பார்ப்பன நஞ்சுக் கொடுக்கு ரங்கராஜின் ஜாதிய வன்மம் - பாணன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

பார்ப்பன நஞ்சுக் கொடுக்கு ரங்கராஜின் ஜாதிய வன்மம் - பாணன்

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பார்ப்பனச்சங்க மாநாட்டில் தன்னை ஊடகவியலாளர் என்று கூறிக்கொள்ளும் ரங்கராஜ் பேசுகையில்,

தமிழ்நாட்டில் அய்யர், அய்யங்கார் என்று கூறுவதற்கு பயப்படுகிறார்கள்.  நான் எவ்வளவு துணிச்சலாகப் பாண்டே என்று பெயர்வைத்து கம்பீரமாக நிற்கிறேன் - என்று கூறியுள்ளார்.

பார்ப்பனர்களின் குலத்தொழில் ஆசிரியர் மற்றும் வாதம் செய்யும் வக்கீல் தொழிலாம், பார்ப்பான் பார்ப்பான் என்று கத்தினாலும் ஆடிட்டிங் என்றால் நம்மிடம் தான் வருவார்கள் - வரவேண்டும் என்கிறார்.

அடுத்தவர்களுக்கு நல்லவற்றைச் சொல்லுவது ஊடகத்தின் பணி  - அதனால் அங்கே பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள் பார்ப்பனர்கள் மீண்டும் எழுச்சியோடு பழைய வாஞ்சிநாதனாக மாறவேண்டிய சூழல் இந்த 20 மாத ஆட்சிக்கால தி.மு.கவில் தான் வந்ததாம்.

பாஜக, அதிமுக வந்தால் நமக்கு என்ன பிரச்சினை? ‘எல்லாம் அவா பார்த்துப்பா’ என்று வாளாவிருந்துவிடுவார்களாம். இன்னும் மூன்றரை ஆண்டுகள் உள்ளதாம். ஆனால் பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்களாம்? இது ஏதோ கலிகாலம் என்று கூறி அமைதியாகிவிடுகிறார்களாம்

சேட்டு என்றால் அவர் இவர்;  தமிழ்நாட்டு சலவைத் தொழிலாளி என்றால் அவன் இவன்

அவரது பேச்சின் ஊடாக - சிவகாசியில் ஒரு மார்வாடி பாண்டேயின் அப்பாவிடம் தொழில் தொடங்கும் முன்பு பூஜை போட்டாராம். வெறும் 700 ரூபாயில் தொழில் துவங்கிய அந்த மார்வாடி இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார் என்று மார்வாடி பற்றி கூறும் போதெல்லாம் அவர் இவர் என்று கூறிக்கொண்டே சென்றவர்.

அப்படியே ஒரு சலவைத் தொழிலாளியும் எனது அப்பாவிடம் வந்து தொழில் தொடங்க பூஜை போடக் கேட்டான், அவனுக்கு உடனடியாக எனது அப்பா பூஜை செய்து தொழில் தொடங்கிவைத்தார். இன்று அந்த வண்ணான் 4 கிளை கடைகளோடு லட்சாதிபதியாக இருக்கிறான் என்று ஒருமையில் கூறினார்.

அய்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு பிள்ளையை படிக்க வைத்து உத்தியோகத்திற்கு அனுப்பு, ஒரு பிள்ளையை கோவிலுக்கு கொடு, ஒரு பிள்ளையை வாத்தியாராக பூஜை, யாகம் உள்ளிட்ட கைங்கரியம் செய்யும் வேலை, ஒரு பிள்ளையை வேதபாடசாலைக்கு அனுப்பி வை என்று அறிவுரை கூறுகிறார்.

தேர்தல் பற்றிக்கூறும் போது

காமராஜருக்கு பெரியார் ஆதரவு தெரிவித்தார்; அவர் தோற்றுப் போனார்.  ஆனால் அண்ணாவிற்கு ராஜகோபாலாச்சாரியார் என்னும் அவர்கள் கூறும் பார்ப்பனர் ஆதரவு தெரிவித்தார் - பெரும் வெற்றி பெற்றார். நான் பூணூலை பிடித்துக்கொண்டு கேட்கிறேன். அண்ணாத்துரைக்கு வாக்களியுங்கள் என்று ராஜாஜி கூறினார். எல்லா வெற்றிக்குப் பின்னாலும் பார்ப்பனர் உள்ளனர் என்று பெருமைகொள்ளும் ரங்கராஜ்க்கு ‘காகம் உட்கார, பனம் பழம் விழுந்த கதை’ தெரியுமா? ராஜாஜி ஆதரவால்தான் தி.மு.க. வென்றது என்ற ‘கதை’யைக் கேட்டால் ராஜாஜியே வெட்கப்படுவாரே!

ராஜாஜியால் என்றுமே தேர்தலில் நின்று வெல்ல முடிந்ததில்லை என்ற வரலாறு தெரியுமா?

கலைஞரின் அடையாளம் தெரியுமா ரங்கராஜே!

இவை அனைத்தையும் விட தனது தந்தையின் மறைவிற்கு ஓடிவந்து ஆறுதல் கூறிய முதலமைச்சரை மனம் நோகச் செய்யும் வகையில் கலைஞர் குறித்து மிகவும் மோசமான கண்ணோட்டத்தில்  ஒரு நச்சுக் கருத்தைக் கூறி தனது நாவில் இருப்பது நச்சுதான் - அது என்றும் மாறாது என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். நான்கு தலைமுறையாக கோவிலில் நாயனம் வாசித்த புண்ணியம்தான். (அதாவது கலைஞரின் தாத்தா கோவிலில் நாயனம் வாசித்தாராம்.) அதனால் இன்று அவரது குடும்பமே ராஜாவாக நிற்கிறதாம்.

இப்போது கலைஞர் என்றதும் அவரது குலத்தொழில், அவரது தாத்தா செய்த தொழில் பாண்டேவிற்கு நினைவிற்கு வருகிறதா? 

ஒருவரின் திறமை என்ன, சாதனை என்ன என்று பார்ப்பதைவிட அவரது ஜாதி என்ன என்று பார்க்கும் மனுதர்ம புத்திதானே இது! 

கலைஞரின் அடையாளம் எதுவென்று தெரியுமா?  தமிழ்நாட்டிற்கு அவர் என்ன செய்தார் எனத் தெரியாத நீ வேற்றுக் கோளிலிருந்து வந்த ஏலியனா? 

பெண்களுக்கு அவர் செய்தது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்து. நவீன தமிழ்நாட்டை உருவாக்குவதில் அவர் பங்கு, தொழிற்துறை வளர்ச்சியில் அவரது பங்கு? இன்று இந்தியாவிலேயே உயர்கல்வி அதிகம் படிக்கும் மாநிலம் என்ற பெயர் பெற்றுள்ளது தமிழ்நாடு. இதை சாதித்துக் காட்டியவர் கலைஞர். அவரது உறுதியான கட்டமைப்பில் தான் இன்று தமிழ்நாடு கம்பீரமாக நிற்கிறது. இவைதானே கலைஞர். இதுதான் அவரது அடையாளம்.

அன்று ரங்கராஜைப் போன்றே ஒரு ஜாதி வெறியர் கலைஞருக்கு பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டேன்; பள்ளியில் சேர்க்க மாட்டேன் என்றார். ஆனால், கலைஞரோ எனக்கு பாடம் சொல்லிக்கொடு. இல்லை என்றால் குளத்தில் விழுந்துசெத்துப்போவேன் என்று கல்வியைப் பெற உறுதியாக நின்றார். நீயும் நானும் சமம் என்று அந்த பார்ப்பன ஆசிரியருக்கு உறுதியாகச் சொல்லிக்காட்டினார். கலைஞர் பெரியாரின் மாணவர். அண்ணாவின் தம்பி. இன்று ஆளுநரே அரண்டுபோய் தமிழ்நாடு விவகாரத்தில் நா குளறுகிறாரே... அந்த அச்சத்தை இன்றும் தமிழ்நாட்டின் எதிரிகளின் உள்ளத்தில் விதைத்துச்சென்ற அறிஞர் அண்ணாவின் தம்பி கலைஞர்... அதுதான் கலைஞரின் அடையாளம்.

கடவுளின் அருளால் கலைஞர் குடும்பம் இன்று கம்பீரமாக உள்ளது என்று கூறும் அரைவேக்காட்டு ரங்கராஜ், கலைஞரை ‘நாத்திகர்’ என்று தன்னுடைய தொலைக்காட்சி பேச்சில் எத்தனை முறை கூறியுள்ளார்.

கலைஞரின் ஆற்றலுக்கு எல்லை வகுக்க முடியுமா, தான் காலடி வைத்த அத்தனை துறையிலும் அவர் வெற்றி மகுடம் சூடிக் காட்டினாரே....

இது எல்லாம் பெரியாரிடம் படித்த பாடம், அண்ணாவிடம் கற்ற அறிவாற்றல். 

திரைத்துறை, நாடகம், மேடைப்பேச்சு, அரசியல், நிர்வாகம் என அனைத்திலும் சிறப்புற்று தமிழ்நாட்டையும் வளம் பெறச் செய்தாரே கலைஞர். இதுதானே அவரது அடையாளம்.

அவரை ஜாதியப் பார்வையோடு அடையாளப்படுத்தும் திமிர்த்தனம்தானே ரங்கராஜின் தோளில் பூணூலாகத் தொங்குகிறது. அதுதானே சனாதனமாக இன்றும் சமூகத்தில் நிலவுகிறது. இத்தனை போராட்டத்துக்குப் பிறகும், மதத்தை, கடவுளை முன்னிறுத்திக் கொண்டு பின் பக்கத்தில் ஒளிந்துகொண்டு முன்னேறுகிறதே! அதை ஒழிக்காமல் சமூகம் முன்னேறுமா? இந்த திமிர்த்தனம் ஒழியுமா? இன்னும் ரங்கராஜின் ‘நடுநிலை’யை நம்பும் ஏமாளித் தமிழர்கள் உணர்வார்களா?

No comments:

Post a Comment