட, ஒரு வரி படிப்பதற்குப் பதில், இன்னொரு வரியைப் படித்துவிட்டார்; அவருக்கு வயதாகிவிட்டது என்று காரணம் சொல்லி, சமாதானம் சொல்ல முடியுமா?

நாள்தோறும் ஒவ்வொரு பிரச்சினையைக் கொண்டு வருகிறார் தமிழ்நாடு ஆளுநர்!

நாள்தோறும் ஒவ்வொரு பிரச்சினையைக் கொண்டு வருகிறார் தமிழ்நாடு ஆளுநர். ஆரியம், சனாதனம், திராவிடம் எப்படிப்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்டது? ஜி.யு.போப் என்ன எழுதினார்? இப்படி வரிசையாக.

ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் முக்கியமல்ல; என்னென்ன பிரச்சினைகளை ஆளுநர் கிளப்புகிறாரோ, அவற்றையெல்லாம் நம்முடைய மாண்புமிகு நீதியரசர் இங்கே சொன்னார்.

ஆரியம், திராவிடம்; திராவிட மாடல் ஆளுநருக்கு ஒப்புதல் இல்லை. பெரியார் அவருக்கு ஒப்புதல் இல்லை; திருக்குறள் என்று சொன்னால், அதிலிருந்துதான் ஆன் மிகம் வந்தது என்று சொல்கிறார்.

சனாதன தர்மத்தைத் 

தூக்கிப் பிடிக்கவேண்டுமாம்!

இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். குருநாதரான கோல் வால்கர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Bunch of Thoughts’  நூல், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஞானகங்கை’ என்ற நூலில்,  மாகாணங்களே இருக்கக் கூடாது; மாகா ணங்கள் உரிமை என்பது விஷ வித்துகள்; ஜாதியைப் பழிக்கக் கூடாது; வருணாசிரம தர்மப்படிதான் இருக்க வேண்டும். சனாதன தர்மத்தை நாம் தூக்கிப் பிடிக்க வேண்டும்.’’

இவை அத்தனையும் அந்த நூலில் இருக்கிறது; அதைத்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.

இது பெரியார் மண் - அதற்கு இங்கே இடம் கிடையாது; 

ஒருபோதும் இடம் கிடையாது!

எனவே, ‘‘நாங்கள் இங்கே வந்து, உங்கள் சம் பளத்தை வாங்கிக் கொண்டு, நீங்கள் கொடுத்த இடத் தையே நாங்கள் வசிக்கக் கூடிய இடமாக மாற்றிக் கொண்டு, நாங்கள் வந்தேறிகளாக இருந்தாலும், உங்கள் இடத்தைப் பிடித்துக்கொண்டு, உங்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டே நாங்கள் எங்கள் வேலையைக் காட்டுவோம்’’ என்று சொன் னால், ஆளுநரே, இது பெரியார் மண் - அதற்கு இங்கே இடம் கிடையாது; ஒருபோதும் இடம் கிடையாது என்று நாங்கள் சொல்லவில்லை; அரச மைப்புச் சட்டம் சொல்லுகிறது; நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்த அரசமைப்புச் சட்டம் சொல்லு கிறது; மக்கள் சொல்கிறார்கள்.

மக்கள் திரண்டு உங்களை அனுப்புவார்கள்!

எனவேதான், நீங்கள் இங்கே குறுக்குசால் ஒட்டி, ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய இன்னொரு கிளைப் பகுதியாக இந்த நாட்டை நீங்கள் நடத்தலாம் என்று சொன்னால், இது பெரியார் மண் - இது சுயமரியாதை மண் - இது தமிழ் மண் - இது ஸ்டாலின் ஆளுகிற மண் - திராவிட மாடல் ஆட்சி ஆளுகின்ற மண் - இந்த மண்ணிலே நியாயவாதிகளும் சரி, இந்த மண்ணிலே அரசியல்வாதி களும் சரி - எல்லோரும் தத்துவ ரீதியாக இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, இனிமேலாவது நீங்கள் அரசமைப்புச் சட்டத்தை ஒழுங்காகப் படியுங்கள்; சரியாக அதைப் பின்பற்றுங்கள்! இல்லையானால், நீங்கள் எங்கே செல்லவேண்டுமோ அங்கு செல்வீர்கள். அப்படி செல்லாவிட்டால், மக்கள் திரண்டு உங்களை அனுப்புவார்கள் என்பதை எடுத்துச் சொல்கிறோம்.

இந்த அரங்கத்தில், நம்முடைய வழக்குரைஞர்கள் கூடி, முடிவெடுத்து, நாட்டிற்கு வழிகாட்டவேண்டும், அதுதான் மிகவும் முக்கியம்.

அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் வரவேண்டும்; தனியார் தீர்மானம் கொடுத்து, அந்தத் தீர்மானத்தை வெற்றிகரமாக ஆக்கிய திருச்சி சிவா இங்கே இருக்கிறார், அவரைப் பாராட்டுகிறோம்.

ஆளுநரை வெளியேற்றுங்கள் என்று சட்டப்பூர்வமாக செய்வதற்கு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வரவேண்டும்

குடியரசுத் தலைவர் தவறு செய்தால், இம்பீச் மெண்ட் கொண்டு வருகிறார்கள் அல்லவா! அது போன்று மாநில ஆளுநர் இதுபோன்று குறுக்குசால் ஓட்டினால், போட்டி அரசாங்கம் நடத்தினால், ஆளுநரை வெளியேற்றுங்கள் என்று சட்டப்பூர்வ மாக செய்வதற்கு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வரவேண்டும் என்பதை நான் முன்மொழி கிறேன் முதலில்; நீங்கள் கைதட்டி வழிமொழி யுங்கள்!

சட்டப்படி அதை செய்யவேண்டும். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிற. ஆளுநர் ஒருவர், அரசாங்கத்தினுடைய கொள்கைகளுக்கு நேர் விரோதமாக நடந்துகொள்கிறார் என்றால், அப்படிப்பட்ட நிலை நம் மாநிலத்திற்கு மட்டுமல்ல; வேறு எந்த மாநிலத் திற்கும் வரக்கூடாது; எப்போதும் வரக்கூடாது என்பதற் காகத் தகுந்த பாதுகாப்பிற்காக, அரசமைப்புச் சட்டத் திருத்தம் வரவேண்டும்.

‘நம்மால் முடியுமா?’ என்று 

நினைக்காதீர்கள்!

நம்மால் முடியுமா? நமக்குப் பெரும்பான்மை இருக் கிறதா? என்று நினைக்காதீர்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை, அனுமதிக்கமாட்டோம் என்று சொல்லி, அவரை மனக்கஷ்டத்திற்கு உள்ளாக்கினர். அவர் பதவியிலிருந்து விலகியதற்கு அதுதான் காரணம்.

1929 இல் பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியவர் தந்தை பெரியார் - செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில். அப்பொழுது கலைஞர் 5 வயது குழந்தை.

மனக்குறையோடு தனது பதவியைத் துறந்தார் அண்ணல் அம்பேத்கர்!

அப்படிப்பட்டவர் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார். அவருடைய காலத்தில், டாக்டர் பாபா சாகேப் அவர்கள், எந்தக் காரணத்திற்காக தன்னுடைய பதவியைத் துறந்தாரோ, மனக்குறையோடு வெளியேறினாரோ, அந்த மனக்குறையை போக்கக் கூடிய அளவிற்கு, யு.பி.ஏ. என்ற கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்து, மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபொழுது, திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்தபொழுது, பெண்களுக்கு சொத்துரிமை என்ற சட்டத்தை நிறை வேற்றி இருக்கின்றோம் என்பது வரலாறு.

திராவிட இயக்கத்தினுடைய இன்றைய தீர்மானம், நாளைய - வருங்கால அரசின் சட்டத் திட்டங்கள்!

ஆகவே, நாம் இன்றைக்கு சொல்வது நடக்குமா? என்பதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; திராவிட இயக்கத்தினுடைய இன்றைய தீர்மானம், நாளைய - வருங்கால அரசின் சட்டத் திட்டங்கள் என்பதுதான் வரலாறு.

எனவே, அந்த வரலாறு தொடரட்டும்! தொடரட்டும் என்று சொல்லி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி சொல்லி, விடைபெறுகிறேன்!

வாழ்க தமிழ்நாடு!

வாழ்க பெரியார்!

வாழ்க தமிழ்நாடு!

வாழ்க தமிழ்நாடு!

வாழ்க தமிழ்நாடு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment