ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 :  முதலில் தடகளம், தற்போது குத்துச்சண்டை வீராங்கனைகள் - டில்லியில் தொடர்போராட்டம். ஒன்றிய அரசின் விளையாட்டு ஆணையங்களில் பாலியல் புகார்கள் தொடர்கதையாகி உள்ளதே?

- விவேகா, ஓசூர்

பதில் 1 : அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவரும் இந்த கொடிய தொற்று நோயைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக்குவதோடு, உடனடியாக செயல்படுத்தி குற்றவாளிகள் வெளியே வரமுடியாத தண்டனையாக்கி அத்தகைய பேர்வழிகளை கூண்டு அமைத்து ஊர்ப் பொதுவில் காட்சிப் பொருளாக்கும் புதுவித தண்டனை பற்றி யோசிக்க வேண்டும் அரசுகள்!

                                                                        ---

கேள்வி 2 : குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. ஆவணப்படத்தை  “India: The Modi Question” மதிப்பிழந்த கதை என்று கூறி தடை செய்துள்ளதே ஒன்றிய அரசு? 

- மேகநாதன், திருத்தணி

பதில் 2 : பி.பி.சி.க்கும் நமது ஆழ்ந்த இரங்கல்! ‘உண்மைகளைச் சொல்வது உங்கள் வேலையாகும், ஏற்பது எங்களால் முடியாததாகுமே’ என்ற பாணியில் செயல்களோ!

                                                                                ---

கேள்வி 3 : மீண்டும் மூன்றாவது அணியில் இடதுசாரிகள் இணைந்துள்ளனரே?

- அன்பரசன், தஞ்சாவூர் 

பதில் 3 : மூன்றாவது அணி என்பதே பா.ஜ.க.வுக்கு மறைமுக உதவிக்கே என்ற சிந்தனையை யாரும் மாற்றிக் கொள்ளக் கூடாது; அப்படி மாற்றி பிடிவாதம் காட்டினால் அது தற்கொலைக்கு சமமாகும்!

                                                                                ---

கேள்வி 4 : அமைச்சர் உதயநிதியின் ‘வடமாநிலத்தவர்கள் நமது வேலைவாய்ப்பை பறிக்கின்றனர்’ என்ற கருத்தை தேச ஒற்றுமைக்கு எதிரானது என்று கூறுகின்றனரே?

- வேலுசாமி, வியாசர்பாடி


பதில் 4 : நம் வீட்டுக் கதவை நாம் சாத்தினால் அது எப்படி தெருவார்களின் ஒற்றுமைக்குக் கேடாகும்! சபாஷ் உதயநிதி!! மேலும் உரத்த குரலில் கூறினாலும் - கூற உரிமை உண்டே! (“தாயும் பிள்ளையும் ஒன்றென்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு” என்பது பழமொழி, மறந்து விட்டதோ!

                                                                                ---

கேள்வி 5 : ஆளுநரின் அதிகார வரம்பு மீறலை முதலமைச்சர் கையாண்ட விதம்?

- ராஜலிங்கம், உத்திரமேரூர்

பதில் 5 : கடிதோச்சி மெல்லெறிந்தார்; எப்போதும் பொறுத்தவரான அவர் பூமியை ஆள்வார் என்பதை நிரூபித்துக் காட்டுகிறார்!

                                                                                   ---

கேள்வி 6 : தமிழ்நாடு செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் சமூக நீதி அரசியல் குறித்து அதிகம் பேச ஆரம்பித்துவிட்டன. இது சமூகத்தில் ஏற்பட்ட மாற்றமா? அல்லது உணர்வுகளை வைத்து காசு பார்க்கும் நோக்கமா?

- ஆறுமுகம், கோவை

பதில் 6 : இரண்டும்தான்; சில அப்படி, சில இப்படி! ஆனாலும் இது பேசாமல் விடப்பட முடியாததாக உள்ளது என்பதை  எவரே மறுக்க முடியும்?

                                                                                   ---

கேள்வி 7 : 9 வயது சிறுமியை துறவியாக்கி உள்ளனரே, இந்திய குழந்தைகள் நல வாரியம் என்ன செய்கிறது?

- சிவராமன், விழுப்புரம்

பதில் 7 : கொடுமை! கொடுமை!! குழந்தைப் பருவந்தாண்டி 18 வயதானால் முடிவெடுக்கும் அவரது சுதந்திரம் பறிபோக என்னாவது? குழந்தைகள் நல வாரியம், மனித உரிமை ஆணையம் - இவை பாய்ந்து நடவடிக்கை எடுத்துத் தடுக்க வேண்டாமா?

திருமண சம்மத வயது சட்டப்படி 18 வயது; இது அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது வாழ்க்கைப் பிரச்சினை அல்லவா? மத சுதந்திரமாகாது! குழந்தை மணம் தடுத்தல் போலவே இது!

                                                                              ---

கேள்வி 8 : இன்னும் 20 ஆண்டுகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கடுமையாக மக்கள் உழைக்கவேண்டும் என்று மோடி கூறியுள்ளாரே?

- மாரியப்பன், காஞ்சிபுரம்

பதில் 8 : சிரிப்புதான் வருகுதய்யோ!

                                                                         ---

கேள்வி 9 : விமானங்களில் அத்துமீறுபவர்கள் அனைவருமே பாஜக மற்றும் ஹிந்துத்துவ வெறியர்களாக இருப்பது ஏன்?

- செண்பகம், திருவள்ளூர்

பதில் 9 : காவி ராஜ்யம் - சுதந்திரமாக குற்றவாளிகள் தப்பும் ராஜ்யமாகிவிட்டது - இந்த இலட்சணத்தில் இந்த ஒட்டகங்கள் ஓணான்களைப் பார்த்து கேலி செய்வது விபரீத வேடிக்கை அல்லவா?

                                                                         ---

கேள்வி 10 : தலைநகரில் நள்ளிரவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்விற்குச் சென்ற மகளிர் ஆணையத் தலைவியையே காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முன்றுள்ளது எதைக் காட்டுகிறது?

- தாமரை கண்ணன், திருச்சி

பதில் 10 : சட்டம் - ஒழுங்கு தலைநகரில் ஒன்றிய அரசின் உள்துறை(Home Ministry)யின் பொறுப்பில் உள்ளது! அங்கே நடப்பதை  நமது காவி அரைவேக்காடு அண்ணாமலைகளுக்குச் சுட்டிக்காட்டுங்கள் - அப்படியாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போமா?


No comments:

Post a Comment