"நமக்கு நாமே திட்டம்" - பொதுமக்களும் முன்வரவேண்டும் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

"நமக்கு நாமே திட்டம்" - பொதுமக்களும் முன்வரவேண்டும் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சென்னை,ஜன.1- "நமக்கு நாமே" திட்டத்தில் நடைபெறவுள்ள பணிகளில் பொதுமக்களும் நிதி வழங்க முன்வரவேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார். 

அதன் விவரம் வருமாறு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மேற் கொள்ள ஆய்வு செய்யப்பட்டு, ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் 416 திட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 

இதில் ரூ.15.27 கோடி அரசின் பங்களிப்பு, ரூ.19.97 கோடி பொதுமக்கள் பங்களிப்பு என ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் 372 திட்டப்பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் குளங்களை மேம்படுத்தும் 5 பணிகள், பூங்காக்கள், விளையாட்டுத்திடல்களை மேம்படுத்துதல் மற்றும் செடிகள் நடுதல் போன்ற 77 பணிகள், சென்னை பள்ளிகளின் கட்டடம் மற்றும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை மேம்படுத்தும் 118 பணிகள், சென்னை மாநகரை அழகுப்படுத்தும் 87 பணிகள், பொது கழிப்பிடங்களை மேம்படுத்தும் 27 பணிகள், மயான பூமிகளை மேம்படுத்தும் 6 பணிகள் மற்றும் மருத்துவமனைகள் சாலைகள், சாலை மய்யத்தடுப்பு மற்றும் நடைபாதை ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்ற 52 பணிகள் என மொத்தம் 372 திட்டப்பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.  நமக்கு நாமே திட்டத்துக்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் மீதமுள்ள ரூ.9.58 கோடியை பயன்படுத்தி தங்கள் பகுதிகளில் திட்டப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் செயல்படுத்த விரும்பும் திட்டப்பணி, நிதி பங்களிப்பு குறித்த தகவல்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் வட்டாரத் துணை ஆணையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment