ஈரோடு,ஜன.1- கவுந்தப்பாடி அருகே தனியார் பேருந்தும், சுற்றுலா வேனும் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவ தாவது:-
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்று முன்தினம் ஒரு சுற்றுலா வேனில் புறப்பட்டனர். வேனை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவர் ஓட்டினார். நேற்று (31.12.2022) காலை ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் சர்க்கரை மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிகண்டன் (26), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் மகன் ரகுபதி (வயது 30), ரகுபதி மகள் பிரியதர்ஷினி (வயது 4), ராஜாராம் மகன் சிவராமன் (வயது 27), சுரேஷ்குமார் மகன் விஜய் (வயது 21), விஜயகுமார் மகன் ஆனந்த் (வயது 23), பாஸ்கர் மகன் ஹரிபிரகாஷ் (வயது 22), செல்வம் மகன் சூர்யா (வயது 27) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பேருந்து மற்றும் சுற்றுலா வேனின் முன்புறம் சேதம் அடைந்தது. விபத்தில் காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment