பதவியேற்ற நாள் முதலே தனது ஆர்.எஸ்.எஸ். புத்தியைக் காட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி பேசியது தான் கூடுதல் உணர்ச்சியைக் கிளப்பியது. தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளாக பிற்போக்கு அரசியலைச் செய்து கொண்டிருக்கிறது என்று திராவிட இயக்கங்களைக் குறிவைத்து, தன் பதவிக்குப் பொருந்தாமல் அரசியல் பேசியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதே சரி என்று பேசியது தமிழ்நாடெங்கும் கடும் கண்டனத்தைக் கிளப்பியது.
காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆள் பிடிக்கவும், பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் தன்னார்வலர்கள் மத்தியில் பேசிய ஆர்.என்,ரவி தெரிவித்த கருத்துகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், அதன் இறையாண் மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் ஆகும்.
"தமிழ்நாடு என்னும் உணர்வும், திராவிடம் என்னும் சிந்தனையும் இங்கே தொடர்ந்து ஊட்டப்பட்டிருப்ப தாலும், கடந்த அய்ம்பதாண் டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் இந்தக் கருத்தாக்கம் நிலைநாட்டப் பட்டுள்ளது.
அதனால் தான் அவர்கள் கூட்டாட்சி குறித்து வெளிப்படையாக அதிகப்படியாகப் பேசுகிறார்கள். இந்த மாநிலங்கள் எல்லாம் உருவாக்கப்படும் முன் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாரதம் இருப்பதை உணராமல் பேசுகிறார்கள்” என்று பேசியிருக்கிறார். கூட்டாட்சி குறித்துப் பேசுவதே ஆளுநருக்கு எரிகிறது. மாநில சுயாட்சி என்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
பாரதம் என்றேனும் ஒன்றாக இருந்ததுண்டா? பேரரசர்கள் ஆண்டபோதும் தமிழ்நாடு அவற்றுடன் இணைந்திருந்ததுண்டா? பண்பாட்டு அடிப்படையில் வடநாட்டுடன் தமிழ்நாடு இணைந்திருந்ததா? பல்லாயிரம் ஆண்டுகளாக திராவிடத்தின் வரலாறு சிந்து முதல் குமரி வரை பரவியிருக்கிறது. பாரதம் பேசும் ஆரிய வந்தேறிகளின் வரலாறு மூவாயிரம் ஆண்டுகள் தானே!
“மாநிலங்கள் என்பவை நிர்வாகக் காரணங்களுக்கும், பிராந்திய உணர்வுகளைச் சந்திக்கவும் தான்” என்று பேசியிருக்கிறார் ஆளுநர். (டைம்ஸ் ஆப் இந்தியா, ஜனவரி 5, 2023, சென்னைப் பதிப்பு )
“மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாக அல குகளே! மொழிவாரி மாநிலங்கள் கூடாது. இந்தியாவை 200 ஜன்பத்களாகப் பிரித்து, அதன் பன்முகத் தன்மையைக் குலைத்துவிட வேண்டும். இந்தியாவுக்கு ஹிந்துத்துவாதான் முகம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையைத் தானே தனது குரலில் பேசியிருக்கிறார் ஆர்.என்.ரவி.
இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம், "India, that is Bharat, shall be a Union of States." என்று இந்திய அரசமைப்பின் முதல் பிரிவு சொல்கிறதே, அதற்கு மாறானது தானே ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ரவியின் கருத்து. அரசமைப்புச் சட்ட ரீதியாகப் பதவி வகிக்க இனியும் அவருக்குத் தகுதி உண்டா?
அந்நியர்கள் வடநாட்டை ஆட்கொண்ட போதும், தமிழ்நாடு தான் தனித்து நின்றிருக்கிறது என்றும் பேசியிருக்கிறார். அவர் என்ன பொருளில் சொன்னாரோ, கிடக்கட்டும். ஆனால், வடநாடு - ஆரியப் பார்ப்பனியம் என்னும் அந்நியப் பண்பாட்டு ஆதிக்கத்தால் முற்றிலும் தன்னிலை இழந்து திரியும் போதும், இன்றும் அந்த அந்நிய ஆரிய ஆதிக்கத்தையும், பண்பாட்டுப் படையெடுப்பையும் எதிர்த்துக் களமாடும் பார்ப்பனிய எதிர்ப்புச் சிந்தனையான திராவிடமும், தமிழ்நாடும் தனித்தன்மையுடன் தான் இருக்கின்றன. அதனை எந்தக் கங்காணிகளாலும் அழித்துவிட முடியாது.
- சமா.இளவரசன்
No comments:
Post a Comment